Friends Tamil Chat

வெள்ளி, 8 மே, 2015

08 மே 2015 - விசுவாச வார்த்தை - பாகம் இரண்டு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 08-ம் தேதி - வெள்ளிக்கிழமை
விசுவாச வார்த்தை - பாகம் இரண்டு
**************

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். - (எண்ணாகமம் 13:30).

.

நேற்றைய தினத்தில் கானான் தேசத்தை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் பத்து பேர் அவிசுவாச வார்த்தைகளை பேசினதினால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த நாளில் காண்போம்.

.

ஆனால் அந்த தேசத்தை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் இரண்டு பேர் மாத்திரம் கர்த்தர் சொன்ன வாக்குதத்தத்தை மறவாமல், அவர் நிச்சயமாக அவர்களை கானான் தேசத்தில் கொண்டு போய் சேர்ப்பார் என்று விசுவாசித்தவர்களாக, அவருடைய வாக்குதத்தத்தை உறுதியாக பற்றி கொண்டார்கள். 'தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்' - (எண்ணாகமம் 14:6-9).

.

இந்த இரண்டு பேரும் அதே மோசேயின் கீழ் எகிப்து தேசத்திலிருந்து கர்த்தர் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டவர்கள். கர்த்தர் அவர்களை கானான் தேசத்திற்கு கொண்டு செல்வார் என்ற விசுவாசத்தோடு அந்த தேசத்தை சுற்றி பார்க்க சென்றவர்கள். அவர்களின் விசுவாசம் அற்புதமாய் இருந்தது. அவர்கள் மற்ற பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகளை கேட்டபோது, பதறி போய், நீங்கள் ஏன் இப்படி சொல்லி மற்றவர்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை, நாம் அந்த தேசத்தில் காலடி வைத்த உடனே அவர்களை காத்த நிழல் அவர்களை விட்டு விலகி போயிற்று, நாம் பயப்பட வேண்டியதே இல்லை என்று அவர்கள் இஸ்ரவேல் மக்களை திடப்படுத்தி, உற்சாகப்படுத்தினாலும், அநேகராகிய பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகளே மக்களின் இருதயத்தில் கிரியை செய்தது. அவர்கள் யோசுவா, காலேபின் வார்த்தைகளை நம்பவில்லை.

.

நாம் பேசுகிற வார்த்தைகள் அவிசுவாச வார்த்தைகளாய் இருந்தால், அவை நமக்கு மட்டுமல்ல, நம்மோடு இருப்பவர்களின் விசுவாசத்தையும் கெடுக்கிறதாக இருக்கிறது. அநேகரை நாம் வழிவிலக செய்கிறவர்களாக காணப்படுவோம். 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்' (மாற்கு 9:42) என்று இயேசு கிறிஸ்து கடினமான வார்த்தைகளை மற்றவர்களை விசுவாசத்திலிருந்து விலக செய்யப்பண்ணுகிறவர்களை குறித்து எச்சரித்தார். பாருங்கள் ஒரு தலைமுறை ஜனத்தையே அந்த பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகள் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள் செல்ல விடாமல் பண்ணிற்று!

.

பெற்றோரின் அவிசுவாசத்தால் கர்த்தரின் வாக்குதத்தத்தை விசுவாசியாத அவர்களின் பிள்ளைகள் நாற்பது நாள் கானான் தேசத்தை ஒற்றர்கள் சுற்றி வந்த நாட்களுக்கு ஒப்பாய் நாற்பது வருடங்கள் அந்த வனாந்தரத்தில் சுற்றி திரிந்து, அவிசுவாசிகளாய் இருந்த பெற்றோர் மரித்தப்பின் பிள்ளைகள் கானானுக்குள் பிரவேசித்தார்கள். அவிசுவாசத்தின் பலன் எத்தனை கொடியது பாருங்கள்! மட்டுமல்ல, 'அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்'. ஆம் அந்த பத்து பேரையும் கர்த்தர் வாதைகளினால் மரிக்க செய்தார்.

.

