Friends Tamil Chat

திங்கள், 21 ஜூலை, 2014

21st July 2014 - குணசாலியான ஸ்திரீ

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூலை மாதம் 21-ம் தேதி - திங்கட் கிழமை
குணசாலியான ஸ்திரீ
........

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. - (நீதிமொழிகள் 31:10).

.

குணசாலியான ஸ்திரீ, இவள்தான் ஒவ்வொரு இள வாலிபனின் கனவு. எந்த ஒரு திட்டமும் தீட்டி அவன் அப்படிப்பட்ட பெண்ணை பெற முடியாது. ஆனால் அவன், தன் தேவனிடம் தன் கனவுகளையும், தன் எதிர்ப்பார்ப்புகளையும் ஒப்புக்கொடுத்து, அவருடைய நேரத்திற்காக காத்திருப்பானானால், நிச்சயமாக தேவன் அப்படிப்பட்ட பெண்ணை அவனுக்கு கொடுக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். ஏவாளை ஏற்ற துணையாக ஆதாமுக்கு உருவாக்கி, அவளை அவனிடத்தில் கொண்டு வந்த தேவனல்லவா அவர்!

.

அப்படிப்பட்ட மனைவியை பெற்ற மனிதன், முதலாவது அறிந்து கொள்ள வேண்டும், அவளுடைய விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது என்று. இப்போது உலகம் மூன்று WWW உடைய பெண்ணைத்தான் தேடி கொண்டிருக்கிறது. Working, White, Wisdom உடைய பெண்ணைத்தான் தங்கள் மகனுக்கு தேடி கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் அழகு, வேலை, படிப்பு, கலர், குடும்ப செல்வாக்கு, சொத்துக்கள் இவைதான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய உலகம் முதலாவது பார்க்கிறது. இவைகள் ஒரளவு முக்கியம் என்றாலும், தேவ பக்தியுள்ள பெண்ணோ இவைகள் எல்லாவற்றிலும் மேலானவள். அப்படிப்பட்ட பெண்ணை வாஞ்சிக்கும்போது நிச்சயமாக தேவ கிருபையும் ஆசீர்வாதமும் அங்கு இருக்கும். அவை உலகத்தின் எல்லா சம்பத்துக்களைவிட மிகவும் உயர்ந்தது. குணசாலியான பெண்ணின் விலை இந்த உலகத்தின் எல்லா செல்வத்திற்கும் மேலானது.

.

ஒரு மனிதன் தனக்கு அழகான பெண் வேண்டும் என்று தேடினால் நிச்சயமாக அவனுக்கு கிடைக்கும். ஆனால் அந்த அழகு என்றும் நிலைக்காது. சிலர் தங்களுக்கு ஒரு சில நடிகைகள் போன்ற அழகுள்ள மனைவி வேண்டும் என்று கனவு காண்பதுண்டு. அந்த அழகு வீண், மாiயானது என்று நினைப்பதில்லை. 'சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்' (நீதிமொழிகள் 31:30) என்று வேதம் சொல்கிறது. அழகு நாளாக ஆக குறைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் இருந்த அழகு கடைசிவரை நிலைப்பதில்லை. ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயின் அழகு நாளாக நாளாக கர்த்தரின் அழகு அவளில் தெரிய, அவள் அழகாக விளங்க ஆரம்பிப்பாள்.

.

வேதத்தில் அப்படிப்பட்ட குணசாலியான ஸ்திரீ ஒருவள் இருந்தாள். அவள்தான் ரூத். 'இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்' (ரூத் 3:11) அவள் குணசாலியானவள் என்று ஊராரெல்லாம் அறிந்திருந்தார்கள். அது எப்படிப்பட்ட ஆசீர்வாதம்! ஆகையால் அவள் புறஜாதியான மோவாபிய ஸ்திரீயாயிருந்தாலும் கிறிஸ்து அவளுடைய சந்ததியில் பிறந்தார்.

.

