Friends Tamil Chat

வியாழன், 13 பிப்ரவரி, 2014

13th Feb 2014 - உயர பறக்கும் அனுபவம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 13-ம் தேதி – வியாழக்கிழமை
உயர பறக்கும் அனுபவம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. - (1யோவான் 2:15).

.

தங்கள் வழக்கம் போல காட்டு வாத்துக்கள் குளிர் காலத்தில் தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஒரு V வடிவிலே பறப்பதை கீழே இருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அவைகள் இருந்தன.

.

அந்த வாத்துகளோடு பறந்து கொண்டிருந்த சேனி என்ற வாத்து கீழே பார்த்தது. அப்பொழுது வாத்துக்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை கண்டது. அங்கு அநேக வாத்துக்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் சோளத்தை ஆவலோடு பொறுக்கி தின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன், அவைகளோடு தானும் சென்று உண்ண வேண்டும் என்கிற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. அந்த எண்ணம் வந்த உடன், அது மற்ற வாத்துக்கள் சொல்வது ஒன்றும் கேட்காமல், ஒரு டைவ் அடித்து, கீழே மற்ற வாத்துக்களுடன் சேர்ந்து கொண்டது. அவைகளோடு சேர்ந்து, சோளத்தையும், மற்ற தானியங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. அது நினைத்தது, 'திரும்ப என் கூட்ட வாத்துக்கள் வரும்போது, அவைகளோடு நான் சேர்ந்து கொள்வேன்' என்று.

.

கொஞ்ச மாதங்கள் கழித்து, அந்த கூட்ட வாத்துக்கள், மேற்கு நோக்கி வர ஆரம்பித்தன. கீழே இருந்த சேனி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி, பறக்க ஆரம்பித்தது. ஆனால் அது அங்கு சாப்பிட்டு சாப்பிட்டு, எடை கூடி, அதனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்க முடியவில்லை. அது திரும்ப திரும்ப முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. அதன் கூட்டத்தில் இருந்த பறவைகள், அதை தாண்டி பறந்து சென்று விட்டன. சேனி, 'நான் மறுபடியும் இவர்கள் வரும்போது எப்படியாவது அவர்களோடு சேர்ந்து விடுவேன்' என்று எண்ணி கொண்டது.

.

அடுத்த முறையும் வந்தது. சேனி அவர்களோடு பறக்க ஆசைப்பட்டது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை, காரணம் அதனுடைய எடையும், பறக்காமலேயே இருந்தபடியால் அதனுடைய சிறகுகள் சக்தியையும் இழந்து விட்டன. அதனுடைய தோழ வாத்துக்கள் ஒவ்வொரு முறையும் சேனியை அழைத்தபடி பறந்து கொண்டிருந்தன. ஆனால் சேனியால் திரும்பவும் பறக்கவே முடியவில்லை.

.

மாதங்கள் ஆக, ஆக தோழ வாத்துக்கள் கூப்பிட்டாலும், அது அதை கவனிக்காமற் போக ஆரம்பித்தது. அது தான் ஒரு முறை உயர பறந்த வாத்து என்பதை மறந்து, ஒரு பண்ணை வாத்தாகவே மாறி விட்டது.

.

நாமும் கூட உயர பறப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனோடு உறவாடும்படியாக, அவர் வரும்போது அவரோடு மறுரூபமடைந்து, பறப்பவர்களாக மாறும்படியாகவே இந்த உலகத்தில் இருக்கும்போது அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்போது நம் கவனம் உலக காரியங்களில் ஈடுபாடு கொள்கிறதோ, அப்போது, நாம் நம் தரிசனத்தை இழந்தவர்களாக, அவைகளிலேயே சிக்கி கொள்கிறோம். மீண்டும் நாம் வரவேண்டும் என்று ஆசித்தாலும் வரமுடியாதபடி, அவை நம்மை இழுக்க ஆரம்பிக்கின்றன. உலக பாரங்களும், ஆசை இச்சைகளும் நம்மை மேலே பறக்க விடாதபடி தடை செய்து விடுகின்றன.

.

லோத்தின் மனைவி பின்னால் திரும்பி பார்க்காதே என்று எச்சரிக்கப்பட்டும், உலக இச்சைகளும், உலக இன்பங்களும் அவளை திரும்பி பார்க்க வைத்து விடுகின்றன. கர்த்தருக்கு பயந்த, கர்த்தரால் கைபிடித்து, அழிவிற்கு தப்ப வைக்கப்பட்ட குடும்பம், உலக ஆசையால், நினைத்து பார்க்கவே கூசும் அளவிற்கு பயங்கர பாவ வாழ்க்கைக்குள் கடந்து செல்ல வேண்டி வந்தது. அந்த மனைவி திரும்பி பார்க்காமல் இருந்திருந்தால், ஒரு அருமையான குடும்பமாக, ஒரு எடுத்துகாட்டான குடும்பமாக லோத்தின் குடும்பம் வேதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் உலகத்தின் மேல் வைத்த ஆசை அந்த குடும்பத்தையே நாசமடைய வைத்தது.

.