தேவன் தம் ஜனத்திற்கு அவர்கள் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பதற்காக அநேக அருமையான வாக்குதத்தங்களை கொடுத்து, நாம் அதை விசுவாசித்து பெற்று கொள்ள வேண்டும் என்று கொடுத்திருக்க, நாம் அதை விசுவாசியாதபோது, தேவனிடத்திலிருந்து கோபத்தை கொண்டு வருகிறதாயிருக்கிறது. விசுவாசமாய் பேசின யோசுவா, காலேப் மாத்திரம் அந்த தலைமுறையினரில் கானானுக்குள் பிரவேசித்தார்கள்.

.

விசுவாசித்த காலேபை குறித்து, 'என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்' என்று தேவன் ஆசீர்வதித்தார். இந்த காலேப் இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவரல்ல, அவர் கேனாசியர்களில் ஒருவர். ஆனால் அவர் கர்த்தர் பேரில் வைத்திருந்த விசுவாசத்தால், அவர் யூதா கோத்திரத்தில் கானானை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் ஒருவரானார். அவருடைய விசுவாசமும் அவர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றி வந்தபடியினாலும், (யோசுவா 14:14) அவர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டார். யோசுவாவையோ அவர்களை நடத்தி செல்லும் தலைவனாக ஏற்படுத்தி, அவரே அந்த தேசத்திற்குள் அவர்களை நடத்தி சென்றார். அல்லேலூயா!

.

இவை எல்லாம் மோசேயின் மூலமாய் கேட்டபோது, இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். ஐயோ அநியாயமாய் அந்த பத்துபேர் சொன்ன வார்த்தைகளை நம்பி மோசம் போனோமே, என்று புலம்பினார்கள். ஆனால் அதினால் என்ன பயன்? அவர்கள் வாக்குதத்தம் செய்த கானானுக்குள் நுழைய முடியாமற்போனது போனதே!

.

ஒருவேளை அநேகர் சேர்ந்து முடியாது என்று சொல்லும்போது நம்முடைய இருதயம் அதை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு அநேகர் இந்த வியாதி உன்னை விட்டு நீங்கவே முடியாது என்று கூறலாம், அல்லது இந்த வேலை உனக்கு கிடைக்க வழியே இல்லை என்று கூறலாம், அல்லது இப்பேற்பட்ட பாவியான உன்னை கர்த்தர் ஏற்று கொள்ளவே முடியாது என்ற கூறலாம், அல்லது உன்னால் இந்த காரியத்தை செய்யவே முடியாது என்று கூறலாம். ஆனால் உங்களை அழைத்த தேவன் மேல் நீங்கள் மாறாத விசுவாசம் வைத்திருப்பீர்களானால், யார் வந்து என்ன கூற்றை கூறினாலும், அதை உங்கள் மனம் ஏற்காது. ஏற்க விடக்கூடாது. அவிசுவாச வார்த்தைகளை நம்பாதிருங்கள். அதற்கு செவி கொடுத்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதிருங்கள். அப்படி செய்யும் பட்சத்தில் தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கிற நன்மையான காரியங்களை நாம் பெற்று கொள்ள முடியாமற் போக நேரிடலாம். பின்னர் துக்கப்பட்டு பிரயோஜனம் ஒன்றுமிருக்காது!

.

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் (சங்கீதம் 125:1) என்ற வசனத்தின்படி அவர்களின் இருதயம் கர்த்தரையே நம்பி இருப்பதால் என்ன அவிசுவாச வார்த்தைகளை கேட்க நேர்ந்தாலும் அசையாமல், என்றென்றும் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தை போல உறுதியாக கர்த்தர் மேல் தங்கள் விசுவாசத்தை வைத்தவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அசைக்க முடியாத விசுவாசத்தை நாம் தேவன் பேரில் வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவரின் விசுவாசத்தையும் வர்த்திக்க செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

உமக்கு பிரியமானதை பேச

எனக்கு கற்று தாரும் தெய்வமே

நீரே என் தேவன்

உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்

செவ்வையான வழியிலே நடத்த வேண்டுமே

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே

தேற்றும் தெய்வமே துணையாளரே

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, விசுவாச வார்த்தைகளை பேசின யோசுவாவும் காலேபும் கானானுக்குள் பிரவேசித்தது போல நாங்களும் எந்த நாளும் விசுவாச வார்த்தைகளையே பேச எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறபடியால் நல்ல வார்த்தைகளையே பேசி நன்மையானவைகளை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 7 மே, 2015

07 மே 2015 - விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 07-ம் தேதி - வியாழக்கிழமை
விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று
...............

