ஜனங்களுக்குள்ளே அவரைக் குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். - (யோவான் 7:12) . சாது ஒருவர் தன்னுடைய சீடன் ஒருவனுடன் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் ஒருவன் அவரைக் கண்டு வணக்கம் கூறி, வாயாற சாதுவைப் புகழ்ந்தான். அவரை ஒரு தெய்வம் என்றான். ஆனால் சாது பதில் எதுவும் பேசவில்லை. புன்முறுவரோடு கடந்து சென்றார். எவ்வித சந்தோஷ உணர்வுகளையும் சீடன் அவர் முகத்தில் காணவில்லை. . சற்று தூரம் சென்றவுடன் இன்னொரு மனிதன் அவரைக் கண்டான். 'நீர் காவி உடை அணிந்து வேஷமாய் திரியும் ஏமாற்றுக்காரன்' என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினான். லேசான புன்முறுவலோடு கடந்து சென்றார் சாது. எந்த வித கோப உணாச்சிகளையும் முகத்தில் பிரதிபலிக்காததைக் கண்ட சீடன் ஆச்சரியப்பட்டான். . மௌனமாய் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சீடனின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான். 'குருவே ஒருவன் உங்களைப் புகழ்ந்தான், மற்றொருவன் இகழ்ந்தான். ஆனால் நீரோ இரண்டிற்கும் ஒரே விதமாய் காணப்பட்டீர் எப்படி?' என்றான். 'சீடனே இவர்கள் இருவருக்கும் என்னை சரியாய்த் தெரியாது. ஆனால் எனக்கு என்னைப்பற்றி சரியாய்த் தெரியும். ஆகவே ஒருவன் புகழும்போதும், இவனது புகழ்ச்சிக்கு நான் தகுந்தவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பதால் பெருமைப்பட தோன்றவில்லை. மற்றொருவன் என்னை இகழ்ந்தான். அவன் கூறிய அளவிற்கு நான் மோசக்காரனல்ல என்பதை அறிவேன். ஆகவே கவலைபப்டவில்லை. எனவேதான் சமநிலையாக இருக்கிறேன். ஒவ்வொருவர் சொல்வதற்கும் நான் கேட்டு என் மனதில் குழப்பம் அடைந்திருந்தேனானால், பைத்தியம் பிடித்து அலைய வேண்டியதுதான்' என்று சொன்னார். . ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதராய் வாழ்ந்த நாட்களில் மக்களால் அவர் வானளாவ புகழப்பட்ட வேளைகள் இருந்தது. அதே வேளையில் பிசாசு பிடித்தவன் என்று இகழப்பட்ட வேளைகளும் இருந்தது. ஆயினும் இவை இரண்டுமே அவரை பாதிக்கவில்லை. தாம் பிதாவினால் எதற்காக இவ்வுலகத்திற்கு அனுப்பபட்டாரோ அந்த சித்தம் நிறைவேற தமது பணியை செய்து கொண்டே வந்தார். . சிலருடைய பார்வையில் நாம் தேவதூதர்கள் ரூபம் கொண்டுவந்ததைப் போல தோன்றலாம், உங்களை மாதிரி நல்லவர்களை பார்த்ததேயில்லை என்று புகழலாம். ஆனால் வேறு சிலருடைய பார்வையில நீங்கள் சுயநலக்கராரராகவும், வஞ்சகராகவும் தோன்றலாம். ஆனால் வேதத்தின் வெளிச்சத்தில் உங்கள் இருதயத்தின நிலையை நீங்கள் சரியாய் அறிந்து வைத்திருப்பீர்களானால் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நிதானமாய் சமநிலையாய் வாழலாம். பிறர் புகழும்போது சந்தோஷத்தால் குதிக்கவும் மாட்டோம். இகழும்போது, துக்கத்தால் துவளவும் மாட்டோம். . பிரியமானவாகளே, எல்லாரும் நம்மை புகழ வேண்டும், மதிக்க வேண்டும், பெருமையாய் பேச வேண்டும் என்பதற்காகவே உள்ளத்தின் உண்மை நிலையை உதறிவிட்டு மாய்மாலமாய் வாழ்வது உண்மை கிறிஸ்தவர்களின் நிலை அல்ல. தேவனை நமக்கு முன்பாக வைத்து ஓடுவோமானால், எந்த குறை கூறுதலும், எந்த பாராட்டும் நம்மை பாதிக்க இடம் கொடுக்க மாட்டோம். . மற்றவர்கள் நம்மை குறித்து முழு அளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மைக் குறித்து நமக்கும் நம் தேவனுக்கும் மாத்திரமே நூறு சதவிகிதம் தெரியும். ஆகையால் பிறர் கூறுவதை மனதில் வைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டு இருக்காமல், காது கேளாதவர்கள் போல் வாழ்வதே சிறந்தது. தேவன் நம்மை குறித்து என்ன நினைக்கிறார் என்பதையே நம் கருத்தில் கொண்டு, அவருக்கு பிரியமாக வாழ முயற்சிப்போம். கர்த்தர் அதில் பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா! . பரிசுத்த ஆவியால் நிறைந்த இயேசு பிதாவின் சித்தமதை செய்ததைப் போல் என்னை மாற்றுமே என்னை மாற்றுமே கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே . தூய ஆவியே என்னை நிரப்பிடுமே தேவ ஆவியே என்னை நடத்திடுமே ஆவியில் நடக்கணுமே – தேவ வார்த்தையில் நிலைக்கணுமே |