'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. அவைகளில் அன்பு வைத்தால் அந்த வாத்து எப்படி தான் ஆசைபட்டாலும் பறக்கவே முடியாமற் போயிற்றோ அந்த நிலை ஏற்படலாம். 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது' (2பேதுரு 3:7) என்று வேதம் கூறுகிறது. ஆகையால் ஒரு நாள் வானமும் பூமியும் அழிந்து போகும், இவை என்றும் நிலைத்திருப்பதில்லை. அதன் மேல் பற்று வைத்திருப்போர் நிலை என்னவாகும் என்பதை நாம் அறிவோம். கர்த்தர் மேல் நாம் பற்று வைப்போம், உலகத்தின் மேலும், அதின் ஆசை இச்சைகள் மேலும் நம் பற்றை வைக்காதபடி, கர்த்தர் வரும்போது நாம் அவரோடு பறக்கும்படியாக, எந்த உலக பாரங்களும், எந்த பற்றும் நம்மை தடை செய்யாதபடி நம்மை காத்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

சூழ்ந்து நிற்கும் சுமைகள்

நெருங்கி பற்றும் பாரங்கள்

உதறி தள்ளிவிட்டு

ஓடுவோம் உறுதியுடன்

..

கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன்செல்லுவோம்

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் என்ற எச்சரிப்பின் சத்தத்திற்கு நாங்கள் செவி கொடுக்கிறவர்களாக உலக இச்சைகளை வெறுக்க கிருபை தாரும் தகப்பனே. இந்த உலகம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருப்தால், நாங்கள் அதிலிருந்து தப்பும்படியாக, உயர பறப்பவர்களாக, உம்மோடு உறவு கொண்டு, கர்த்தர் வரும்போது அவரோடு பறந்து செல்லும்படியாக எங்கள் வாழ்க்கையில் உலகத்திற்கு இடம் கொடாதவர்களாக எங்களை மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

அன்பின் சகோதர சகோதரிகளே, இந்த ஜெபக்குறிப்புகளுக்காக அநேகர் ஜெபிக்கிறபடியால், ஒரு சிலர் கர்த்தர் கொடுத்த பதிலை எங்களுக்கு தெரியப்படுத்தினால் நாங்கள் கர்த்தரை துதிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று எழுதியிருக்கிறபடியால், அனுதின மன்னா வாசக குழுவாக ஜெபித்த ஜெபங்களுக்கு தேவன் செய்த நன்மைகளை எங்களுக்கு தெரியப்படுத்தினால், அதை மற்றவர்களுக்கும் தெரிவித்து, கர்த்தரை துதிப்பதற்கு ஏதுவாயிருக்கும். ஆகவே தேவன் செய்த நன்மைகளை திருப்பி எழுத மறவாதீர்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.

.
எங்கள் அன்பின் நேச தகப்பனே, நீர் நல்லவர், வல்லவர், போதுமானவர். எங்கள் ஜெபத்தை கேட்பவர். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறபடி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்ட நாங்கள் உமது கிருபையை எதிர்ப்பார்த்து எங்கள் ஜெப விண்ணப்பங்களை உமது சமுகத்தில் வைக்கிறோம் தகப்பனே,
.
சகோதரன் கிறிஸ்டோபர் அவர்களின் மகன் அபிஷேக் பிடிஎஸ் படித்துக் கொண்டிருந்தாலும், ஒரு அசுத்த ஆவியினால் அலைகழிக்கப்பட்டு, கல்லூரிக்கு சரியாக போகாமல் இருப்பதால், அபிஷேக்கை பிடித்து துன்பப்படுத்துகிற அந்த அசுத்த ஆவியை நாங்கள் அனைவரும் ஒருமனமாக சேர்ந்து, இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து அப்புறப்படுத்துகிறோம். இனி அவனுக்குள் பிரவேசியாதிருப்பாயாக என்று கட்டளை கொடுக்கிறோம். அந்த மகனை உமது இரத்தக்கோட்டைக்குள் வைக்கிறோம். எந்த அந்தகார சக்தியும் மகனை தொடாதபடி காத்துக்கொள்ளும். வாலிப வயதில் உம்மைப் பிடித்துக் கொள்ளவும், உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யும். அவன் காலேஜூக்கு போகாததால் அந்த காலேஜ் அவனை வெளியாக்காதபடி மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்க கிருபை செய்வீராக. மகனை முற்றிலும் விடுதலையாக்கும்படி ஜெபிக்கிறோம்.
.
அபுதாபியில் இருக்கும் சகோதரன் ஜான் ஜோசப் அவர்களின் குடும்பம் எந்த கஷ்ட நிலையிலும் ஒன்றாக சேர்ந்து வாழவும், அன்பின் ஐக்கியத்தில் என்றும் நிலைத்திருக்கவும், அவர்களுடைய பிள்ளைகளையும் அவர்களின் படிப்பையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சிறுவயதிலிருந்தே கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தில் வளரவும் கிருபை செய்வீராக. சகோதரன் எழுதியிருக்கிற பரிட்சையிலும் நல்ல வெற்றியைக் காண கிருபை செய்யும்.
.
சகோதரன் ஜெபஸ்டின் அவர்களின் பெற்றோருக்காகவும், அவருடைய எதிர்கால வாழ்விற்காகவும் ஜெபிக்கிறோம். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் கூடக்கொடுக்கப்படும் என்று உலக ஆசீர்வாதங்களை குறித்து தேவன் சொல்லியிருக்கிறபடியால், உம்முடைய இராஜ்யத்திற்குரியவைகளை முதலாவது தேடி, பின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். தேவைகளை அனைத்தையும் சந்திப்பீராக.
.

சகோதரன் சுபாஷ் அவர்களின் புதிய வேலைக்காக ஜெபிக்கிறோம். நல்ல ஞானத்தோடு வேலை செய்யவும், மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைத்து, உண்மையும் உத்தமுமாக வேலை செய்து, நற்சாட்சி பெறவும் கிருபை செய்யும். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.