குணசாலியான ஸ்திரீ என்றால் என்ன? அவளுடைய எட்டு வகையான குணநலன்களை நீதிமொழிகள் 31ம் அதிகாரதிதிலிருந்து பார்ப்போம். அந்த எட்டு குணநலன்களையும் ரூத் கொண்டிருந்தார்கள்.

.

1. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்தின் நன்மைக்காக பாடுபடுவாள். தன் கணவனின் காரியங்களிலும், வீட்டின் காரியங்களிலும் கருத்துள்ளவளாயிருப்பாள். 'அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்' - (நீதிமொழிகள் 31:11-12).

.

2. குணசாலியான ஸ்திரீ தான் செய்யும் வேலையை சந்தோஷமாய் உற்சாகத்தோடே செய்வாள். (13ம் வசனம்).

.

3. குணசாலியான ஸ்திரீ தன் வேலையில் கவனமாய் ஞானமாய் செய்வாள் (நீதிமொழிகள் 14-24).

.

4. குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. (26ம் வசனம்). வீடு வீடாக ஏறி ஊர்க்கதைகளை பேசி கொண்டிருக்காமல், ஞானமாய் தன் வாயை திறந்து போதிக்கிறாள்.

.

5. குணசாலியான ஸ்திரீ கர்த்தருக்கு பயப்படுகிறவளாக, அவர் மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவளாக இருக்கிறாள் (வசனம் 30).

.

6. குணசாலியான ஸ்திரீ தன் உடையில் மிகவும் கவனமாயிருக்கிறாள். மற்றவர் குறை கூறாவண்ணம், சரியான முறையில் உடுத்தி, அலங்காலம் செய்கிறாள். (வசனம் 22,25).

.

7. குணசாலியான ஸ்திரீ தன் கணவனை தவிர மற்ற ஆண்களிடம் மிக கவனமாக பழகுவாள். அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள்; புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். (வசனம் 11:23) மோசமான நடத்தை உள்ள பெண்ணின் கணவன் நியாயஸ்தலங்களில் உட்கார முடியாது.

.

8. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்திற்கும், தன் பின்வரும் சந்ததிக்கும் எப்போதும் ஆசீர்வாதமாக இருப்பாள் (வசனம் 28-29).

.

ரூத்திற்கு இத்தனை குணநலன்களும் இருந்தபடியால்தான் அவள் குணசாலி என்ற பெயர் பெற்றாள். இந்த குணநலன்கள் இருந்தபடியால் அதை கவனித்த போவாஸ் அவளை மணந்து கொண்டார். இந்த காலத்து வாலிப பெண் பிள்ளைகள் இந்த குணங்களை கொண்டவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். நமது குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் இந்த குண நலன்களை உடையவர்களாக இருக்கும்படியாக நாம் ஜெபிக்க வேண்டும். கணவனும், பிள்ளைகளும் உற்றார் உறவினரும், ஊராரும் பாராட்டும் குணசாலியான பெண்ணாக ஒவ்வொரு கிறிஸ்தவ பெண்ணும் இருக்க பிரயாசப்படவேண்டும்.

.

ஒய்யாரத்து சீயோனே நீயும்

மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து

ஐயனேசுக்குனின் கையை கூப்பி துதி

செய்குவையே மகிழ் கொள்ளுவையே – தினம்

தந்தானை துதிப்போமே

.

ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் என்று வசனம் கூறுகிறதே, அந்த குணசாலியான ஸ்திரீயாக ஒவ்வொரு கிறிஸ்தவ சகோதரியையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம் தகப்பனே. குணசாலியான ரூத்தின் சந்ததியை நீர் ஆசீர்வதித்தது போல ஒவ்வொரு குணசாலியான சகோதரிகளின் வாழ்வையும் ஆசீர்வதிப்பீராக. எங்கள் பெண்பிள்ளைகள் குணசாலியான ஸ்திரீகளாக வளர கிருபையையும் ஞானத்தையும் தருவீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.