ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன், என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். - (அப்போஸ்தலர் 20:24) . . ஒரு முப்பது வயது வாலிபன் அந்த வயது வரை உலக இன்பங்களை அனுபவித்து விட்டு ஒரு கொடிய வியாதி தாக்கியதால் மரணப்படுக்கையில் இருந்தான். அவனை ஒரு அருமையான் ஊழியர் கண்டு கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். அவன் கண்ணீரோடு தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். அடுத்தநாள் அந்த ஊழியர் அவனை பார்க்க வந்தபோது அந்த வாலிபன் சோகமாகவும் துயரத்திலும் இருப்பதைக் கண்டார். அவனிடம் "ஏன் மகனே, நீ இரட்சிக்கப்பட்டதைக் குறித்து சந்தேகப்படுகிறாயா? நீ தேவனை சந்திக்க பயப்படுகிறாயா? " என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன் உணர்ச்சி பெருக்கோடு," இல்லை, நான் மரிப்பதற்கு பயப்படவில்லை. நான் இவ்வளவு நாட்கள் தேவனுக்காக ஒரு காரியம் கூட செய்யாமல் என் வாழ்நாளை வீணடித்துவிட்டேனே! வெறுங்கையனாய் நான் என் தேவனை எப்படி சந்திப்பேன் என்று கதறினானாம்!! . இந்தக்காரியத்தை அந்த ஊழியர் மூலம் கேள்விப்பட்ட லூத்தர் என்னும் பாடலாசிரியர் தொடப்பட்டு, இந்தப பாடலை இயற்றினார்: . ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா வெறுங்கையனாக உம்மை கண்டுகொள்ளல் ஆகுமா? . இன்றைய நாளில் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரு சவால், Each one Catch one. நம்மால் முடிந்தவரை ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோமாக. . பவுல் அப்போஸ்தலன் சொல்வதைப் போல், பிராணனையும் அருமையாக எண்ணாமல், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும், சுவிசேஷத்தை அறிவித்து, கர்த்தருக்கென்று எதையாவது செய்து, நம்முடைய ஓட்டத்தை சந்தோஷமாய் ஓடி முடிக்க, தேவனுக்கென்று ஒரு தீர்மானம் எடுப்போமா? |