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். - (எண்ணாகமம் 13:30).

.

மோசே இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சுதந்தரிப்பதற்கு முன், 'தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்' என்று சொல்லி, கோத்திரத்திற்கு ஒருவராக 12 பேரை கானான் தேசத்தை பார்த்து வரும்படி அனுப்புகிறார்.

.

அந்த பன்னிரண்டு பேரும் நாற்பது நாட்கள் அந்த தேசத்தை சுற்றி பார்த்து விட்டு, ஒரே குலையுள்ள திராட்ச கொடியை அறுத்து, அதை ஒரு தடியிலே கட்டி, மோசேயிடம் வந்து தங்கள் அறிக்கையை சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லா ஜனத்திற்கும் முன்பாக பத்து பேர் தங்கள் அறிக்கையை இவ்விதமாய் சொன்னார்கள், 'மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்'. அவர்கள் அந்த தேசத்தை பாலும் தேனும் ஓடுகிற நாடாக கண்டார்கள். தேவன் அவர்களுக்கு அந்த அருமையான தேசத்தை கொடுப்பேன் என்று வாக்குதத்தம் செய்தபடியே அந்த தேசம் மிகவும் அருமையாக இருப்பதை கண்டார்கள். அதினால் தான் அதன் ஒரு குலையுள்ள திராட்ச கொடியை அவர்கள் கைகளினால் தூக்கி வர முடியவில்லை. அதை ஒரு தடியில் கட்டி இரண்டு பேராக தூக்கி கொண்டு வந்தார்கள்.

.

ஆனால் அந்த பத்து பேருக்கும் தேவன் செய்த மற்ற அற்புதங்களும், தங்களை எவ்விதமாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணினார் என்பதும் சீக்கிரம் மறந்து போய் விட்டது. அவர்களுடைய கண்களுக்கு முன் அந்த தேசத்தில் வாழும் மக்கள், அங்குள்ள பெரிய பெரிய கனிகளை சாப்பிட்டு, ராட்சதர்களை போலவே மாறிவிட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். ஆகவே தான், 'ஆனாலும், அந்த தேசத்தில் வாழுகிற ஜனங்கள் பலவான்கள், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்று அவிசுவாச வார்த்தைகளை எல்லா ஜனத்திற்கு முன்பும் சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்களுடைய பார்வைக்குத்தான் இவர்கள் வெட்டுக்கிளிகளை போல இருந்தார்கள், அந்த ஜனத்தின் பார்வைக்கும் அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்? கதைகளை கட்டி, ஜனத்தின் மனதை துவள செய்தார்கள்.

.

அத்தனை காலம், நாம் அந்த தேசத்தை போய் சுதந்தரித்து, இந்த வனாந்திர வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்த மக்கள், இந்த பத்து பேரின் அறிக்கையை கேட்டு, இரவு முழுவதும் அழுதார்கள். கர்த்தர் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் மறந்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து, நாங்கள் எகிப்திலேயே செத்து போயிருந்தால் நலமாயிருக்குமே என்று தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்தி கொண்டு, எகிப்துக்கு திரும்பி போவோம் என்று கூறி கொண்டார்கள். பிரச்சனைகளை பார்த்து, இத்தனை நாள் அதிசயமாய் நடத்தி வந்த கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்ததால் என்ன நடந்தது தெரியுமா? கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்து, அல்லது அதை பெரியதாக நினைக்காமல், ஏதோ பத்து பேர் சொன்ன அறிக்கையை நம்பி, கர்த்தருக்கு விரோதமாக வார்த்தைகளை பேசி, நாங்கள் எகிப்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று சொல்லி தேவனை கோபப்படுத்தின அவர்களுக்கு விரோதமாக தேவ கோபம் எழும்பியது. 'கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்' அந்த இடத்தில் மோசே தேவனிடம், அவரையும், தேவனையும் குறை சொல்லிய மக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறார். ஒரு வேளை நாமாயிருந்தால், ஆம் ஆண்டவரே, இந்த ஜனம் எப்போதும் முறுமுறுக்கிற ஜனம், அழித்து போட்டு விடும், என்று அவரிடம் கூறியிருப்போம். ஆனால் மோசே அந்த இடத்தில் ஒரு அருமையான ஜெபத்தை, ஜனம் அழியாதபடிக்கு திறப்பில் நின்று, தன்னை குறைகூறின ஜனத்திற்காக, தேவனுடைய வழிநடத்துதலை மறந்த ஜனத்திற்காக தேவனிடம் மன்றாடினார். அந்த அழகான ஜெபத்தை எண்ணாகமம் 14: 13-19 வரை உள்ள வசனத்தில் காணலாம்.

