கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். - (சங்கீதம் 34:1). . சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்து நாட்டில் தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு வாலிபனிருந்தான். அவனது நாக்கில் சில புண்கள் வந்து அவைகள் குணமாகாமல் நீண்ட நாட்களாக மிகவும் சிரமப்பட்டான். ஆகவே மருத்துவமனை சென்று மருத்துவ ஆலோசனை பெற்றபோது, பரிசோதனை செய்த மருத்துவர் அவனது நாக்கு புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டார். அவனது பெற்றோரிடமும், அவனிடமும் மிகவும் பரிவாக பேசிய அவர், 'இந்த வாலிபன் உயிரோடு இருக்க வேண்டுமானால், அவனது நாவை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அப்படி எடுக்கும்போது அவனால் மீண்டும் பேசவே முடியாது' என்று கூறினார். . அதை கேட்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் அந்த வாலிபனின் முகத்தை பார்க்க, அவன் அவர்கள் முகத்தை பார்க்க, வேதனையோடு என்ன செய்வது என்று திகைத்த வேளையில் மருத்துவர் ஆபரேஷன் உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறினார். வெகு போராட்டத்திற்குப்பின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர். . ஆபரேஷனுக்கான நாள் குறித்து, அதற்காக ஆயத்தங்கள் ஆரம்பமாயின. அந்த நாளும் வந்தது. அறுவை சிகிச்சை அறைக்கு செல்வதற்குமுன் மருத்துவர் பெற்றோரை அழைத்து, 'மகனே. நீ கடைசியாக உன் பெற்றோருக்கு எதையாவது சொல்ல ஆசைப்படுகிறாயா? ஏனெனில் நீ பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கும்' என்று கேட்டார். . ஒரு சில நொடிகள் மௌனமாக இருந்த அவனுக்குள் இம்மட்டும் தன்னை வழிநடத்தின தேவனை தன் வாயினால் புகழ்ந்து பாடவேண்டும் என்று தோன்றியது. எல்லாரும் அவனையே நோக்கி பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனது முகம் பிரகாசமாய் ஜொலிப்பதை கண்டார்கள். அவன் பாட ஆரம்பித்தான். . இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவ தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே . மாபாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான் . அவ்வாறே நானும் இயேசுவால் விமோசனம் பெற்றேன் என்பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன் . என்று அவன் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர். அவன் பாடிய பாடலிலிருந்து அவன் தன் இரட்சகரின் மேல் எத்தனை அன்பு வைத்திருந்தான் என்று விளங்கியது. . அந்த முழுப்பாடலையும் அவன் பாடினப்பின்பு அவனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்தது. ஆனால் அவன் திரும்ப எழுந்தரிக்கவே இல்லை. தன் அன்பு நேசரை புகழ்ந்து பாட பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். நாம் ஒவ்வொரு சாவிலும் இந்த பாட்டை பாடினாலும், அதன் பின் இருக்கும் சம்பவத்தை உணர்ந்து பாடும்போது, அது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும். . பிரியமானவர்களே, நாம் நம் நாவை எப்படி உபயோகிக்கிறோம்? தாவீது இராஜா சொல்கிறார், 'கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்' என்று. வெகுவாய் அலுவல் நிறைந்த ஒரு இராஜாவே அப்படி சொல்லும்போது, நாம் எத்தனையாய் அவரை துதிக்க வேண்டும்? நம் வாயில் எப்போதும் கர்த்தரை துதிக்கும் துதி இருக்கும்போது, கெட்ட சிந்தனைகளோ, கெட்ட யோசனைகளோ, கெட்ட செய்கைகளோ நம்மை நெருங்க முடியாது. . முறுமுறுப்பையும், கோப வார்த்தைகளையும், புறங்கூறுதலையும், கோள் சொல்லுகிறதையும், மற்றவர்களைக் குறித்து தவறாக தூற்றி திரிதலையும் விட்டுவிட்டு, கர்த்தரை துதிக்கிற துதியை நம் நாவில் வைப்போம். துதி பெருக பெருக கர்த்தருடைய கிருபை நம் வாழ்வில் பெருக ஆரம்பிக்கும். நம் வாழ்வு செழிக்க ஆரம்பிக்கும். ஆமென் அல்லேலூயா! . காயத்தில் ஓடும் இரத்தத்தை விசுவாசத்தால் கண்டேன் ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன் நான் . இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவ தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே |