Friends Tamil Chat

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

28th Feb 2014 - எச்சரிப்பின் பிரசங்கம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 28-ம் தேதி – வெள்ளிக்கிழமை
எச்சரிப்பின் பிரசங்கம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன். - (1 இராஜாக்கள் 22:14).

.

அமெரிக்க தேவ ஆலய ஆராதனையில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. ஜெபத்தோடு ஆலய ஆராதனை ஆரம்பமானது. தேவ செய்தியை கொடுக்கும்படி தேவ ஊழியர் பீட்டர் கார்ட்ரைட் என்பவர் பிரசங்க பீடத்தில் அமர்ந்திருந்தார். பிரசங்கித்திற்கு முன்பாக பாடி கொண்டிருந்த வேளையில் அந்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்ஸன் அவர்கள் ஆலயத்தின் நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

.

இதை கண்ட ஆலய போதகர் மெதுவாக பிரசங்கியாரிடம் சென்று, 'ஜனாதிபதி அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர் சங்கடப்படும்படி எதையும் சொல்லிவிடாதபடி பார்த்து கொள்ளுங்கள்' என்று எச்சரித்து சென்றார், அன்று மனம் திரும்புதலை குறித்து பேசிய பிரசங்கியார், 'எல்லாரும் மனம் திரும்புங்கள், ஜனாதிபதியாயிருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி, மனம் திரும்பாத மனிதனுக்கு அழிவு வருவது நிச்சயம்' என்று எச்சரித்தார். ஆலய போதகர் நடுநடுங்கி போனார். பிரசங்கத்தை கேட்ட ஜனாதிபதி, ஆராதனை முடிந்ததும், கார்ட்ரைட்டை தேடி சென்று, அவர் மூலம் கர்த்தர் கொடுத்த செய்திக்காக நன்றி கூறினார். தேவனுடைய சத்தியத்தை சத்தியமாகவே தெளிவாக தைரியமாக கார்ட்ரைட் பேசியதன் மூலம் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தப்பட்டார்.

.

புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்திய யோவானஸ்நானகனின் வனாந்திர பிரசங்கம் அநேகரை எச்சரித்து மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தியது. பதவிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஏன் தேச தலைவர்களையும் யோவான் ஸ்நானகனின் பிரசங்கம் அசைத்தது (லூக்காக 3:6-14). பாவத்தை கண்டித்து உணர்த்தும் பிரசங்கத்தில் மனுஷர்களுக்காக சிறிதும் முகதாட்சண்யம் பாராதவராய் தேவனுக்கேற்கும் விதத்தில் தெளிவாக பிரசங்கித்தார்.

.

கர்த்தராகிய இயேசுவும் எருசலேமின் தேவாலயத்தில் காணப்பட்ட அருவருப்புகளை கண்டு மென்மையாக அல்ல, சவுக்கை கையில் எடுத்து கொண்டு வேத வசனத்தின் உதவியோடு கடுமையாக சாடி பிரசங்கித்தார்.

.

இன்றைய நாட்களில் எச்சரிப்பின் செய்திகளை நம் திருச்சபைகளில் கேட்பது மிக அரிதாகி விட்டது. அப்படியே ஒரு போதகர் வேத வசனத்தை வைத்து எச்சரித்து பேசினால், என்னை மனதில் வைத்து தான் பேசுகிறார் என்று முகத்தை தூக்கி கொண்டு செல்லும் விசுவாசிகள் ஏராளம் சபைகளில் உண்டு.

.

ஒரு குறிப்பிட்ட சபையில் பிரசங்கி பீடத்தில் 'சுருக்கமாக பிரசங்கிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள்' என்று எழுதி வைத்திருந்தார்களாம். வேத வசனத்தை தூரமாக்கி, நடனத்தோடு பாடல்கள், ஆராதனைகள், வெளிநாடு சென்று வந்த சாட்சிகள் என இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேவ வார்த்தைகளுக்கு இந்த நாட்களில் கொடுக்கப்படுவது இல்லை.

.

அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன் ஊழியர் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று'. - (2 தீமோத்தேயு 4:3-5) என்று கூறி எச்சரித்தார்.

.