.

ஆம், நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிற தகப்பனை போன்ற போதகர்கள் இருப்பதால்தான் நாம் குறைகளை சொல்லி, ஆலயத்தையும், போதகர்களையும், ஏன் சில சமயம் நம்மை இரட்சித்து, நம்மை அருமையாய் வழிநடத்தி வரும் கர்த்தரையும் குறை சொன்னாலும், தேவன் கிருபையாய் நம்மை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தகப்பனை போன்ற தேவ மனிதர்களை நமக்கு போதகர்களாக கிடைக்கப்பெற்ற நாம் எத்தனை பாக்கியவான்கள்! அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.

.

கர்த்தர் மோசேயின் ஜெபத்தினால், 'உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்' என்று கூறி முறுமுறுத்த ஜனத்திற்கு தண்டனை கொடுத்து, ஆனால் அந்த ஜனத்தை அழிக்காமல் விட்டு விடுகிறார். அதன்படியே தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்த அவர்கள் ஒருவரும் கானான் தேசத்தை சுதந்தரிக்கவில்லை! எத்தனை பரிதாபம்! பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை குறித்து கேள்விப்பட்டார்களே ஒழிய, அவர்கள் அதில் கால் எடுத்து வைக்கவில்லை. அந்த தேசத்தின் கனியை புசிக்கவில்லை, அந்த தேசத்தின் நன்மையை அனுபவிக்கவில்லை. வனாந்திரத்திலேயே மரித்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

.

ஒருவேளை நாமும் கூட தேவன் நமக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்தவர்களாக, நமக்கு ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும்போது, அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்காமல், அவருக்கு விரோமாக முறுமுறுக்கும்போது, தேவன் நமக்கு செய்ய இருந்த, வாக்குதத்தம் செய்த காரியங்களை நாம் அனுபவிக்காமல் போய் விட நேரிடும். நாம் முறுமுறுக்கிறவை எத்தனை முறை என்று கூட தேவன் எண்ணுகிறவராயிருக்கிறார். பாருங்கள் இஸ்ரவேலர் என்னை பத்துமுறை பரிட்சை பார்த்தார்கள் என்று தேவன் கூறுவதை! தேவன் நம்மேல் கோபம் கொண்டு விடாதபடி, நம் வார்த்தைகள் இருக்கட்டும்! நாம் சொல்லும் வார்த்தைகளின்படியே நமக்கு தேவன் செய்யக்கூடும். ஆகவே நாம் கோபத்திலும், விரக்தியிலும், மனம் வெறுத்து பேசும் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையுள்ளவைகளாக இருக்க வேண்டும். தேவன் நமக்கு பாராட்டுகிற கிருபைகளை நாம் நினைத்தவர்களாக, இதுவரை நடத்தினவர் இன்னும் நடத்த வல்லவர் என்று அவர் மேல் நம் பாரத்தை வைத்து, எந்த காரியத்திலும் முறுமுறுக்காமல், அவரை கோபமூட்டும் வார்த்தைகளை பேசாமல், நம்மை காத்து கொள்வோம். கர்த்தர் நம்முடைய வார்த்தைகளை கொண்டே நம்மை நியாயம் தீர்த்துவிடாதபடி, ஜாக்கிரதையாக பேசுவோம். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்' (நீதிமொழிகள் 18:21) என்ற வார்த்தையின்படி, நாம் மரணத்தை தெரிந்து கொள்ளாதபடி ஜீவனை தெரிந்து கொள்ளத்தக்கதாக நம் வார்த்தைகள் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!

.

முறுமுறுக்காமல், வாதாடாமல்

அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

.
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாயின் வார்த்தைகளை குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க எங்களுக்கு உணர்த்தியருளும். எதை குறித்தும் முறுமுறுக்காதபடி, தேவன் எங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானானுக்குள் செல்ல கூடாதபடி அவர்களின் வார்த்தைகள் தடை செய்தது போல நாங்கள் பரம கானான் செல்லக்கூடாதபடி எங்கள் வார்த்தைகள் தடை செய்யாதபடிக்கு எங்கள் வார்த்தைகளை காத்து கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 6 மே, 2015

06 மே 2015 - உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 06-ம் தேதி - புதன் கிழமை
உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி
.****************.

