யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும்... - (சங்கீதம் 24:3-4). . கர்த்தரிடத்தில் உண்மையும் உத்தமுமான ஒரு ஊழியர் இருந்தார். 'கறைபடியாத கையையுடைய கர்த்தரின் ஊழியர்' என்று அவரைப் பாராட்டுவார்கள். பெரும் பணப்புக்கமுள்ள அவரது நிர்வாகத்தில் பத்துப்பைசாவுக்குக் கூட அவர் ஆசைப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் என்ன என்று அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. . 'என் சிறுவயதில் என் தாய்க்கு சமையல் வேலைகளில் அதிக உதவியாக இருக்க ஆசைப்படுவேன். குறிப்பாக இரவில் சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்து வெள்ளைத்துணி விரித்து, அழகாக வைப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. 'அம்மா சாப்பாட்டு மேஜையை ஒழுங்கு செய்யட்டுமா?' என்று உற்சாகமாக கேட்பேன். அப்பொழுதெல்லாம் என் தாயார் சமையலறையிலிருந்து சொல்லும் மறுமொழி என்ன தெரியுமா? 'உன் கை சுத்தமாக இருக்கிறதா?' என்பார்கள். இந்த குரல் என் வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்திலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என் உத்தியோக வாழ்விலும், ஊழிய காலங்களிலும், உன் கை சுத்தமாக இருக்கிறதா என்ற என் அம்மாவின் கேள்வி எச்சரிப்பின் தொனியாக எனக்குள் தொனித்துக் கொண்டே இருக்கிறது. பரிசுத்தமான தேவனுக்கு நாம் ஊழியம் செய்யம் போது நம் உள்ளம் மாத்திரமல்ல, நம் கைகளும் சுத்தமாயிருக்க வேண்டாமா?' என்றார். . வேதத்திலே ஆண்டவர் மோசேயைக் குறித்து கொடுக்கும் சாட்சி ஆச்சரியமானது! 'மோசேயோ என் வீட்டிலெங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்' என்றார். இன்று தேவன் நம்மைக் குறித்து இப்படி சாட்சி கொடுக்க முடியுமா? நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம். நான் வேலையில், தொழிலில், குடும்பத்தில், ஊழியத்தில் உண்மையுள்ளவனாக, உண்மையுள்ளவளாக இருக்கிறேனா? என் உள்ளத்தைக் காணும் தேவன் என்னைக் குறித்து, எப்படிப்பட்ட சாட்சி கொடுப்பார் என்று சிந்தித்துப் பார்ப்போம். . பிரியமானவர்களே, நாம் வாழும் இந்த உலகத்திலே எல்லா காரியத்திலும் உண்மையாயிருப்பது கூடாதக்காரியம் போன்று தோன்றலாம். ஆனால் கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் எங்கும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகயிருக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். உள்ளத்தில் கர்த்தருக்கு பயப்படும் பயம் இருக்கும்போது நம் வாழ்க்கை முழுவதிலும் நேர்மையும் உண்மையும் காணப்படும். அதனால் வரும் ஆசீர்வாதத்தையும் நாம் அனுபவிக்க முடியும். . சிறு காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது, பெரிய காரியத்தை நம்மை நம்பி ஒப்புக் கொடுப்பார்கள். சின்ன காரியம்தானே என்று அசட்டையாக இருந்தால் சின்ன காரியத்திலேயே உண்மை இல்லை, இவனை அல்லது இவளை நம்பி பெரிய காரியத்தை எப்படி ஒப்படைப்பது என்று தயங்குவார்கள். கர்த்தரை ஏற்றுக் கொண்ட நாம் அவர் உண்மையுள்ளவராக இருப்பதுப் போல நாமும் சிறு காரியமானாலும், பெரிய காரியமானாலும் எல்லாவற்றிலும், எங்கும் உண்மையுள்ளவர்களாக இருப்போம், அப்போது கர்த்தர் வரும் நாளில் 'உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், அநேகத்தில் உன்னை அதிகாரியாக வைப்பேன்' என்று நம்மை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா! . மரணம் என்னை சந்திக்கும் நாள் வரையும் உண்மையாய் உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே உன்னத கிருபை தாருமே . கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்திற் கதிகாரியாய் மாற்றுவேன் என்ற என் நேசரே நீர் என்னையும் மாற்றிடுமே |