நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (கலாத்தியர். - 5:15). . ஜெர்மன் நாட்டில் போபன்ஷோசன் என்ற இடத்தில் பழங்கால மடாலயம் ஒன்றுண்டு. இன்று அது சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாக உளளது. இங்குள்ள ஒரு அறையில் மான் கொம்புகள் இரண்டு ஜோடி இருப்பதை காணலாம். ஓன்றோடென்று பின்னப்பட்ட இரண்டு ஜோடி மான் கொம்புகள் இருப்பதைக் காணலாம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டுப்;பகுதியில் கிடைக்க பெற்றன. அநேகமாக இரண்டு மான்கள் ஒன்றோடொன்று முட்டி சண்டையிட்டபோது பிரிக்க முடியாதபடி கொம்புகள் சிக்கி கொண்டிருக்க கூடும். பின்பு சிக்கிய நிலையில் புல் மேயாதபடி தண்ணீர் குடிக்க முடியாதபடி அவ்விரண்டும் உயிர் இழந்திருக்க கூடும். அந்த மான்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து இரண்டும் சேர்ந்து புல் மேயவும், தண்ணீர் குடிக்கவும் முயற்சித்திருக்குமானால், ஒரு வேளை உயிர் பிழைத்திருக்கலாம். ஏன் கொம்புகளின் சிக்குண்ட நிலை கூட விடுபட்டிருக்கலாம். ஆனால் பரிதாபம் அவை மரித்து போயின. . இந்த மான்கள் இரண்டும் முட்டி மோதி சிக்குண்டு அழிந்தது போல இன்றைய சமுதாயத்தில் மனிதர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட சம்பவங்களை பார்க்கிறோம். பள்ளிகளில் மாணவர்களுக்குள் பிரச்சனை, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர்களுக்குள் பிரச்சனை, வீட்டிற்குள் கணவன் மனைவி, பிள்ளைகளுக்குள் பிரச்சனை என்று அடுக்கிகொண்டே போகலாம். இப்படி பிரச்சனை உருவாகும்போது, ஒருவர் மற்றவரை மன்னிக்க முடியாமல் கோபமும், சண்டைகளும் எழுகின்றன. அந்த சண்டை சச்சரவுகள் ஓய்ந்த பின்பும் ஒருவரையொருவர் மன்னிக்க முடியாமல் கசப்பிலே தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர். . இப்படி இரு நபர்களுக்குள் கசப்புகள் இருக்கும்போது, ஒருவர் மற்றவர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று எதிர்பார்த்து காலத்தை கசப்புடனே கழிக்கின்றனர். இச்செய்தியை வாசிக்கும் அருமையானவர்களே, உங்களுக்கும் மற்ற யாருடனாவது பிரச்சனை பிரிவினை உண்டா? அந்த மான்களின் நிலையைப் போல நீங்களும் வாழ்க்கையில் சிக்குண்டு சமாதானத்தை இழந்து காணப்படுகிறீர்களா? இதற்கு ஒரு தீர்வு உண்டு. அது என்ன? பாதிக்கப்பட்ட நீங்கள் முதலாவது சென்று மற்ற நபரிடம் மன்னிப்பு கேட்டு பாருங்களேன். நீங்கள் ஒப்புரவாக விரும்புவது போல அந்த நபரும் ஒப்புரவாக வாஞ்சையாயிருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஒருவேளை அந்த நபர் சமாதானத்திற்கு உடன்பட மறுத்தாலும் அவரிடம் தாழ்ந்து போனதினால் உங்கள் இருதயம்; சமாதானத்தினால் நிரம்பும். பிறர் குற்றத்தை நான் மன்னித்தது போல ஆண்டவரே என்னையும் மன்னியும் என்று தைரியமாய் தேவனை நோக்கி ஜெபிக்கலாம். கொஞ்சகாலம் வாழப்போகும் இந்த பூமியில் பிறர் மேல் உள்ள கசப்புணர்வுகளை களைந்து மனதார மன்னித்து சமாதானத்தோடு வாழ பிரயாசமெடுப்போம். . வேதாகமத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை எப்படி தீர்ந்தது என்று பார்ப்போம். யாக்கோபு தன் சகோதரன் ஏசாவையும், தன்தகப்பனையும் ஏமாற்றி, ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு, தன் மாமனாகிய லாபானிடத்திற்கு ஓடி, அங்கு இருபது வருஷம் இருந்து விட்டு திரும்ப வீடு திரும்பும் நேரத்தில், தன் சகோதரனாகிய ஏசா தன்னை என்ன செய்வானோ என்று பயந்தவனாக செல்லும் நேரத்தில், 'என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்' என்று கர்த்தரிடம் பாதுகாவலை கேட்டு ஜெபித்து, 'அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, தன் வேலைக்காரனிடத்தில் கொடுத்து, இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல்' என்றான். பின்னர் அவன் ஏசாவை கண்டபோது, தான் தன் பிள்ளைகள், மனைவிகளுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள் (ஆதியாகமம் 32-33). இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் தங்கள் இடங்களுக்கு திரும்பி போனார்கள் என்று பார்க்கிறோம். ஒருவேளை ஏசா யாக்கோபை மன்னியாதிருந்திருந்தால், அந்த இடத்திலே தானே, யாக்கோபின் கோத்திரம் அழிந்திருக்கும். இஸ்ரவேலின் சந்ததி இல்லாமல் போயிருந்திருக்கும், கிறிஸ்து உலகிலே தோன்றாதபடி தடை ஏற்பட்டிருக்கும். தேவன் அப்படி நேரிடாதபடி, ஏசா யாக்கோபை மன்னிக்க கிருபை செய்தார். . நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஆனால் ஒருவரையொருவர் மன்னித்து வாழ்ந்தால், நிச்சயமாகவே செழிப்பீர்கள். நாம் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் வாழ தேவன் தாமே கிருபை செய்வாராக! . சகலமும் தாங்கும் சகலமும் நம்பும் மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும் அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் .
|