'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. - (எசேக்கியேல் 14:14).

.

இந்த அதிகாரத்தில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிச மூலம் 'மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி' பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய், துஷ்ட மிருகங்கள் ஆகிய நான்கு தீங்குகளை அந்த தேசத்தின் மேல் வரப்பண்ணுவேன்' என்று கூறுகிறார். 'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்' என்று பார்க்கிறோம்.

.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் மங்கின குதிரை தோன்றியதை நாம் எல்லோரும் தொலைக்காட்சியின் மூலம் பார்த்தோம். வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆறாம் அதிகாரம் 8-ம் வசனத்தின் முத்திரை உடைக்கப்பட்டு, மங்கின குதிரை வெளிப்படுகிறது. 'நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது' (வெளிப்படுத்தின விசேஷம் 6:8). பாருங்கள், இந்த இடத்திலும், பஞ்சம், பட்டயம், சாவு, துஷ்டமிருகங்களினால் கொலை செய்யப்படுவதை காண்கிறோம்.

.

இந்த தீங்குகள் நேரிடும்போது, நோவா. தானியேல், யோபு போன்ற பழைய ஏற்பாட்டு பக்தர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது ஏன் அவர்கள் பெயர்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஏன் அவர்கள் மாத்திரம் தங்கள் ஆத்துமாக்களை தப்புவிப்பார்கள்?

.

நோவா: நோவா உலகத்தின் மேல் ஜெயம் கொண்டவராக காணப்பட்டார். எத்தனையோ பேர் அவரிடம் மழையா பெய்ய போகிறது? என்று அவரை கேலி பண்ணினாலும், பேழையை கட்டி அவரும், அவருடைய குடும்பமுமாக எட்டு பேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். பேழைக்குள் இருந்தவர்கள் காக்கப்பட்டார்கள். பேழைக்கு வெளியே இருந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். '...அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,...' (1பேதுரு 3:21) என்று பார்க்கிறோம். பேழையிலே காக்கப்பட்டது, ஞானஸ்நானத்திற்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதை பாருங்கள். 'விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்' (மாற்கு 16:16) இந்த வார்த்தைகளின்படி, ஞானஸ்நானம் பெற்றவர்கள் காக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.

.

தானியேல்: தானியேல் மாம்சத்தின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். 'தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்'. - (தானியேல் 1:8). தானியேல் வாலிப பிராயத்தில் இருந்தாலும், திராட்சரசம் தனக்கு வேண்டாம் என்று தன் இருதயத்தில் தீர்மானம் செய்து அதன்படி நடந்து கொண்டார். நாமும் கூட மாம்சீகத்திலே வெற்றி பெற்றவர்களாக நடக்க வேண்டும். மாம்ச இச்சைகளுக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும் நீங்கினவர்களாக காணப்பட வேண்டும். மதுபானத்தையோ, சிற்றின்பங்களுக்கோ நாம் இடம் கொடாமல், பேரின்ப நாதரை மகிமைப்படுத்தும் வாழ்வையே வாழ வேண்டும். தானியேல் அவற்றை வெறுத்ததால் தாழ்ந்து போய் விடவில்லை. புறஜாதியான இராஜா கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக வாழ்ந்து காட்டி, பெரும்பான்மையான மக்கள் மத்தியில் சிறுபான்மையான தானியேலின் தேவனே தேவன் என்பதை நிரூபித்து காட்டினார். கர்த்தர் அவரையும், அவருடைய தோழர்களையும், அடிமைகளாக வந்த அந்த நாட்டில் பெரிய அதிபதிகளாக மாற்றினார். அல்லேலூயா!

.

