தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? - (ரோமர் 8:32). . 1988ஆம் ஆண்டு முதல் 'தேவ எக்காளம்' என்ற பத்திரிக்கையை வெளியிடும் சாமுவேல் என்ற தேவ ஊழியரை அநேகர் அறிவர். அவர் 22 வருடமாக கைப்படவே செய்திகளை எழுதினார். ஆகவே ஒரு தமிழ் தட்டச்சு எந்திரம் வேண்டுமென்று ஜெபிக்கலானார். அவர் அதைப் பெற்றுக் கொண்ட விதம் நம் விசுவாச வாழ்வை ஒரு படி மேலே கொண்டு போகும். . 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி நாளில் அவர் வீட்டிற்கருகிலுள்ள தோட்டத்திலுள்ள கிணற்றுக்கருகில் முழங்காலூன்றி ஜெபிக்க ஆரம்பித்தார். ஜெபத்தின் முக்கிய பகுதியாக தட்டச்சு வேண்டும் என்று ஊக்கமாய் ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு சில மணி நேரங்கள் கழித்து நடந்துக் கொண்டே ஜெபித்துக் கொண்டு ஒரு பேரிக்காய் மரத்தண்டை வந்தார். அந்த மரத்திலே வெண்மையான கொழுந்து இலைகள் வெளிவரத் தொடங்கி இருந்தன. . சில மாதங்களுக்கு முன் அவர் பார்த்தபோது அம்மரம் குளிரின் காரணமாக இலைகளையெல்லாம் உதிர்த்து பட்டமரம் போல் காணப்பட்டது. ஆனால் இன்றோ பசுந்துளிராக இலைகளை விட்டிருந்தது. இன்னும் சில மாதத்தில் வெண்மையான பூக்கள். பின் சிறிய காய்கள் பின்னர் மரமே ஒடிந்து விடும் அளவிற்கு பேரிக்காய்களால் மரம் நிறைந்து விடும். . இந்த மாட்சிமையான காரியத்தை செய்கின்றவராகிய தேவனாகிய கர்த்தர் எத்தனை மகத்துவமுள்ளவர் என்பதை நினைத்தபோது அவரது விசுவாசம் துளிர்விட்டது. 'இப்படிப்பட்ட சர்வ வல்லவர் அற்பனாகிய எனக்கு ஒரு தமிழ் தட்டெழுத்து எந்திரத்தை கொடுப்பது அத்தனை கடினமான கரியமா? நீர் எனக்கு அதை தந்தே ஆக வேண்டும். நீர் தாமதித்தால் கடன்பட்டாவது வாங்கி விடுவேன். எத்தனை நாள் கை வலிக்க எழுதுவது' என்று கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தார். . வீடு வந்து சேர்ந்து பதினைந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, அந்த நாளுக்குரிய தபால்கள் அவருக்கு கிடைத்தது. ஒரு சிறிய கவரில் கடிதம் எதுவும் இல்லாமல், அனுப்புபவரின் முகவரியும் இல்லாமல், ஒரு புதிய தட்டெழுத்து எந்திரம் வாங்க போதுமான பணம் நிறைந்த ஒரு டிராப்ட் வைக்கப்பட்டிருந்தது. அல்லேலூயா! மட்டுமல்ல, அதைச் சுற்றி ஒரு சிறிய வெள்ளைத்தாளில் 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது. எத்தனை அற்புதமான தேவன் நம் தேவன் பாருங்கள்! அதைக் கண்ட அவரால் தேவ சமுகத்தில் ஆண்டவருடைய அன்பை நினைத்து அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. . பிரியமானவர்களே, நாம் எதற்காக ஆண்டவரிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் விரும்பி கேட்பது தேவ இராஜ்யத்தின் கட்டுமான பணிக்கும், விரிவாக்க பணிக்கும் உதவுமானால் அதை தேவன் இன்றே தருவார். . நாம் கேட்பது தேவ சித்தத்திற்கு உட்பட்டதானால் நாம் தைரியமாக கர்த்தரிடம் நம் தேவைகளை சொல்லிக் கேட்கலாம். 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்' (1 யோவான் 5:14) என்று வேத வசனம் கூறுகிறதல்லவா? ஏனெனில் பெலமுள்ளவனுக்காகிலும், பெலமற்றவனுக்காகிலும் உதவிகள் செய்வது அவருக்கு லேசான காரியமல்லவா?. . கர்த்தரிடத்தில் அவருடைய சித்தத்திற்கு உட்பட்டதை கேட்போம். கர்த்தரிடமிருந்து அவற்றை அற்புதமாய் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்போம். ஆமென் அல்லேலூயா!. . லேசான காரியம் எதுவும் லேசான காரியம் பெலமுள்ளவன் பெலனற்றவன் யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் - இயேசுவுக்கு லேசான காரியம் . மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது லேசான காரியம் மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது லேசான காரியம் இயேசுவுக்கு லேசான காரியம் |