அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். - (லூக்கா 14:23-24). . நீங்கள் ஒரு விருந்து வைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறீர்கள். அவர்கள் வருவார்களென்று அந்த நகரத்திலேயே சிறந்த ஹோட்டலில் உணவு வகைகளையும், சாப்பிட்டபின் பரிமாறுவதற்கென்று இனிப்பு வகைகளையும் உங்கள் நண்பர்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டி பலவித வேடிக்கை விளையாட்டுகளையும் ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் நேரம் வந்தபோது, யாரும் வரவில்லை. ஒருவரும் தங்கள் தலையை கூட காட்டவில்லை என்று வைத்து கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? முதலாவது நீங்கள் அனுப்பிய கார்டில் சரியான நேரம் நாளும் எழுதியிருக்கிறதா என்ற பார்ப்பீர்கள். பின் ஒவ்வொருவரையம் போனில் அழைக்க ஆரம்பிப்பீர்கள். ஒருவர், 'நான் இப்போதுதான் ஒரு நிலம் வாங்கினேன். அதை பார்க்க போய் கொண்டிருக்கிறேன்' என்று சொல்கிறார், மற்றவர், 'இப்போதுதான், நான் ஒரு புதிய காரை வாங்கினேன், அதை ஓட்டி பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றும், மற்றவர் 'நான் இப்போதூன் திருமணம் செய்தேன், என் மனைவி என்னை விடமாட்டேன் என்கிறாள்' என்று உங்கள் அழைப்பை அசட்டை செய்து ஏதாவது சாக்குபோக்கு சொன்னால் என்ன செய்வீர்கள்? . முதலில் உங்களுக்கு கோபம் வரும். அழைத்தவர்களுக்கு அந்த நேரம்தான் கார்ட் போகவில்லை. குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பே சென்றிருக்கவேண்டும். அவர்கள் அதற்கேற்றபடி தங்கள் நேரத்தை ஒழுங்கு செய்து வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ, வர விருப்பமில்லாதவர்களாக ஏதோ காரணத்தை சொல்லி வர மறுத்தபடியால், அங்கு அவர்களுக்கு என்று உணவு கொடுக்க ஆயத்தமாயிருந்த வெயிட்டர்களையும், வேலையாட்களையும் தெருவிற்கு அனுப்பி, 'கண்ணில் தென்படுகிற அனைவரையும் அழைத்து கொண்டு வாருங்கள், அவர்கள் ஊனர்களாக, தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் வந்து நான் செய்த விருந்தை சந்தோஷமாய் அனுபவிக்கட்டும்' என்று அனுப்புவீர்களல்லவா? . லூக்கா 14:16-24-ல் காணப்படும் உவமையில் அந்த காரியம் தான் காணப்படுகிறது. தேவன் தம்முடைய எல்லையற்ற அன்பினால் நம் அனைவரையும் கிறிஸ்துவின் மூலம் தமது விருந்திற்கு அழைக்கிறார். ஆனால் நாமோ, ஏதோ காரணம் காட்டி அந்த விருந்திற்கு வர மறுக்கிறோம். அது வேறு மதத்தை சார்ந்திருப்பதால் இருக்கலாம், அல்லது வேறு பல காரணங்களாய் இருக்கலாம், ஆனால் தேவாதிதேவன் கொடுக்கிற விருந்திற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். . நாம் விருந்திற்கு வராததற்கு முக்கிய காரணங்களாக மூன்று காரணங்கள் இந்த உவமையில் காணப்படுகிறது: . 1. செல்வம்: வாங்குகிறதிலும் விற்கிறதிலும் சிலர் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு தேவனுடைய காரியங்களை குறித்து சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. 'உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்' என்று இயேசுகிறஸ்து சொல்வார். . 2. வேலை: சிலர் வேலையையே திருமணம் செய்திருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் வேலை வேலை. விடுமுறையிலும் போய் வேலை செய்யும் ஆட்கள் உண்டு. எப்படியாவது வாழ்வில் முன்னேறுவதுதான் அவர்கள் குறிக்கோள். தேவனை குறித்து சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை. . 3. மனைவி: மனைவியின் விருப்பதிற்கு ஏற்ப நடந்து, உலக வாழ்க்கையை இஷ்டம் போல அனுபவித்து, பரத்திற்குரிய காரியங்களில் அக்கறை காட்டுவதில்லை. . நீங்கள் சொல்லும் சாக்குபோக்கு என்ன? தேவன் தகுதியல்லாத நம்மை நித்திய நித்தியமாய் அவரோடு கூட விருந்துண்ணும்படி அழைத்திருக்கிறார். அதற்கு நாம் வராதபட்சத்தில் தேவனும் : 'நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்று சொல்லுவார். . அவருடைய அழைப்பை குறித்து அக்கறையின்றி உலகத்தின் ஆசாபாசங்களில் நாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறோமா? அந்த விருந்தில் தகுதியில்லாத நாம் பங்கு பெறும்படி இயேசுகிறிஸ்து ஏற்கனவே கிரயத்தை செலுத்தி விட்டார். உங்களுக்கென்று ஒரு இடம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கு பெறுவதும் நிராகரிப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர், அதிலும் உண்மையுள்ளவர்கள் வெகுசிலரே! அந்த உண்மையுள்ளவர்களின் பட்டியலில் நாமும் சேர்ந்து கர்த்தரோடு யுகாயுகமாய் விருந்துண்ண எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல், அவருடைய அழைப்பை ஏற்று அவருக்கு பின் செல்வோமாக! . இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால் வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்! கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால் . |