யோபு: யோபு சாத்தானின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். சாத்தான் எத்தனை தான் சோதனைகளை கொண்டு வந்தாலும், கர்த்தரை தூஷிக்காதபடி வாழ்ந்து தன் உத்தமத்திலே நிலை நின்றவர். தேவனே சாத்தானிடம் அவரை குறித்து சவால் விடும்படி உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தார். அவர் தன் பிள்ளைகள், சொத்துக்கள், சுகங்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்ட போதிலும், தேவனை தூஷிக்காதபடி பரிசுத்தமாய் வாழ்ந்த அவருக்கு எல்லாமே இரட்டிப்பாய் திரும்பவும் கிடைத்தது.; தேவனுக்கு முன்பாக சாத்தான் தோல்வியடைந்தான். இந்த நாளில் தேவன் நம்மை குறித்து சாத்தானிடம் சவால் விடும்படியான வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா, அல்லது அவர் வெட்கப்படும்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

.

இப்படிப்பட்ட மூன்று புருஷர்களை போல நாமும் இந்த கடைசி நாட்களில் வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த மனிதர்களை போல உலகத்தின் மேலும், மாம்சத்தின் மேலும், சாத்தானின் மேலும் வெற்றி பெற்றவர்களே, உலகத்தில் வர இருக்கிற பஞ்சம், பட்டயம், கொள்ளைநோய், துஷ்ட மிருகங்களின் பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் ஆத்துமாக்களே தப்புவிக்கப்படும். நாம் அவர்களை போல வாழ்ந்து, வரப்போகும் உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலத்திற்கு தப்புவோமா? ஞானஸ்நானம் எடுக்காதவர்கள், சீக்கிரமாய் ஞானஸ்நான சாட்சிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!

.

சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா

நயமாக அழைக்கிறார் வா - நீ வா

உலக மாமிச ஆசை

வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா

.

ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா

உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா

இச்சையின் வலையில் நீ

சிக்கி விடாதே வா, வா - நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உலக, மாமிச இச்சைகளை வெறுத்து, சாத்தானின் மேல் ஜெயம் எடுத்து கர்த்தருக்காக வாழும்படியாக எங்களை ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே. நோவா, தானியேல், யோபுவை போல வாழவும், வரப்போகும் மகா உபத்திரவ காலத்திற்கு எங்களையும், எங்கள் குடும்பங்களையும் தப்புவித்து கொள்ளும்படியாக எங்களை அர்ப்பணிக்கிறோம். ஞானஸ்நான சாட்சிக்கு ஒப்புக்கொடுக்காதவர்கள் இந்த கடைசி நாட்களில் ஒப்புக்கொடுக்கவும் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து கீழ்ப்படியவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 4 மே, 2015

04 மே 2015 - தீமையாகும் நன்மைகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 04-ம் தேதி - திங்கட் கிழமை
தீமையாகும் நன்மைகள்
........................

உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். - (ரோமர் 14:16).

.

நம்மில் யாரும் பெரிய பெரிய பாவங்களையோ, தவறுகளையோ அதாவது, கொலையோ, கொள்ளையோ செய்வதில்லை. அப்படிப்பட்ட பாவங்களை செய்ய நாம் திட்டமிடுவதுமில்லை. இப்படிப்பட்ட பயங்கர பாவங்களில் நம்மை பிசாசானவன் விழ வைக்க முடியாததால், அவன் தந்திரமான ஒரு வழியை கையாளுகிறான். அதில் ஒன்று தேவன் நன்மை என்று சொல்லுகிற காரியத்தில் நம்மை எல்லையை மீறச் செய்து பாவத்தில் விழ வைப்பதே. நம்முடைய வாழ்க்கையிலே வேத வசனம் நன்மை என்று செர்ல்லக்கூடிய காரியங்கள் எப்படி தீமையாக மாறக்கூடும் என்று ஒரு சில காரியங்களை பார்ப்போம்.

.

ஓய்வு தேவன் தந்த ஒரு கிருபை. வாரத்தில் ஒரு நாள் நாம் ஓய்வெடுத்து கொள்ளும்படி தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். ஆனால் அந்த ஓய்வெடுத்தல் எல்லையை மீறும்போது அது 'சோம்பேறித்தனம்' என்னும் பாவமாக மாறுகிறது.

.

நமது நாவின் ஆசையை நிறைவேற்ற அநேக வகையான பழங்களையும் காய்களையும் உணவு வகைகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். இவற்றை நாம் மகிழ்வோடு உண்ணலாம். ஆனால் அது எல்லையை மீறும்போது அது 'பெருந்தீனி' என்னும் பாவமாக மாறுகிறது.