லியானோர்ட் ரேவன்ஹில் என்ற ஊழியர் தன்னுடைய புத்தகத்தில் எழுதும்போது, 'என்றும் இல்லாத அளவு இன்றைய நாட்களில் எலியா பவுல், யோவான்ஸ்நானகன் போன்ற நியாயத்தீர்ப்பை எச்சரித்து பேச கூடிய போதகர்களும், ஊழியர்களும் மிக தேவை' என எழுதியுள்ளார். ஏனெனனில் பாவம் நிறைந்த உலகில், திருச்சபையும் அதன் போக்கிலேயே செல்கிறது. ஆகவே இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் வாழும் நமக்கு தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்போம். நம் சபைகளில் எச்சரிப்பின் வார்த்தைகள் முழங்கத்தக்கதாக ஜெபிப்போம். ஆமென் அல்லேலூயா!

.

கற்று தந்து நடத்துகிறீர்

கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்

ஆவியானவரே தூய ஆவியானவரே

..

போதிக்கின்றீர் சத்தியங்களை

நினைவூட்டுகின்றீர் வசனங்களை

அனைத்தையும் சொல்லி தருகின்ற

ஆலோசகர் நீர் தானையா

.

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, விசுவாசிகளை வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்து உணர்த்தும் போதகர்களை ஏராளமாய் எழுப்பும் தகப்பனே. பவுலைப்போலவும், யோவான் ஸ்நானகனை போலவும் தைரியமாக எச்சரித்து உணர்த்த அவர்களுக்கு பெலத்தை தாரும். உம்முடைய வார்த்தைகளுக்கு முழு முக்கியத்துவத்தை கொடுக்கிறவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக.

.

சகோதரி சித்ரா தேவிக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, தன்னுடைய குடும்பத்தில் தான் மாத்திரமே புறமதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டிருப்பதால், முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்களுக்கு ஒரு இரட்சிக்கப்பட்ட மகனை துணைவராக கிடைக்க ஜெபிக்கிறோம். அதற்காக கிருபைகளை நீரே சகோதரிக்கு கொடுப்பீராக. அவர்களுடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் யோகநாதன் மகள் கேசியாகவிற்காக காலேஜில் ரேகிங் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, காலேஜில் ரேகிங் நிறுத்தப்படும் என்ற அறிவிற்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய சகோதரியின் மகளுடைய இரத்தத்தில் குறைவு காணப்படுகிறபடியால், தேவன் தாமே தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி மோனிக்கா புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள், காலேஜில் படிக்கும்போது ஞானஸ்நானமும் பெற்று கர்த்தருக்குள் வளர்ந்து வருகிற இந்த சகோதரியின் பெற்றோர் இன்னும் இரட்சிக்கப்படாததால், அவர்கள் சகோதரிக்கு புறமதத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்டபடியால், என்ன செய்வது என்று தவிக்கிற சகோதரிக்கு ஆறுதலை தாரும். ம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே. அந்த சகோதரனையும் இரட்சிப்பீராக. ஜூன் மாதம் நடக்க இருக்கிற திருமணத்திற்குள்ளாக அந்த மகனும் இரட்சிக்கப்படவும், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கட்டப்படவும் தேவன் கிருபை செய்வீராக.

.

சகோதரி திவ்யா பாலா அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டவர்கள், அவர்களின் தோழி சங்கீதாவிற்கு 31 வயதாகியும் இன்னும் திருமணம் அமையாததால், தேவன் தாமே இரங்கி ஏற்றத்துணையை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். மனம் நொந்து காணப்படுகிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு நல்ல இரட்சிக்கப்பட்ட மகனை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய நண்பர் சசிகுமார் அவர்களுக்கு ஒன்றறை வருடங்களாக எந்த சரியான வேலையும் இல்லாமல் இருக்கிறபடியால்,தேவன் தாமே அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவும், அவருடைய ஆத்தும இரட்சிப்பிற்காகவும், கர்;த்தரே தேவன் என்பதை அவர் அறிந்துக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரி பால் இரத்தினம் அவர்களின் தாயார் வயிற்றில் வீக்கம் கண்டு, உதிரப் போக்கும் அதிகமாக இருப்பதால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நல்ல சுகத்தை கட்டளையிடுவீராக. உதிரப் போக்கு நிற்கவும், வயிற்று வீக்கம் குறையவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.