உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். - (யோவான் - 4:23) . நம்முடைய வாழ்க்கைப் பாதையிலே அநேகரை சந்திக்கிறோம். அதில் சிலர் நம்மிடம் ஏதாவது கிடைக்குமென்று புன்முறுவலோடு பேசுவர். சிலர் நமக்கு தீங்கு செய்யும் நோக்கத்தில் அன்பாய் பழகுவது போல நடிப்பர். ஆனால் ஒரு சிலர் எந்த ஒரு இரண்டாம் நோக்கமுமின்றி உண்மையாய் சிநேகிப்பர். இப்படி மனித உறவுகளின் நோக்கத்திலுள்ள வித்தியாசத்தைக் காண்கிறோம். இதேப் போல கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொண்டிருப்போரும் பல காரணங்களுக்காக இயேசுவைத் தேடுகின்றனர். அதில் சில காரணங்கள் உண்மையான நோக்கமுடையவையல்ல. ஆனால் சில நோக்கங்கள் சிறந்தது. 'ஆன்மீக வாழ்க்கைத் தியானங்கள்' என்ற புத்தகத்தில் சாது சுந்தர் சிங் மூன்று வகையான கிறிஸ்தவர்களைக் குறித்து எழுதுகிறார். அவற்றை இன்று தியானிப்போம். . ஞானி ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது வழியிலே மூன்று வகையான நபர்களை சந்திக்கிறார். . அவர் சந்தித்த முதலாம் நபர் மிகவும் சோர்ந்து போனபவராய் பயத்தில் நடுங்கிக் கொண்டு காணப்பட்டார். அவர் அந்த கிறிஸ்தவரிடம் நீ ஏன் இப்படி காணப்படுகிறார் என்று வினவினார். அவன் 'நான் ஒருவேளை நரகத்திற்கு சென்றுவிடுவேனோ என்ற பயம் என்னை ஓயாமல் வாட்டுகிறது.' என்றார். அதற்கு ஞானி, 'தேவ பயத்திற்கு பதிலாக பிசாசுக்கென்று ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள நரகத்திற்கு பயப்படுகிறாயே உன் நிலை எவ்வளவு பரிதாபமானது நீ கர்த்தரை தேடுவது உண்மையானதல்ல நரகத்திற்கு தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஏதுவாகவே பார்க்கிறாய்' என்றார். . இரண்டாவது கிறிஸ்தவனை சந்தித்தார். அவனும் வருத்தத்துடன் காணப்பட்டான். ஞானி காரணம் கேட்டதற்கு, 'மோட்சானந்தமும், இளைப்பாறுதலும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்' என்றான். அதற்கு ஞானி, 'படைத்தவரின் ஆச்சரியத்தையும், அன்பையும் எண்ணாமல், மோட்சத்தை அடைய வேண்டுமென்று மட்டும் நீ தேவனை வணங்குவது வெட்கப்படத்தக்கது' என்றார். . பின்பு மிகவும் திருப்தியும், மகிழ்ச்சியும் நிறைந்த மூன்றாவது கிறிஸ்தவனைக் கண்டார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று அவனிடம் வினவியபோது, 'என் இரட்சிப்பின் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறேன். அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அவர் என்மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி எண்ணி வியந்து பூரிக்கிறேன். அதனால் என் இருதயம் எப்போதும் அவர் அன்பினாலும், பிரசன்னத்தினாலும் நிரம்பி என்னை ஆனந்த கிறிஸ்தவனாக மாற்றிற்று' என்றான். . என்ன அருமையான் விளக்கம் பார்த்தீர்களா? அன்பானவர்களே! நீங்கள் இயேசு கிறிஸ்துவை எந்த நோக்கத்திற்காக தொழுது கொள்கிறீர்கள்? அவரை நேசித்தா? அல்லது அவர் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்காகவா? அல்லது நரகத்திற்கு பயந்து கர்த்தரை தேடுகிறீர்களா? நீங்கள் கர்த்தரை உண்மையான இருதயத்தோடு நேசித்து அவரை தொழுது கொள்ளுங்கள். அப்போது அவர் உங்களை ஆசீர்வதித்து, நரகாக்கினைக்குத் தப்புவித்து, தாமிருக்கும் மகிமையான பொன்னகரத்திற்கு நேராய் உங்களை பத்திரமாய் நடத்துவார். ஆமென் அல்லேலூயா! . இயேசுகிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசுகிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது . |