Friends Tamil Chat

திங்கள், 3 பிப்ரவரி, 2014

3rd Feb 2014 - பரிசுத்தமாய் காத்து கொள்ளுதல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 03-ம் தேதி – திங்கட்கிழமை
பரிசுத்தமாய் காத்து கொள்ளுதல்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். - (1 யோவான் 5:18).

.
நிலக்கரி சுரங்கம் அமைந்திருந்த ஒரு நகருக்கு போதகர் ஒருவர் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்தார். சுரங்கத்தை பார்க்க வேண்டுமென்று விரும்பி, உரிய அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றார். எங்கு பார்த்தாலும் கன்னங்கரேல் என்று தூசி. இருள் சூழ்ந்திருந்த அந்த சுரங்கத்தினுள் ஆச்சரியத்தோடு சென்று கொண்டிருந்த அவர் ஒரு நிமிடம் வியப்போடு நின்று விட்டார். காரணம், அந்த இடத்தில் வெள்ளை வெளேரென்று அழகிய மலரொன்று இருப்பதை கண்டுதான்! இவ்வளவு அழுக்கான இடத்தில் இவ்வளவு தூய்மையான மலரா? இது எப்படி என்று தொழிலாளி ஒருவரிடம் கேட்டார். தொழிலாளி கொஞ்சம் கரித்தூளை எடுத்து பூவின் மேல் வீசினார். கரித்தூள் மலரின் இதழில் பட்ட வேகத்தில் வழுக்கி கொண்டு கீழே விழுந்ததையும், அந்த மலர் முன் போல அழகு மாறாமல் மிளர்வதையும் கண்டு வியந்து போனார். காரணம் அம்மலரின் இதழ்கள் அவ்வளவு வழுவழுப்பாக இருந்தன.

.

எருசலேமிலிருந்து சிறைபடித்து வரப்பட்ட தானியேல், சாத்தராக் மேஷாக், ஆபெத்நேகோ ஆகிய யூத வாலிபர்கள் பாபிலோன் அரண்மனையிலே வைக்கப்படுகிறார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்த அவர்களுக்கு ராஜா உண்ணும் உணவும், உயர்ந்த வகை திராட்சை ரசமும் பரிமாறப்படுகிறது. ஆனால தானியேலோ இவற்றால் தன்னை தீட்டுப்படுத்தலாகாது என்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினார். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற தேவன் பிரதானியின் கண்களில் தயவு கிடைக்க செய்தார். ஆம், தீர்மானத்தை முதலில் தானியேல் எடுத்தார். அதில் நிலைத்திருக்கும்படி தேவன் மற்ற காரியங்கள் அவருக்கு அனுகூலமாயிருக்கும்படி கிரியை செய்தார்.

.

ஆம் பிரியமானவர்களே, நாம் எந்த இடத்தில் இருந்தாலும், அங்கு பரிசுத்தமாய் வாழ முடியும். முதலாவதாக நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்ற வாஞ்சையும், தீர்மானமும் எடுக்க வேண்டும். உள்ளத்தில் இந்த ஏக்கத்தையும் தீர்மானத்தையும் காண்கிற தேவன், நீங்கள் தூய்மையாய் வாழ சகல வழியையும் திறந்து தருவார்.

.

சிலர் சொல்வார்கள், நான் இருக்கும் இடத்தில், நான் வேலை பார்க்கும் இடத்தில் பரிசுத்தமாய் வாழ வழியே இல்லை என்று. சாமுவேல் தன் தாயால் ஏலி தாத்தாவினிடத்தில் விடப்பட்ட போது சிறுவனாயிருந்தார். அவர்; அங்கு ஏலியின் வீட்டில் அவருடைய பிள்ளைகளோடுதான் வளர்க்கப்பட்டார். ஏலியின் பிள்ளைகள் பேலியாளின் பிள்ளைகளாயிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. அதாவது, மிகவும் மோசமானவர்களாக, கெட்ட நடத்தை உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களோடு தான் சாமுவேல் வளர்ந்தார். ஆனால் அவர்களுடைய எந்த கெட்ட வழக்கமும் சாமுவேலை பிடித்து கொள்ளவில்லை. சாமுவேல் கெட்டவராக போய் விடவில்லை. அதற்கு காரணம், அவருடைய தாயின் ஜெபமாயிருந்திருக்கலாம், ஆனால் சாமுவேலும் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு தன்னை கெடுத்து கொள்ளாதபடி, தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். ஆகையால் கெட்ட காரியங்களுக்கு தன்னை விலக்கி காத்து கொண்டார்.

.

நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்தாலும் அங்கு பாவ சூழ்நிலை இருக்கத்தான் செய்யும். ஏனெனில் உலகம் பொல்லாங்கனுக்குள் இருக்கிறபடியால்! எப்படி அந்த மலர் தான் வளரும் இடத்தை மாற்றி கொள்ள முடியாதோ அப்படி நாமும் பாவம் நிறைந்த இவ்வுலகில்தான் வாழ வேண்டும். பாவம் செய்ய தூண்டும் சூழ்நிலைகள் நெருக்கினாலும், தேவனோடு நாம் இருப்போமானால், சாமுவேலை போல, தானியேலை போல நம் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தால், தேவன் அந்த தீர்மானத்தை காத்து கொள்ள உதவுவார். ஆமென் அல்லேலூயா!

.

தீர்மானங்கள் தோற்கா வண்ணம்

காத்து கொள்ள உதவும்

நேர்மையாக வாக்கை காக்க

வழிவகுத்தருள வேண்டும்

..

உத்தமமாய் முன்செல்ல

உதவி செய்யும் யெகோவா

ஊக்கமதை கைவிடாமல்

காத்து கொள்ள உதவும்


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, பாவம் செய்யாதபடிக்கு நாங்கள் தீர்மானம் எடுத்து, அதிலே நிலைத்திருக்கும்படியாக தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. நாங்கள் வாழும் சூழ்நிலை எங்களை பாவத்தில் விழ வைக்க கூடியதாக இருந்தாலும் சாமுவேலை போல, தானியேலை போல நாங்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்திருந்து பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும். நிலக்கரி சுரங்கத்தில் இருந்தாலும் அந்த மலர் தன் வெண்மையை எப்படி காத்து கொள்கிறதோ, அதுபோல எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் பரிசுத்தத்தை காத்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதைத் தருவதாக வாக்களித்தவரே, உம்மிடத்தில் எங்கள் விண்ணப்பங்களை வைக்கிறோம் தகப்பனே,

.

சகோதரன் சுகுமாரன் இரட்சிக்கப்படவும், அதன் மூலம் அவருடைய முழுக்குடும்பமும் இரட்சிக்கப்படவும் ஜெபிக்கிறோம். கர்த்தரை அறிகிற அறிவில் அவர் வளரவும், வேதத்தை வாசித்து, கர்த்தரைப் பற்றிக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் ஜான்சன் அன்டனி அவர்களுக்கு நிரந்தரமான, அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்

.

சகோதரன் சௌந்தரராஜ் அவர்களின் சரீரத்தில் இருக்கிற பிரச்சனைகள் மாறவும், அவருடைய லோன் பிரச்சனைகள் மாறவும், அவருடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் பிராங்க்ளின் தேசாய் அவர்களின் மகன் டாக்டர் ஜெபா அவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 3; தேதி எழுத இருக்கிற யுனிவர்சிட்டி பரிட்சையில் நல்லபடியாக எழுதி முடிக்கவும், நல்ல மதிப்பெண்களோடு வெளிவரவும் தேவன் கிருபை செய்வீராக. வெளிநாட்டில் இருக்கிற அவருடைய மற்ற நான்கு பிள்ளைகளுக்கும் நல்ல வேலைகள் கிடைக்கவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் இம்மானுவேல் ஏஞ்சலோ அவர்கள் சென்னையில் புரோகிரமராக வேலைக்கு சேர்ந்து செய்து கொண்டிருந்தாலும், அவருடைய படிப்பு பி.காம் ஆக இருப்பதால், தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்றும், அதிக நேரம் எடுத்தாலும், சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் அவதிப்படுவதால், அவருடைய படிப்பிற்கேற்ற வேலையை அந்த கம்பெனியிலேயே கிடைக்கவும் தேவன் கிருபை பாராட்டும்படியாக ஜெபிக்கிறோம். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, தயவாய் அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவீராக.

.

சகோதரன் அனுதீப்குமார் அவர்களின் சகோதரியின் மகள் ஹரிணிக்கு மூன்றறை வருடங்கள் ஆகியும், உட்காரவோ, எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாதபடி இருக்கிறபடியால், தேவன் அந்த குழந்தைக்கு ஒரு அற்புதத்தை செய்வீராக. நாங்கள் இந்துக்கள், ஆனால் கர்த்தர் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார் என்று விசுவாசிக்கிறோம் என்று அவர்கள் எழுதியிருக்கிறபடியால், அவர்களுடைய விசுவாசத்தை கனப்படுத்தி, தேவன் ஒரு அற்புதத்தை அந்த குழந்தைக்கு செய்யும்படியாக ஒருமனமாக ஜெபிக்கிறோம் தகப்பனே, நீரே அற்புதங்களை செய்கிறவர் என்பதையும், இன்றும் ஜீவிக்கிறவர் என்பதையும் அந்த குடும்பம் அறியும்படியாக தேவன் பெரிய காரியத்தை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.