'உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்' - தானியேல் 4:17 இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ளன. கர்த்தர் தமது சித்தத்தின்படி ஆட்சியை அமர்த்தி இருக்கிறார். 'உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்' என்று வேதத்தில் வாசிக்கிறோம். நமது தேவனுடைய சித்தமில்லாமல் ஒன்றும் நடப்பதில்லை. . ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம். கர்த்தர் ஆட்சி செய்பவர்களோடு இடைப்பட்டு, அவருடைய சித்தம் நிறைவேறும்படியாக, இந்தியா இயேசுவுக்கே என்று மாறும்படியாக தொடர்ந்து ஜெபிப்போம். . சிறுபான்மையானவர்களுக்கு எந்தவித இடையூறும், பிரச்சனைகளும் வராதபடி, தடைமாற்ற சட்டம் எந்த மாநிலத்திலும் நிறைவேறாதபடி, கிறிஸ்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடி இந்த அரசாங்கம் விசேஷித்த கவனத்தை செலுத்தும்படி ஜெபிப்போம். . வேதத்தில் நாம் வாசிப்போமானால், தேவனுக்கு பிரியமானவர்களும், தேவனை வெறுத்தவர்களும், அவரை தொழுதுகொள்ளாமல், மற்ற தெய்வங்களை தொழுது கொள்ளுகிறவர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் தேவன் தம் பிள்ளைகளுக்கு தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரிப்புக் கொடுத்து, கர்த்தரை விட்டு விலகாதிருக்கும்படி சொல்லி வந்தார். . இஸ்ரவேலை ஆண்ட இருபது இராஜாக்களும் மோசமானவர்களும், யூதாவை ஆண்ட இருபது இராஜாக்களில் எட்டுப்பேர் கர்த்தருக்கு பயந்தவர்களும், பன்னிரண்டுப்பேர் கர்ததருடைய வழிகளை விட்டு விலகினவர்களுமாயிருந்தார்கள். ஆனாலும் கர்த்தர் ஒவ்வொருவருடைய வழிகளையும் ஆராய்ந்து, அவர்களுடைய செய்கைகளுக்கு தக்கதாக அவர்ளை தண்டித்தும், எச்சரித்தும் வந்தார். . நம் நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவானது என்றாலும், அநேக புறமதத்தவர்கள் கர்த்தரை ஏற்றுக் கொண்டு இரகசிய கிறிஸ்தவர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை யாரும் கணக்கிட முடியாது. அவர்களோடும் கர்த்தர் இடைபட்டு வருகிறார். . யார் ஆளுகை செய்தாலும் கர்த்தருடைய ஆளுகை அந்தந்த தேசத்தில் இருப்பதை மறுக்க முடியாது. அது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இந்துக்களின் நாடாக இருந்தாலும், கம்யூனிச நாடாக இருந்தாலும், கர்த்தருடைய ஆளுகை எல்லா இடத்திலும் இருப்பதை அங்குள்ள கிறிஸ்தவர்களின் சாட்சிகளின் மூலம் நாம் அறியலாம். எந்த இடத்தில் இருந்தாலும் கர்த்தர் தம் ஜனத்தை காத்துக் கொள்கிறார். அவர்களின் தேவைகளை சந்திக்கிறார். . ஐயோ இந்த ஆட்சி வந்து விட்டதே, ஒரு வேளை இந்த அரசின் நிமித்தம் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவங்கள் வருமே என்று நாம் கலங்க வேண்டியதில்லை. அந்த ஒடுக்குதல் கிறிஸ்தவர்கள் இன்னும் பலுகி பெருகவே உதவும். இஸ்ரவேலரை தங்கள் தேவனை ஆராதனை செய்ய அனுப்ப வேண்டும் என்று மோசேயும் ஆரோனும் கேட்டுக் கொண்டதினிமித்தம், எகிப்தியர் அவர்களை அதிக வேலை வாங்கி, ஒடுக்க ஆரம்பித்தார்கள். 'ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்' (யாத்திராகமம் 1:12) என்று வேதம் கூறுகிறது. மட்டுமல்ல, இஸ்ரலேரை ஒடுக்கின எகிப்தியரை நாம் அதன்பின் காணவே இல்லை. ஆனால் இஸ்ரவேலரோ அநேக அதிசயங்களை கண்டு, வாக்குதத்தம் செய்யப்பட்ட கானானுக்குள் நுழைந்தார்கள். ஆகவே ஒடுக்குகிறவர்கள் ஓய்ந்து போவார்கள், நாமோ பலுகி பெருகுவோம். அல்லேலூயா! . சபையானது இன்னும் அதிகமாய் விழித்திருந்து ஜெபிக்க வேண்டிய காலக்கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். நாம் ஜெபிக்க தவறினால் எதிரி பெலன் கொள்ளுவான். ஜெபிப்போம் வெற்றியை சுதந்தரிப்போம். ஆமென் அல்லேலூயா! . கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே . ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே சோர்ந்து போகாதே – நீ . அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் |