அதற்குப்பின்பு அவன் நியாப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச் சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒருவார்த்தையையும் விடாமல் வாசித்தான். - (யோசுவா 8:34-35). . முதலாவது கர்த்தருடைய தாசனாகிய யோசுவா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான் (வசனம் 30). பின்பு மோசே தனக்கு கட்டளையிட்டபடியே, நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். இங்கு கவனிக்கவேண்டிய வார்த்தைகள், சகல வார்த்தைகளையும் வாசித்தான் என்பது. இது முக்கியமானது. நாம் வேதத்தை வாசிக்கும்போது, நமக்கு புரியாத பகுதிகளை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை மட்டும் வாசிக்கிறோம். ஆனால் யோசுவாவுடைய உதாரணத்தின்படி நாம் வேதத்தின் எல்லா பகுதிகளையும் கருத்தோடு வாசிக்க வேண்டும். எதையும் விட்டுவிட்டு போக கூடாது. . இரண்டாவதாக, யோசுவா ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் அநேக ஊழியக்காரர்கள் ஆசீர்வாதத்தை மட்டும் தனியாக எடுத்து கூறி வருகின்றனர். கர்த்தர் உங்களை இப்படி ஆசீர்வதிப்பார், அப்படி ஆசீர்வதிப்பார் என்று அதற்கேற்ற வசனங்களை எடுத்து கூறுவார்கள். அது சரியானதல்ல. தேவன் தம்மை குறித்த தம்முடைய குணாதிசயங்களை அவரை தேடுகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம் (எண்ணாகமம் 24:1) என்று நம்மை ஆசீர்வதிக்கிற தேவனாகவே அவர் இருந்தாலும், பாவத்தை வெறுக்கிற சுத்த கண்ணர் அவர். தேவன் கொடுக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதமும் ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேதான் கொடுக்கப்படுகிறது. தேவனுக்கு நாம் கீழ்ப்படிந்தால் தேவன் நிச்சயமாகவே நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆனால் நாம் கீழ்ப்படியாதபோதோ நிச்சயமாக சாபங்கள் நம்மேல் வரும். தேவனுக்கு கீழ்ப்படிகிறதை குறித்து போதிக்காதபடி ஆசீர்வாதங்களை மாத்திரம் போதிக்கிற எந்த போதனையும் வேதத்திற்கு புறம்பானதே. அது மக்களை ஏமாற்றும் போதனைகளாகத்தான் இருக்க முடியும். . கடைசியாக, யோசுவா, இஸ்ரவேலின் முழுச் சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான். பெரியவர்களுக்கு மாத்திரம் தான் என்று இல்லாதபடி யோசுவா ஆண்களுக்கும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், மற்றும் அவர்களோடு இருந்த மற்ற அந்நியர்களுக்கும் முன்பாக கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்தான். கர்த்தருடைய வார்த்தைகள் யாவருக்கும் உரியது. ஒரு சில குறிப்பிட்ட மக்களுக்கும், பாலருக்கும் மாத்திரமல்ல. அதுப்போல கீழ்ப்படிதலும் எல்லாருக்கும் உரியது. யாரும் அதற்கு விதிவிலக்கல்ல. கர்த்தருடைய வார்த்தை ஒன்று செய்ய சொன்னால் அதற்கு நாம் கீழ்ப்படியத்தான் வேண்டும். துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடக்காமல் இருக்க வேண்டும் (சங்கீதம் 1:1) என்று வேதம் நமக்கு கட்டளையிட்டால் அதன்படி செய்யத்தான் வேண்டும். . கர்த்தருடைய வேதத்தில் ஆசீர்வாதங்களும் உண்டு. சாபங்களும் உண்டு. அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிபவர்களுக்கு நிச்சயமாக ஆசீர்வாதமும், கீழ்ப்படியாதவர்களுக்கு வேதத்தில் உள்ள சாபங்களும் உண்டு. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று கர்த்தர் நமக்கு வாக்குதத்தம் கொடுத்தால், அதோடு கூட ஒரு நிபந்தனையும் வைக்கிறார், 'நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்' (யாத்திராகமம் 15:26). ஆகவே அவர் கூறியபடி நாம் அவருடைய சத்தத்தை கேட்டு, அதன்படி செய்தால் அவர் நமக்கு பரிகாரியாக இருப்பார். இல்லாவிட்டால் அந்த ஆசீர்வாதம் நம் வாழ்வில் பலிக்காது. ஆகவே நாம் வேதத்தில் உள்ள ஆசீர்வாதங்களை மட்டும் எடுத்து கொள்ளாமல், அந்த ஆசீர்வாதத்தை நாம் பெற்று கொள்ள அவர் கொடுக்கிற நிபந்தனையையும் செய்து, அந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்வோம். . தேவ ஆசீர்வாதத்தோடே அடியாரை அனுப்பும் வார்த்தை என்னும் அப்பத்தாலே போஷித்து வளர்ப்பியும் . |