பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். - (அப்போஸ்தலர் 1:8). . வீட்டிலே பிசாசு, வெளியிலே தேவதூதன் என்ற பழமொழியை கேட்டிருப்போம். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல, வெளியிலே சிறந்தவர்களைப் போல காணப்படுகிற நாம், வீட்டில் நம்முடைய அன்பற்ற செயல்களால் மீண்டும் மீண்டும் மற்றவர்களை துயரப்படுத்துகிறவர்களாகவே இருக்கிறோம். வெளி இடங்களில் தன்னை அன்பு நிறைந்தவராக காண்பிக்கும் ஒருவர், வீட்டிலே கடுமையானவராகவும், இரக்கமற்ற முறையிலும் நடந்து கொள்வாரானால், அவருடைய உண்மையான மாம்ச சுபாவம் அப்போதுதான் வெளிப்படுகிறது. . சபையில் சிரித்த முகத்துடன் இருக்கும் நாம், நம் ஒரே சரீரமான வாழ்க்கை துணையுடன் ஏன் சீறிவிழுகிறோம்? வெளியில் மிகவும் நல்லவர்களாக காண்பிக்கிற நாம், வீட்டிற்குள்ளே ஏன் நம் துணைவரோடோ அல்லது துணைவியோடே தேவையில்லாத வார்த்தைகளையும், வெறுப்பையும் கொட்டுகிறோம்? இவர்கள் தானே மற்றவர்களை காட்டிலும், நெருக்கமானவர்கள்? ஆனால் மீண்டும், மீண்டும் இவர்களிடம் தானே நாம் மூர்க்கமாய் நடந்துக் கொள்கிறோம்! நான் வேற யார்க்கிட்ட என் கோபத்தை காட்ட முடியும் என்று சொல்வோமானால், கோபத்தை அடக்க கற்றுக் கொள்வோம். இப்படி சொல்லி சொல்லியே நம் கோபத்தை நம் துணைகளிடம் காட்டி அவர்களை புண்படுத்திக் கொண்டிருக்கிறோம். . ஒரு தேவ மனிதர் இதைக் குறித்து கூறும்போது, 'நாம் நம்மிடத்தில் உண்மையாய் அன்புகூருகிறவர்ளை மனவருத்தம் அடைய செய்கிறோம், அறியாதவர்களை புகழ்ந்து பேசுகிறோம், விருந்தினர்களை மனமகிழ்வு அடைய செய்கிறோம், ஆனால் மிகவும் அன்புகூர வேண்டிய நெருக்கமானவர்களை வார்த்தையால் துன்புறுத்துகிறோம், அறிமுகமல்லாத அந்நியரை வாழ்த்துகிறோம், விருந்தினரிடம் புன்னகை பூக்கிறோம், ஆனால் மிகவும் அன்புகூர வேண்டிய கணவரிடமோ, மனைவியிடமோ கசப்பான வார்த்தைகளை பேசுகிறோம்' என கூறியுள்ளார். . ஆலயத்திலும், ஜெபக்கூட்டத்திலும் கிறிஸ்தவ குணநலன்களை கடைபிடிப்பது எளிது. ஆனால் அனுதின வாழ்வில் கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்திக் காட்டுவதே, உண்மையான கிறிஸ்தவனின் பண்பு. வீட்டில் தேவபக்தியாய் சாட்சியாய் நடந்து கொள்வதுதான் முதல் சாட்சியாகும். 'பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! ஆம், நம் முதலாவது சாட்சி எருசலேம் என்னும் நம் வீடாகும். நம் வீட்டில் சாட்சி இல்லாமல், ஊர் முழுக்க சாட்சி சொன்னாலும், அந்த சாட்சியை கர்த்தர் அங்கீகரிக்க மாட்டார். . சிலர் தங்கள் கணவரையோ, மனைவியையோ அநாகரீகமாக பேசுவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். வீட்டில் அப்படி பேசி பேசி, வெளியிடத்திலும், அதே மாதிரி பேசி, அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்குகிறார்கள். கர்த்தர் அதில் பிரியப்படுகிறார் என்று நினைக்கிறீர்களா? அந்த கணவனோ, மனைவியோ இவளை திருமணம் செய்ததற்கு சந்நியாசியாகவே இருந்திருக்கலாம் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு பேச்சுக்கள், ஏச்சுக்கள். அதே நிலைமைதான் மனைவிக்கும். அந்த குடும்பத்தில் தேவன் எப்படி மகிமைப்படுவார் யோசித்துப் பாருங்கள்!. . பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்கு முதலிடத்தை தருகின்ற மனிதன், உண்மையாகவே உடன் வாழ்வதற்கு மிகச்சிறந்த கணவனாவும், தகப்பனாவும் இருக்கிறான் என்று ஒரு தேவ மனிதர் கூறுகின்றார். இதேக்காரியம் மனைவிக்கும் பொருந்தும். நாம் கிறிஸ்துவுக்கு உண்மையாகவே முதலிடம் கொடுப்போமானால், மிகச்சிறந்த கணவனாகவும், மிகச்சிறந்த மனைவியாகவும் நல்ல தகப்பனாகவும், நல்ல தாயாகவும் இருப்போம் என்பதில் சந்தேகமேயில்லை. கர்த்தரில் அன்புகூருகிறேன் என்று சொல்லிவிட்டு, காணும் கணவரிடமோ, மனைவியிடமோ எரிச்சலைக் கொட்டினால், நீங்கள் தேவனிடம் அன்புகூருகிறேன் என்று சொல்வது பொய். . நம் வாழ்க்கையை தேவ வசன வெளிச்சத்தில் மாற்றுவோம். தேவன் தந்திருக்கும் அருமையான கணவரிடமும், மனைவியிடமும் உண்மையாக அன்புகூருவோம். நமது சாட்சி நம் குடும்பத்தில் முதலில் விளங்கட்டும், பின் மற்றவர்களுக்கு சாட்சி சொல்லுவோம். கிறிஸ்துவுக்கு எல்லாவிதத்திலும் முதலிடத்தை கொடுத்து, அவரோடு இணைந்து குடும்பத்தை அன்பின் பாதையில் வழிநடத்துவோம். கர்த்தர் கூட இருந்து வழிநடத்துவார். ஆமென் அல்லேலூயா! . நம் வாழ்வை மற்றவர் பார்த்துக் கூறும் நல்ல சாட்சிகள் இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் நீதியின் சாட்சிகள் இயேசு ராஜனின் திருவடிச் சுவட்டைத் தொடரும் உண்மை சாட்சிகள் சிலுவைக் கொடியை உயர்த்தி ஜீவனையும் தரும் சத்திய சாட்சிகள் . நீங்களே எனக்குச் சாட்சிகள் என்றீர் இயேசுவே! நாங்களும் உமக்கு சாட்சிகள் சிலுவையின் சாட்சிகள் |