.

நம்மை நாம் கவனித்து கொள்வதிலும் நமக்குரியவற்றில் ஞானமாய் இருப்பதும் நல்லது. ஆனால் நம்மை குறித்து மட்டுமே யோசித்து கொண்டிருக்கும்போது அது 'சுயநலம்' என்னும் பாவமாக மாறுகிறது.

.

பிறரோடு நல்ல உறவு வைத்து கொள்ள தகவல் தொடர்பு அவசியமானது. எல்லோரோடும் நன்றாக பேச வேண்டும். பழக வேண்டும். ஆனால் அது எல்லையை மீறும்போது 'புரளிபேசும்' பாவமாக மாறுகிறது.

.

ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும், வேலை பார்க்கும் நாட்களில் வாழ்கிறோம். ஒருவரோடொருவர் பேசுவதிலும், உதவுவதிலும் தவறில்லை. ஆனால் அது எல்லையை மீறும்போது பஞ்சும் நெருப்பும் போல அந்த நட்பு இருவரையும் அழித்து விடும்.

.

நாம் எதிர்பாலரோடு பழகுவதில்லை என்று சொல்லி, ஜாக்கிரதையாய் வாழலாம். ஆனால் ஒரே பாலின நண்பர்களுக்குள் நட்பு அதிகமாகும் போது ஓரின சேர்க்கை என்னும் விகற்பம் எழக்கூடும்.

.

அழகான ஏதேன் தோட்டத்தில் பிசாசு ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்ததை நாம் மறந்து விடக்கூடாது. நன்மையென்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்கள் தீமையை நோக்கி சென்று விடாதபடி எல்லைகளை கவனமாக காத்து கொள்வோம். எந்த காரியத்திலும் நாம் எல்லை மீறாதபடி, எல்லைக்குள் அடங்கி இருக்க கற்று கொள்வோம். வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்கும் அடிமையாகாதபடி எல்லாவற்றிலும் சமநிலையான சிந்தனையையும், தெளிவையும் பெற்று வாழ்வோம். நன்மையான காரியங்கள் தீமையாகாதபடி எல்லாவற்றையும் எல்லைக்குள் வாழ்ந்து கர்த்தருக்கு சாட்சியாக இருப்போம். ஆமென் அல்லேலூயா!

.

எதை நான் பேச வேண்டுமென்று

கற்று தாருமையா

எவ்வழி நடக்க வேண்டுமென்று

பாதை காட்டுமையா

ஒளியான தீபமே

வழிகாட்டும் தெய்வமே

.

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எந்த காரியத்திலும் நாங்கள் எல்லையை மீறி செய்யாதபடிக்கு ஜாக்கிரதையாய் எங்களை காத்து கொள்ள கிருபை செய்யும். எந்த காரியமும் எல்லையை மீறும்போது பாவம் என்று உணர்ந்து, அதை தவிர்த்து வாழ கிருபை செய்யும். ஞானத்தை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**************

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வெள்ளி, 1 மே, 2015

1st May 2015 - நாம் அனைவரும் ஜெபம் செய்திடுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 01-ம் தேதி - வெள்ளிக் கிழமை
நாம் அனைவரும் ஜெபம் செய்திடுவோம்
...

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். - (1 பேதுரு 4:7).

.

ஆண்டவரை அதிகமாய் நேசிக்கிற ஒரு சகோதரி தான் வேலை செய்து வந்த அலுவலகத்திற்கு பல வருடங்களாக ஒரே பாதையின் வழியாக நடந்தே வந்து போய் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஆண்டவரிடம், 'அப்பா இத்தனை வருடங்களாக இதே பாதையில் நடந்தே வருகிறேனே, எனக்கு நீங்கள் ஒரு வாகனம் கூடதரவில்லையே' என்று கேட்டார்கள். ஆண்டவர் சொன்னார், 'மகளே இந்த வழியில் நீ நடந்து செல்வதால் எத்தனை தீமையான காரியங்களை நீ பார்க்க நேரிடுகிறது, ஆகவே அதற்காக ஜெபிக்கிறாய். இந்த ஜெபம் தேவை வேகமாக வாகனத்தில் சென்றால் யாரையும, எதையும்; பார்க்க நேரிடாதே' என்று பேசினார், ஆம், ஆண்டவர் நம் ஜெபங்களை எவ்வளவாய் எதிர்ப்பார்க்கிறார் பாருங்கள்!

