ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். - மாற்கு-11:24. . 10th February 2014 to 14th February 2014 அன்பு சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய விலைமதியாத நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறோம். சில சகோதர சகோதரிகள், ஜெபக்குறிப்பில் காணப்படும் ஜெபங்களுக்கு ஜெபிப்பதுடன், அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மருத்துவர்களின் அட்ரஸையும், எங்கு போய் சிகிச்சை எடுப்பது என்பது குறித்தும் தகவல்களை அனுப்புகிறீர்கள். தங்களது உதவிக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களுடைய மின்னஞ்சலுக்கு நாங்கள் உடனே அனுப்பி வைக்கிறோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. . எங்கள் அன்பின் நேச தகப்பனே, நீர் நல்லவர், வல்லவர், போதுமானவர். எங்கள் ஜெபத்தை கேட்பவர். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறபடி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்ட நாங்கள் உமது கிருபையை எதிர்ப்பார்த்து எங்கள் ஜெப விண்ணப்பங்களை உமது சமுகத்தில் வைக்கிறோம் தகப்பனே, . நர்ஸாக பணிபுரியும் சகோதரி ஸ்டெல்லா கிரேசி அவர்கள் வேலைக்காக முயற்சிக்கிற வெளிநாட்டில் ஒரு வேலை கிடைக்கும்படி கிருபை செய்வீராக. அதனால் அவர்களுடைய கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டு, நல்ல வாழ்வு அமைய கிருபை செய்வீராக. அவர்களுடைய முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட கிருபை செய்யும். . சகோதரி பிரிதா அவர்களின் வாழ்விலும் உள்ளத்திலும் காணப்படும் எல்லா மன உளைச்சல்களையும் மாற்றுவீராக. உலகம் தரக்கூடாத சமாதானத்தினால் அவர்களுடைய இருதயத்தை நிரப்புவீராக. அவர்களுடைய வேலையிடத்தில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றுவீராக. சமாதானமான ஒரு வாழ்வை கட்டளையிடும். உமக்கென்று உண்மையான சாட்சியாக வாழ கிருபை செய்யும். . துபாயிலிருக்கும் சகோதரன் கில்பர்ட் தாமஸ் அவர்களுக்கு அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். தேவைகளை சந்திப்பீராக. . சகோதரி ஜெர்லின் ஜேக்சன் அவர்களுக்கு ஐந்து வருடங்களாக இருந்த வயிற்று வலியிலிருந்து அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு சுகத்தை கொடுத்தீரே உமக்கு கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். தொடர்ந்து சுகமாய் வாழ கிருபை செய்யும். உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும். . ரமேஷ் என்னும் சகோதரன் தன் தாயையும், சகோதரிகளையும் பகைத்து, அவர்களை வெறுக்கிறபடியால், அவருக்குள் இருக்கும் வெறுப்பை அகற்றும்படியாக ஜெபிக்கிறோம். விரோதங்களை மாற்றுவீராக. சகோதர சிநேகத்திலும், அந்நியோன்னியத்திலும், திரும்ப நிலைத்திருக்க கிருபை செய்யும். அவர்களுக்கு இடையில் வெறுப்புகளை கொண்டு வரும் சத்துருவின் அந்தகார சக்திகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அதட்டுகிறோம். அன்பை ஊற்றும். வெறுப்புக்களை மாற்றுவீராக. . ராஜன் என்பவர் ஒரு குடும்பத்தை பகைத்து, அந்த குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று வெறுப்போடு அலைகிறபடியால், அந்த வெறுப்பை மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். கிறிஸ்துவின் அன்பு கடந்து வந்து, அவர்களை தொடும்படியாக ஜெபிக்கிறோம். இருதயத்தை அன்பால் நிறைத்து, அந்த குடும்பத்தோடு அன்பின் ஐக்கியம் ஏற்பட கிருபை செய்யும். . சகோதரன் டேவிட் ஜெயராஜ் அவர்களுக்காக ஏற்கனவே நாங்கள் அவருடைய பழைய கம்பெனியிலிருந்து ரிலீஸ் கிடைக்கும்படியாக ஜெபித்திருக்கிறோம் ஐயா, ஆனால் இதுவரை அந்த ரிலீஸ் கிடைக்காமல் தவிக்கிற அந்த சகோதரனுக்கு கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். யார் யார் கண்களில் தயவு கிடைக்க வேண்டுமோ அவர்கள் கண்களில் தயவு கிடைத்து, எப்படியாவது சீக்கிரமாய் அந்த ரிலீஸ் கிடைக்க கிருபை செய்வீராக. . சகோதரன் அருள் தினேஷ்குமார் அவர்களின் நண்பர் வெங்கட் அவர்களுக்கு இரத்த புற்றுநோய் வந்து, அவருக்கு இந்த மாதம் தான் கடைசி என்று டாக்டர்கள் சொல்லியிருப்பதால், தேவன் தாமே அந்த சகோதரனுக்கு கிருபையாய் இரங்கி, சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். உலக வைத்தியர்கள் கைவிட்டாலும், கைவிடாத தேவன் நீரல்லவோ? அந்த சகோதரனுக்கு ஒரு அற்புதத்தை செய்வீராக. சுகத்தை அனுப்புவீராக. நீரே ஜீவிக்கிற தெய்வம் என்பதை மற்றவர்கள் காணத்தக்கதாக பெரிய அற்புதத்தை செய்யும். . சகோதரி அனிதா ராஜா அவர்கள் பட்டிருக்கும் கடனை எப்படியாவது அடைக்கும்படியாக அவர்களுக்கு வழிகளை திறந்தருளும். அவர்களுடைய தேவைகளை சந்திப்பீராக. கடன் எல்லாம் அடைப்பட்டு, செழிப்பான வாழ்வு வாழ தேவன் அவர்களை ஆசீர்வதிப்பீராக. . சகோதரன் டேனியேல் சவரிநாயகம் அவர்களுடைய கடன் தொல்லையிலிருந்து அவர் வெளிவரும்படியாக, தேவன் ஒரு அற்புதத்தை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். எல்லா கடனும் அடைபட்டு, சந்தோஷமாய் வாழும்படியாக ஆசீர்வதித்தருளும். கடனில்லாத ஒரு வாழ்வை கட்டளையிட்டருளுவீராக. . சகோதரி ஹேமா அவர்கள் தனியாக தன் இரண்டு மகன்களையும், தன் அம்மாவின் பென்ஷன் மூலமாக வளர்த்து வருகிறபடியால், தேவன் தாமே அந்த குடும்பத்திற்கு இரங்கி, சகோதரிக்கு நல்ல ஒரு வேலையை தரும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் வைத்து நடத்தும் சிறிய சலூனில் பெருக்கத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். தேவைகளை சந்திப்பீராக. தைரியத்தை கொடுப்பீராக. எந்தப் பற்றாக்குறையும் இல்லாதபடி வாழும்படி கிருபை செய்யும். . சகோதரன் ஜான் பிளஸ்வின் அவர்களின் பிஹெச்டி படிப்பை இந்த ஆண்டு முடிக்கும்படியாக வழிகளை திறந்தருளுவீராக. அவர்களுடைய பாட்டி சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதால் வரும் வேதனைகளை மாற்றுவீராக. அவருடைய தாத்தா பாட்டி இரண்டு பேரையும், முதிர்வயதிலும் கனிதந்து பசுமையும் புஷ்டியுமாயிருக்கும்படி ஆசீர்வதிப்பீராக. . குவைத்தில் இருக்கும் சகோதரன் ஆரோக்கியராஜ் கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக வளரவும், விசுவாசத்தில் பெருகவும், கர்த்தருக்காக ஊழியம் செய்யவும் தேவன் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய இருதய வாஞ்சைகளை தேவன் தாமே நிறைவேற்றுவீராக. . சகோதரன் கிறிஸ்டோபர் அவர்களின் மகன் அபிஷேக் பிடிஎஸ் படித்துக் கொண்டிருந்தாலும், ஒரு அசுத்த ஆவியினால் அலைகழிக்கப்பட்டு, கல்லூரிக்கு சரியாக போகாமல் இருப்பதால், அபிஷேக்கை பிடித்து துன்பப்படுத்துகிற அந்த அசுத்த ஆவியை நாங்கள் அனைவரும் ஒருமனமாக சேர்ந்து, இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து அப்புறப்படுத்துகிறோம். இனி அவனுக்குள் பிரவேசியாதிருப்பாயாக என்று கட்டளை கொடுக்கிறோம். அந்த மகனை உமது இரத்தக்கோட்டைக்குள் வைக்கிறோம். எந்த அந்தகார சக்தியும் மகனை தொடாதபடி காத்துக்கொள்ளும். வாலிப வயதில் உம்மைப் பிடித்துக் கொள்ளவும், உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யும். அவன் காலேஜூக்கு போகாததால் அந்த காலேஜ் அவனை வெளியாக்காதபடி மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்க கிருபை செய்வீராக. மகனை முற்றிலும் விடுதலையாக்கும்படி ஜெபிக்கிறோம். . அபுதாபியில் இருக்கும் சகோதரன் ஜான் ஜோசப் அவர்களின் குடும்பம் எந்த கஷ்ட நிலையிலும் ஒன்றாக சேர்ந்து வாழவும், அன்பின் ஐக்கியத்தில் என்றும் நிலைத்திருக்கவும், அவர்களுடைய பிள்ளைகளையும் அவர்களின் படிப்பையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சிறுவயதிலிருந்தே கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தில் வளரவும் கிருபை செய்வீராக. சகோதரன் எழுதியிருக்கிற பரிட்சையிலும் நல்ல வெற்றியைக் காண கிருபை செய்யும். . சகோதரன் ஜெபஸ்டின் அவர்களின் பெற்றோருக்காகவும், அவருடைய எதிர்கால வாழ்விற்காகவும் ஜெபிக்கிறோம். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் கூடக்கொடுக்கப்படும் என்று உலக ஆசீர்வாதங்களை குறித்து தேவன் சொல்லியிருக்கிறபடியால், உம்முடைய இராஜ்யத்திற்குரியவைகளை முதலாவது தேடி, பின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். தேவைகளை அனைத்தையும் சந்திப்பீராக. . சகோதரன் சுபாஷ் அவர்களின் புதிய வேலைக்காக ஜெபிக்கிறோம். நல்ல ஞானத்தோடு வேலை செய்யவும், மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைத்து, உண்மையும் உத்தமுமாக வேலை செய்து, நற்சாட்சி பெறவும் கிருபை செய்யும். . சகோதன் ஆலன் சாமுவேலுக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவரை நாய் கடித்தபடியால், இப்பொழுது அவர் வியாதிப்பட்டு, ரேபிஸ் ஆக இருக்கலாம் என்று சி எம் சி வேலூரில் சேர்க்கபட்டிருப்பதால், அவரை நீர் தாமே தொட்டு சுகப்படுத்தும்படி வேண்டுகிறோம். அவர் உம்முடைய ஊழியத்தை செய்கிறவராக இருக்கிறபடியால், தேவரீர் அவரை கண்ணோக்கிப் பார்த்து, ஒரு விடுதலையை அனுப்புவீராக. டாக்டர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சையை கொடுத்து அவர் சீக்கிரமாய் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவரும்படி கிருபை செய்யும். . சகோதரி ரேணுகா தேவி அவர்களின் ஒரே மகள் பி இ மூன்றாவது வருடம் படிக்கும் மீனாம்பிகை அவர்களுக்கு வைரஸ் தாக்கி இருப்பதாகவும், டாக்டர்கள் மூன்று மாதம் டைம் கொடுத்து வைரஸ் பெருகாமல் இருந்தால் குணப்படுத்தலாம், இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லியிருப்பதால், நாங்கள் உம்மையே நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, அவர்கள் கர்த்தரிடம் என் மகளுக்காக ஜெபித்தால் அவர் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறேன் என்று எழுதியிருப்பதால், தேவன் அந்த மகளை தொடுவீராக. யாரும் இல்லாமல், ஒரே மகளை மட்டும் கொண்டிருக்கிற அந்த சகோதரிக்கு இரங்குவீராக. ஒரு அற்புதத்தை செய்வீராக. பன்னிரண்டு வயது சிறுமியை கையைப்பிடித்து, தூக்கி, தலித்தா கூமி என்று சொல்லி எழுப்பினவரே, இந்த மகளையும் தொட்டு சுகப்படுத்தும்படி உம்மிடம் மன்றாடுகிறோம் ஐயா. உலக வைத்தியர்களால் செய்ய முடியாததை உம்மால் மாத்திரமே செய்ய முடியுமே தகப்பனே, அந்த இளம் சகோதரியை சுகப்படுத்தும். நீர் செய்வதற்காக உமக்கு நன்றி. . சகோதரி அமுதா சக்தி விக்டர் அவர்களின் மகள் பதினொரு வயதாகியும், ஆட்டிஸம் என்னும் பிறவிக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பதால், இன்னும் பேசாமல், தன் வேலைகளை செய்ய முடியாமல் தவிக்கிற அந்த பிள்ளைக்கு கர்த்தர் தாமே இரங்கும்படியாக ஜெபிக்கிறோம். அந்த பிள்ளை பேசும்படியாக அவளுடைய வாயின் கட்டுக்களை அறுத்தருளும். சரியானபடி பேச கிருபை செய்யும். தன்னுடைய வேலைகளை தானே செய்யும்படி அவளுக்கு விசேஷித்த கிருபைகளை கொடுப்பீராக. மருத்துவ உலகத்தில் முடியாத காரியத்தை தேவனால் செய்யக்கூடுமே, தேவன் ஒரு அற்புதத்தை அந்த மகளுடைய வாழ்வில் நிறைவேற்ற வேண்டுமே! இரங்கும் ஐயா, கிருபையாய் இரங்கும்படியாக ஜெபிக்கிறோம். . சகோதரி காயத்திரி அவர்களின் ஆறுவயது மகள் ஹரிணிக்கும், சகோதரிக்கும் சளி காய்ச்சல் எப்போதும் வந்துக் கொண்டிருக்கிறபடியால், தேவன் தாமே அவர்கள் இருவருக்கும் சரீரத்தில் எதிர்ப்பு சக்தியை பெலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம். பூரண சுகத்தோடு வாழும்படி கிருபை செய்வீராக. தேவன் தொட்டு சுகப்படுத்தும்படி ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். |