கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். - (சங்கீதம் 34:8). . சிக்காகோவில் நடந்த ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு நாத்திகவாதி, கடவுளே இல்லை என்றும், கிறிஸ்துவைக் குறித்தும் கேலியாக பேசி பெரிய பிரசங்கத்தை நடத்தினான். கூட்டம் முடிந்தபின், 'நான் பேசின காரியத்தை குறித்து, யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்விகள் கேட்கலாம்' என்றும் மேடைக்கு அழைத்தான். யாரும் முன் வரவில்லை. . ஒரு சரியான குடிகாரனாக இருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட மனிதர் ஒருவர் ஒரு ஆரஞ்சு பழத்தை கையில் எடுத்து கொண்டு மேடையின் மேல் ஏறினார். பின் அந்த ஆரஞ்சு பழத்தை உரித்து சாப்பிட தொடங்கினார். மெதுவாக அந்த பழத்தை சாப்பிட்டு முடித்துவிட்டு, அந்த நாத்திகவாதியை நோக்கி, 'இந்த பழம் புளிப்பாக இருந்ததா? அல்லது இனிப்பாக இருந்ததா' என்று கேட்டார். அதை கேட்ட நாத்திகவாதி கோபத்துடன், 'நானா சாப்பிட்டேன்? நீ தானே சாப்பிட்டாய், பின் என்னிடத்தில் பழம் எப்படி இருந்தது என்று எப்படி கேட்கிறாய்? என்று கேட்டான். அப்போது அந்த கிறிஸ்தவர், 'அதைப்போலத்தான் கிறிஸ்துவை ருசித்து பார்க்காத நீர் அவர் இல்லை என்று எப்படி கூற முடியும்?' என்று கேட்ட போது அந்த நாத்திகவாதியால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. . ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை ருசி பார்க்காதவராயிருந்தால், இன்று வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம். அந்த ஆரஞ்சு பழத்தை ருசி பார்க்காதவரை அது எப்படி இருக்கும் என்று ஒருவர் அறியாததைப் போல கிறிஸ்துவை ருசி பார்க்காதவரை உங்களுக்கு அவர் எப்படி இருப்பார் என்று தெரியாது. . 'பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை' (யோவான் 6:37) என்று இயேசுகிறிஸ்து கூறினார். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று எந்த பாவியையும் தள்ளாத தெய்வம் இயேசுகிறிஸ்து ஒருவரே! அவரை ஏற்றுக்கொள்ளுகிற எவரையும் அன்போடு அரவணைத்து, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கிற தெய்வம் இயேசு ஒருவரே! . உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி இயேசுகிறிஸ்துவே. அவரையன்றி ஒரு மனிதனுக்குள் ஒளி பிரகாசிப்பதில்லை. அவரை ஏற்றுக்கொள்ளாத மனிதன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். அவனுக்குள் ஒளி இல்லை. . இயேசுகிறிஸ்துவேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்போஸ்தலர் நடபடிகள் 4:12). . நாம் எல்லாரும் பாவம் செய்து தேவனுடைய வழிகளை விட்டு மாறிப்போனோம். நாம் செய்த பாவங்களுக்கு நமக்கு தண்டனையாக நரகமும் வேதனைகளும்தான். ஆனால் தேவன் நம்மேல் கிருபையுள்ளவராக நம்மை அந்த ஆக்கினை தீர்ப்புக்கு நீங்கலாக்கி, நம்மேல் அன்புகூர்ந்தபடியால், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16). அவர் அருளும் இரட்சிப்பு இலவசம். எந்த காணிக்கையும், எந்த பலிகளையும் செலுத்த தேவையில்லை. ஏனெனில் பாவமற்ற தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நமக்காக பாவமாகி, சிலுவையில் தமது கடைசி சொட்டு இரத்தத்தையம் சிந்தி அங்கு அவர் மரித்தார். ஆனாலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து, இப்போது தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்து நமக்காக பரிந்து பேசி கொண்டிருக்கிறார். நாம் சிந்த வேண்டிய இரத்தத்திற்கு பதிலாக நாம் பட வேண்டிய பாடுகளுக்கு பதிலாக கிறிஸ்து அதை சுமந்து தீர்த்துவிட்டபடியால், நாம் அதை சுமக்க வேண்டியதில்லை. இலவசமாய் அந்த இரட்சிப்பு அளிக்கப்பட்டிருக்கிறபடியால், நாம் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை ருசித்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம். . அவரை ஏற்கனவே ருசித்து பார்த்திருக்கிற நாங்கள், அவர் நல்லவர், பாவங்களை மன்னிக்கிறவர், உலகம் கொடுக்கக்கூடாத சமாதானததை கொடுக்கிறவர், நம்மை ஆசீர்வதிப்பவர், நம்முடைய பரிகாரி, நம்மோடு கூட என்றும் இருக்கிறவர், நம் கூட இருந்து ஆலோசனை சொல்லி நடக்க வேண்டிய வழியை காட்டுகிறவர் என்று இன்னும் அநேக காரியங்களை அவரைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம் .. இன்று அவரை ஏற்று கொள்வீர்களாகில், கீழ்க்கண்ட ஜெபத்தை உள்ளத்தில் விசுவாசத்தோடு கூறுவீர்களாகில் நீங்களும் இந்த அன்பின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராவீர்கள். . இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரனில்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் |