சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். - (பிலிப்பியர் 3:13-14). . மூன்று பேர் ஒவ்வொருவரும் தங்கள் முன்பாக ஒரு மூட்டையையும், தங்கள் பின்பாக ஒரு மூட்டையையும் கட்டிக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் 'நீ கொண்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்ன?' என்று மற்றவனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அவன், 'எனக்கு பின்பாக இருக்கிற மூட்டையில் என் நண்பர்கள், என் குடும்பத்தார் செய்த நன்மைகளை போட்டிருக்கிறேன். அவை என் முதுகுக்கு பின்பாக இருப்பதால் நான் அவைகளை அதிகமாக நினைக்கிறதில்லை. என் முன்பாக இருக்கிற மூட்டையில் ஒவ்வொருவர் எனக்கு செய்த தீமைகளையும், அவர்கள் எனக்கு எதிராக பேசின பேச்சுகளையும், அவர்கள் செய்த காரியங்களையும் போட்டு வைத்திருக்கிறேன். அடிக்கடி அவற்றை திறந்து பார்த்து, அவைகளை ஏன் எனக்கு செய்தார்கள் என்று யோசித்துப் பார்ப்பேன். என் மனது கோபத்தால் பொங்குவதால், என்னால் வேகமாக முன் செல்ல முடியவில்லை. . நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்' என்று மற்றவனிடம் கேட்டான். அதற்கு மற்றவன், 'உன்னை மாதிரியே நானும் சில காரியங்களை இந்த மூட்டையில் போட்டு சுமக்க முடியாமல் சென்றுக் கொண்டிருக்கிறேன். முன்பாக இருக்கிற மூட்டையில் மற்றவர்கள் செய்த நன்மைகளையும், அவர்கள் எனக்காக செய்த காரியங்களையும் போட்டு வைத்திருக்கிறேன். அடிக்கடி நின்று அவர்கள் எனக்கு செய்த காரியங்களை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி, சென்று கொண்டிருக்கிறேன். பின்னாக இருக்கும் மூட்டையில் நான் செய்த தவறுகள், தவறான முடிவுகள், பாவங்கள் எல்லாவற்றையும் போட்டு வைத்திருக்கிறேன். அது மிகவும் கனமாக இருப்பதால் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை' என்று சொல்லிவிட்டு மூன்றாவதாக நடந்து தங்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிற மனிதரைப் பார்த்து 'நீர் என்ன கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறீர்' என்று கேட்டான். . மூன்றாவது மனிதர் 'எனக்கு முன்பாக இருக்கிற மூட்டையில் கர்;த்தர் எனக்கு செய்த நன்மைகள், மற்றவர்கள் எனக்கு செய்த நன்மைகள், நல்ல சிந்தனைகள் இவற்றை எல்லாம் போட்டு வைத்திருப்பதால் அது என்னை வேகமாக முன்னோக்கி நடக்க உதவுகிறது. எனக்கு பின்பாக இருக்கிற மூட்டையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் அதன் கீழே பெரிய ஓட்டை போட்டிருக்கிறேன். அதில் மற்றவர்கள் என்னைப் பற்றி சொல்லும் காரியங்கள், மற்றவர்களைப் பற்றி சொல்லப்படும் காரியங்கள் இப்படி கெட்ட காரியங்களை போடுகிறேன். அது வந்தமாதிரியே கீழே ஓட்டை வழியாக போய் விடும். எனக்கு எந்த தேவையற்ற எடையும் கிடையாது. ஆகையால் நான் முன்னோக்கி வேகமாய் செல்லகிறேன்' என்று கூறினார். . பிரியமானவர்களே நாம் இதில் எந்த மூட்டையை சுமந்துக் கொண்டிருக்கிறோம்? நம்மில் அநேகர் இந்த தேவையற்ற மூட்டைகளையே நம் மனதில் சுமந்துக் கொண்டு நாள்தோறும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தேவையற்ற காரியங்களை நம் இருதயத்தில் சுமந்து சென்றுக் கொண்டிருப்போமானால் கர்த்தருக்குள் நம் ஓட்டம் தடைபடும். பாதியிலேயே எடை மிகுதியால் நின்று விடுவோம். ஆனால் கடைசி மனிதரைப் போல கர்த்தரை துதிக்கும் துதியோடும், நன்றியறிதலோடும், மற்றவர்கள் செய்த நன்மைகளை மறவாமல் அவற்றை நினைத்து, கர்த்தருக்கு நன்றி செலுத்தியும், மற்றவர்கள் நம்மைக் குறித்து தவறாய் சொல்லுகிற காரியங்களுக்கு செவி கொடுக்காமல், கர்த்தருக்கும், நம்முடைய மனசாட்சிக்கும் விரோதமாக எதையும் செய்யாமல், போவோமானால் நம் ஓட்டம் நிலையாக இருக்கும். பந்தயப் பொருளை குறித்த நேரத்தில் சென்று அடைவோம். . 'ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்' (எபிரேயர் 12:1) என்ற வசனத்தின்படி, நாம் செல்வோமானால், நிச்சயமாக அக்கரைப் போய் சேர்வோம் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. . ஆகையால் தேவையற்ற, பாரமான யாவற்றையும் நம்மை சுற்றி நெருக்குகின்ற பாவத்தையும், மற்ற காரியங்களையும் புறம்பே தள்ளிவிட்டு, கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற ஓட்டத்தை பொறுமையோடே ஓடி முடிக்க தேவன் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! . சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறி தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன் . கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன்செல்லுவோம் |