.

'ஒரு சிறு பட்டணத்திலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான் அவன் தன் ஞானத்தாலே அந்த பட்டணத்தை விடுவித்தான். ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை' (பிரசங்கி 9:15). அதுபோல உங்களுடைய ஜெபத்தினால் உங்கள் பட்டணத்தை தேவன் இரட்சிப்பார். நான்கு சுவருக்கு மட்டும்தான் உங்கள் ஜெபம், கண்ணீர் தெரியும். ஆனால் அந்தரங்கத்தை பார்க்கிற தேவன் வெளியரங்கமாய் பதில் கொடுப்பதை நீங்கள் பார்க்க முடியும். யாரும் உங்களை நினைக்காமல் இருக்கலாம், ஆனால் கொர்நேலியுவின் ஜெபத்தை நினைவு கூர்ந்த தேவன உங்கள் ஜெபத்தையும் நினைவு கூருவார், பதில் கொடுப்பார்.

.

இந்த நாட்களில் நம் தேசத்திற்காக, மற்ற தேசங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டியது எத்தனை முக்கியம்! இயற்கை சீற்றத்தால் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான பேர் அல்லவா? இப்போது இந்தியாவிலும் மிக பெரிய நில நடுக்கம் சேலத்தில் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சேதம் ஏதும் வராதபடி திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் அல்லவா?

.

பிரியமானவர்களே, இன்றைய முக்கிய தேவை ஜெபம். சபையார், ஊழியர்களுக்காக தவறாமல் ஜெபிக்க வேண்டும், கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக, இருவரும் சேர்ந்து பிள்ளைகளுக்காக கட்டாயம் ஜெபிக்க வேண்டும். நாம் அனைவரும் நம் தேசத்தின் பாதுகாப்பிற்காக ஜெபிக்க வேண்டும்.

.

அந்தகார சக்திகளின் கிரியைகள் தேசத்திலிருந்து அற்றுப்போக அவைகளின் கிரியைகளை கடிந்து கொண்டு ஜெபிக்க வேண்டும். நம் தேசத்திற்காக மட்டுமன்றி, உலக நாடுகளுக்காக, அதிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்காக, மற்றவர்களின் இரட்சிப்பிற்காக நாம் ஜெபிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, யாருமே பார்க்காதிருந்தாலும், கேட்காதிருந்தாலும், அந்தரங்கத்தில் பார்க்கும் தேவன் வெளியரங்கமாய் பதிலளிப்பார். தேசங்களில் எழுப்புதலை ஊற்றுவார். அல்லேலூயா!

.

'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் (2நாளா-7:14) என்று சொன்ன தேவன் நாம் நம்மை தாழ்த்தி ஜெபிக்கிற ஜெபத்திற்கு நிச்சயமாக பதில் கொடுப்பார்.

.

தேசங்களுக்காக ஜெபிப்போம், ஆத்துமாக்களுக்காக ஜெபிப்போம், நம் தேவைகளுக்காக, நம் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!

.

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு

சேனையின் கர்த்தர் உன் நடுவில்

பெரிய காரியம் செய்திடுவார்

.

பலத்தினாலும் அல்லவே பராக்கிரமம் அல்லவே

ஆவியினாலே ஆகும் என்று

ஆண்டவர் வாக்கு அருளினாரே

ஜெபம்
எங்கள்அன்பின் பரம தகப்பனே நேபாளில் நடந்த பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே. தங்கள் ஜீவனை இழந்து, தங்கள் உறவினர்களை இழந்து, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கிற ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்துவீராக. இதுப்போன்ற இயற்கை அழிவுகள் எங்கள் நாட்டில் வராதபடிக்கு காத்து கொள்வீராக. வரப்போகிற நாட்களில் இந்தியாவில் அதிக அளவு பூமிஅதிர்ச்சி ஏற்படும் என்று கேள்விப்படுகிறோமே, தேவன் தாமே எங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வீராக. எங்கள் ஒவ்வொருவரையும் ஜெபிக்கிறவர்களாக மாற்றும். திறப்பில் வாசலில் நின்று தேசங்களுக்காக ஜெபிக்கிறவர்களாக மாற்றும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.