ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். - (ஆதியாகமம் 5:24). . இந்நாட்களில் நம் ஊர்களில், மக்கள் காலை நேரத்திலும் மற்றும் மாலை நேரங்களிலும் உடற்பயிற்சிக்காக நடப்பதை காணலாம். என்றுமில்லாத அளவு, மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து, தினமும் சற்று தூரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து, நடக்கிறதை காண்கிறோம். கிராமங்களில் கூட இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். . கால் முட்டு வலி என்ற டாக்டரிடம் போனால், முதலில் எடையை குறையுங்கள். அதற்காக தினமும் நடங்கள் என்று டாக்டர் சொல்கிறார், கொலஸ்ட்ரால் கூடிப் போனால் தினமும் நடங்கள் என்று டாக்டர் அறிவுரை கூறுகிறார். இப்படி மக்கள் தங்கள் இறுக்கத்தை குறைக்கவும், எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் நடந்து வருகிறார்கள். செலவில்லாத, மற்ற எந்த உடற்பயிற்சியை காட்டிலும் சிறந்த பயிற்சியாக இந்த நடையை கூறுகிறார்கள். முதலில் நடையை மெதுவாக ஆரம்பித்து தினமும் கொஞ்ச கொஞ்சமாக அதிகப்படுத்தவது நல்லது என்றும், அதில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். சிலர் தன்னோடு ஒரு நபரை கூட்டி நடக்கும்போது இன்னும் கொஞ்சம் அதிக தூரம் நடக்கலாம் என்று நினைக்கின்றனர். . உலகப்பிரகாரமாக உடல் ஆராக்கியத்திற்கு நடப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு தேவனோடு நாம் நடப்பது மிகவும் முக்கியம். நீங்கள் நினைக்கலாம், தேவனோடு நாம் நடப்பதா? அது எப்படி சாத்தியம் என்று. ஏனோக்கு தேவனோடு நடந்தார் என்று வேதம் கூறுகிறது. ஆங்கில வேதாகமத்தில் 'சஞ்சரித்து' என்ற வார்த்தைக்கு 'நடந்தார்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால் தேவனோடு நாம் நெருங்கிய வளரும் உறவை வைத்து கொள்ள முடியும் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். ஈனோக்கு ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, 300 வருடங்கள் நடந்தார் (ஆதியாகமம் 5:22) என்று வசனம் சொல்கிறது. ஏனோக்கின் நாளெல்லாம் 365 வருடங்கள்தான். அதில் 300 வருடங்;கள் அவர் தேவனோடு சஞ்சரித்து கொண்டிருந்து, முடிவில் தேவன் அவரை தம்மோடே என்றென்றும் வைத்து கொள்ளும்படி அவரை எடுத்து கொண்டபடியால் அவர் காணப்படாமற் போனார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அப்படி அவர்கள் நடந்திருக்கும்போது தேவன் தம் இருதயத்தில் உள்ள எல்லா காரியங்களையும், அவரோடு கூட பகிர்ந்திருப்பார். தினமும் அவரோடு நடந்தபடியே எத்தனையோ காரியங்களை குறித்து அவரோடு கூட தேவன் பேசியிருந்திருப்பார். அவருடைய கொள்ளு பேரனுடைய அதாவது நோவாவின் காலத்தில் தாம் எப்படி வெள்ளத்தினால் இந்த உலகத்தை அழிக்க போகிறாரென்பதையும் கூட ஏனோக்கோடே கூட பகிர்ந்திருப்பார்.. மட்டுமல்ல விசுவாசிகளின் பட்டியல் அடங்கிய எபிரேயர் 11ம் அதிகாரத்தில் ஈனோக்கின் பெயரும் இருப்பதுமன்றி, அவர் தேவனுக்கு பிரியமானவரென்று சாட்சியும் தேவனால் பெற்றார் என்று வசனத்தில் பார்க்கிறோம். 'விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்' - (எபிரேயர் - 11:5). . கர்த்தரோடு நடப்பது என்பது, அவரோடு கூட ஒருமனப்படுவது. முன்பாகவோ பின்பாக தூரமாக செல்லாமல், அவரோடு கூட நடப்பதாகும். அவரோடு நடக்கும்போது, அவரோடு பேசும்போது, அவர் சொல்வதை கேட்கும்போது, அவருடைய பிரசன்னத்தை நாம் உணரும்போது, அது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும். சீஷர்களில் இரண்டுபேர், இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்தபின், அதை அறியாதவர்களாக, எருசலேமிலிருந்து, எம்மாவு என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். தேவனுடைய வீடாகிய எருசலேமிலிருந்து, தூரமாய் எம்மாவு என்ற ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். அப்படி நடக்கும்போது, அவர் இயேசு என்று அறியாதபடி அவர்கள் அவரோடு பேசி கெர்ண்டே நடந்து கொண்டிருந்தார்கள். 'அப்போது அவர் மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய்' (லூக்கா 26:27-33) சந்தோஷப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம். இயேசு நம்மோடு நடக்கும்போது, அவர் நமக்கு சொல்லி கொடுக்கும் காரியங்களால் நம் இருதயம் கொழுந்து விட்டு எரியும். யாரும் கொடுக்க முடியாத சந்தோஷத்தினால் சமாதானத்தினால் நம் இருதயம் நிரம்பும். அவரோடு நடக்கும் ஒவ்வொரு அடியும், நமக்கு திருப்பு முனையாக அமையும். அவரோடு நடக்கும்போது நம் வழிகள் சரியான பாதையில் செல்லும். பாவ வழியிலிருந்து தேவனுடைய வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கும். ஆமென் அல்லேலூயா! . கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன்செல்லுவோம் சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறி தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன் .
|