ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.-(யோவான் 15:13) . ஒரு மிலிடரி டிரெயினிங் கல்லூரியில் ஒரு நாள் அங்கு சொல்லிக் கொடுப்பவர், புதிதாய் சேர்ந்திருந்த மாணவர்கள் ஒன்றாய் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது ஒரு கைகுண்டை எடுத்து வீசினார். உடனே அந்த மாணவர்கள் பயந்து, ஓடி ஒளிந்தார்கள். அந்த அதிகாரி சிரித்துக் கொண்டே வெளியே வந்து, 'இந்த குண்டு வெடிக்காது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றுப் பார்க்கவே அதை வீசினேன்' என்றார். . அடுத்த நாள் ஒரு புதிய மாணவன் வந்து சேர்ந்தான். அந்த அதிகாரி மீண்டும் கைகுண்டை எடுத்து வீசினார். முந்தின நாள் சம்பவம் எதுவும் அறியாத அந்த மாணவன், உடனே அந்த குண்டின் மேல் பாய்ந்து அதன் மேல் படுத்துக் கொண்டு, அந்த குண்டு வெடித்தாலும் தன் மீது வெடிக்கட்டும், மற்ற மாணவர்கள் காக்கப்படட்டும் என்று மற்றவர்களை காப்பாற்ற முயற்சித்தான். . பிறகுதான் தெரிய வந்தது அது வெடிக்காத குண்டு என்று. அவன் செய்த செயலை பாராட்டி அவனுக்கு அந்த வருடத்தின் வீர விருது வழங்கப்பட்டது. . இயேசுகிறிஸ்து சொன்னார், 'ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை' என்று. நம்மை அவர் தம்முடைய சிநேகிதர் என்றார். 'இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்' (யோவான் 15:15). அப்படி நம்மை சிநேகிதர் என்று அறிவித்த இயேசுகிறிஸ்து நமக்காக தம் ஜீவனையே கொடுத்து, தம்முடைய அன்பை விளங்கப்பண்ணினார். . சமீபத்தில் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் போரில் ஈடுபட்டு தன் உயிரை தியாகமாக கொடுத்த மேஜர் முகுந்த்தை இழந்து அவரது இளவயது மனைவியும், மூன்று வயது பிள்ளையும், அவருடைய பெற்றோரும் எவ்வளவாய் வேதனைப்பட்டிருப்பார்கள்? நம் தேசத்திற்காக, மொழி;க்காக இனத்திற்காக உயிரை கொடுத்தவர்கள், தியாகிகள் ஏராளம் உண்டு. அவர்களை நாம் சில வேளைகளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். . ஆனால் 'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்' (ரோமர் 5:8) ஆம், நாம் நல்லவர்களாக இருக்கும்போதல்ல, நாம் பாவிகளாயிருக்கும்போது, அவர் நமக்காக சிலுவையில் தம் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, தம் ஜீவனை நமக்காக விலைக்கிரயமாக கொடுத்து, நம்மை மீட்டு, பரலோக இராஜ்யத்திற்கு சொந்தமாக்கினாரே, அந்த தியாகம் மற்ற எந்த தியாகத்திலும் விசேஷித்தது. அருமையானது, அதற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை இல்லை இல்லவே இல்லை. . அந்த விலையேறப்பெற்ற அன்பை பெற்றுக் கொண்ட நாம் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக நேசிப்போமா? அந்த அன்பை பெரிய வியாழன், துக்க வெள்ளி நாட்களில் மட்டும் நினைவு கூராமல், என்றும் நினைத்து, அவருக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போமா? ஒவ்வொரு நாளும் அவருடைய தியாகத்தை நினைத்து அவரை என்றென்றும் துதித்து அவருடைய மகிமைக்காக வாழ தேவன் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! . என் மீறுதட்கட்காய் இயேசு காயங்கள் பட்டார் என் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் எனக்காகவே அடிகள் பட்டார் என்னை உயர்த்த தம்மை தாழ்த்தினார் இயேசுகிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசுகிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது |