பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. - (ஏசாயா 45:22). . 1850 ஜனவரி 6ஆம் தேதி இங்கிலாந்து பனிப்புயலால் பாதிக்கப்பட்டது. புனிப்புயலில் சிக்கிய வாலிபனொருவன் தன்னை காத்துக் கொள்ள அருகிலிருந்த ஆலயத்திற்குள் ஓடினான். அங்கு மாலை ஆராதனை நடந்து கொண்டிருநதது. அன்று போதகர் இல்லாததால் சபை அங்கத்தினரான தையல்காரர் ஒருவர் ஆராதனையை நடத்தி கொண்டிருந்தார். அவர் செய்தியளிக்க ஆரம்பித்தார். அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொன்ன காரியம், 'என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்' என்பதே. பனிப்புயலுக்கு தப்ப ஓடி வந்த வாலிபன் கதவுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு செய்தியை கேட்க எந்த விருப்பமும் இல்லை. . தையல்காரர் பிரசங்க பீடத்தில் நின்ற வண்ணமாகவே அந்த வாலிபனை நோக்கி, 'வாலிபனே இயேசுவை நோக்கிப்பார்' என்று கூறினார். அவர் படித்தவருமல்ல, பிரசங்கியாருமல்ல, மிக சாதாரண மனிதர்தான். ஆனால் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராய் வல்லமையோடு அசாதாரணமாக பிரசங்கித்தார். அநேகர் இருந்த அந்த இடத்தில் குறிப்பாய் தன்னை பார்த்து சொன்ன அந்த செய்தி அந்த வாலிபனை வெகுவாய் அசைத்தது. இயேசுவை நோக்கி பார் என்ற சத்தம் அவனுடைய இருதயத்தில் தொனித்து கொண்டே இருந்தது. முடிவில் அவன் இயேசுவை நோக்கினான். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அந்த வாலிபன் யார் தெரியுமா? அவர்தான் C. H. ஸ்பர்ஜன். (C. H. Spurgeon) பின் நாட்களில் பிரசங்க ஊழியத்தில் தேவனால் மிகவும் வல்லமையாக பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்று விளங்கினார். . படிப்பறிவில்லாத தையல்காரரை கொண்டு தேவன் தேசத்திற்கு மிகப்பெரிய ஊழியராகிய ஸ்பர்ஜனை எழுப்பினார். அதுபோல இயேசுவோடு ஊழியம் செய்த அவருடைய சீஷர்களில் அநேகர் படிப்பறிவற்ற மீனவர்களே. தேவன் தனது பணியினை செய்ய திறமையுள்ளவர்கள் அனுபவமிக்கவர்கள் இவர்களை மட்டும் தெரிந்தெடுப்பதில்லை. தாழ்ந்த சிந்தையும், உண்மையான இருதயமும் உள்ள சாதாரண மக்களையே தேடுகிறார். ஆம் அசாதாரணமானவைகளை செய்ய தேவனுக்கு சாதாரணமானவர்களே தேவை. . உதாரணத்திற்கு எங்களையே எடுத்து கொள்ளுங்கள், நாங்கள் பெரிய போதகரின் படிப்பு பெற்றவர்களோ, பட்டம் பெற்றவர்களோ இல்லை. மிகவும் சாதாரணமானவர்களே! அநேகர் எங்களுடைய விலாசத்தை கேட்டு எழுதி வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு எந்தவித அறிமுகமும் வேண்டாம் என்றும், கர்த்தருடைய வார்த்தை உலக தமிழ் மக்களுக்கு கடந்து செல்ல வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன் இந்த ஊழியத்தை செய்து வருகிறோம். . ஒரு நல்ல ஆவிக்குரிய சபையில் பல ஆண்டுகளாக, நல்ல மேய்ப்பரின் கீழ் இருந்து, கர்த்தருடைய வார்த்தைகளை கற்று கொண்டு (எல்லாவற்றையும் கற்று கொண்டு விட்டோம் என்று ஒரு போதும் நினைக்கிறதில்லை, கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு) தேவனுக்கு ஏதாவது ஒரு வகையில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு குழுவாக, ஒரு குடும்பமாக தேவன் எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை உஙகளோடுகூட பகிர்ந்து கொள்கிறோம். 'எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்' (1கொரிந்தியர் 1:26,27) என்ற வார்த்தையின்படி, கர்த்தர் ஒன்றுமில்லாத எங்களையும் தமது மகத்துவமான ஊழியத்தை செய்யும்படி தெரிந்து கொண்டார். அவருடைய அதிசயமான நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. நாங்கள் உலக வேலை செய்து கொண்டே இந்த ஊழியத்தையும் செய்கிறோம். அதற்காக எங்களுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். . நம்மில் அநேகர் 'கர்த்தருடைய ஊழியத்தை செய்ய எனக்கு எந்த தகுதியும் இல்லை' என்று பின்வாங்குகிறோம். முன் வாருங்கள். பேச வேண்டிய வார்த்தையை அவர் உங்கள் வாயில் வைப்பார். நீங்கள் 'முடிவு வரை தேவனை மட்டுமே நோக்கி பார்ப்பேன்'; என்ற உறுதி எடுங்கள். வழியில் வரும் உலகத்தையோ, பணத்தையோ, பெயரையோ, முதன்மையான இடத்தையோ நோக்காமல் கர்த்தரை மாத்திரம் நோக்கி பார்த்து, அவருடைய ஊழியத்தை உண்மையாய் செய்யுங்கள். உண்மையான மனத்தாழ்மையை மட்டுமே முதலீடாக கொண்டு நீங்கள் கர்த்தருக்கு ஊழியம்செய்யும்போது, கர்த்தர் உங்களை கொண்டும் பெரிய காரியங்களை செய்ய முடியும். தேவன் நமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை தேவ நாம மகிமைக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கர்த்தருக்கென்று இந்த கடைசி நாட்களில் பெரிய காரியங்களை செய்வோம். கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும். ஆமென் அல்லேலூயா! . இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் ஒவ்வொருவரும் கர்த்தருக்கென்று ஏதாவது செய்யும்போதுதான் நம் தேசம் சந்திக்கப்படும், மாயையை நம்பியிருக்கிற மக்கள் இருளிலிருந்து வெளிச்சமாகிய இயேசுவினிடத்தில் வர முடியும். ஒன்றாக இணைவோம். தேசத்தை கர்த்தருக்கு சொந்தமாக்குவோம். . காரிருள் நம்மை சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார் ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் உலகின் ஒளி நாமே . |