'சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். - (மத்தேயு 26:40). . இயேசுகிறிஸ்து தமக்கு பிரியமான மூன்று சீஷர்களுடன் கெத்சகனே என்னும் இடத்திற்கு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, வியாகுல வியாழனன்று, ஜெபிப்பதற்காக வந்தார். இந்த கெத்தசமனே தோட்டம் ஒலிவ மலையின் அடிவாரத்தில் உள்ளது. ஒலிவ மலை என்றால் இப்போது அங்கு ஒலிவ மரங்கள் இல்லை. இயேசுகிறிஸ்து பரமேறி போன இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டு (Chruch of Ascension) இருக்கிறது. கிறிஸ்து அதே இடத்திற்கு திரும்ப வருவார் (சகரியா 14:4). அந்த மலையின் கீழே கீதரோன் பள்ளத்தாக்கு உள்ளது. அதில் சகரியா தீர்க்கதரிசியின்; கல்லறையும் உள்ளது. அந்த பள்ளத்தாக்கின் மறு புறத்தில் கெத்சமெனே தோட்டம் உள்ளது. Gat என்பதற்கு Place of Pressing என்றும் Semanim என்பதற்கு Oil என்றும் பொருள்படும். இந்த இடத்தில் ஒலிவமலையிலிருந்து வரப்படும் ஒலிவ காய்கள், எண்ணெயாக பிழியப்படுகிற இடமாக இருந்தது. .  இந்த தோட்டத்தின் உள்ளே நுழையும்போது, இயேசுகிறிஸ்து ஜெபித்துவிட்டு, பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? என்று ஏக்கத்தோடு சொல்லும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. உள்ளே அருமையான தோட்டத்தில் எட்டு ஒலிவ மரங்கள் காணப்படுகின்றன. ஒலிவ மரங்களுக்கு மரத்தின் வயதை நிர்ணயிக்கும் வளையங்கள் இல்லை. அதனால் அதன் வயதை யாரும் கூற முடியாது. இங்கு காண்ப்படும் ஒலிவ மரங்கள் 1000த்திலிருந்து 2000 வருடங்கள் வயதுள்ளதாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவேளை 2000 வருடங்கள் இருந்திருக்குமானால் இயேசுகிறிஸ்து வாழ்ந்திருக்கும் காலத்தில் அவைகளும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு சாரார், ரோமர்கள் எருசலேமை பிடித்தபோது எல்லா மரத்தையும் வெட்டி, எருசலேமை தரைமட்டமாக்கி விட்டபடியால் இந்த மரங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகினறனர். . நான் அந்த ஒலிவ மரங்களை பார்த்தபோது, 'ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் நீங்களும் இருந்திருப்பீர்களானால், என் நேசர் வியாகுலத்தோடு தம் வேர்வை இரத்தமாக சிந்தப்பட ஜெபித்த வேளையில் நீங்கள் அவரை பார்த்து கொண்டிருந்தீர்களே, உங்கள் இலைகளை அசைத்து, அவரை ஆசுவாசப்படுத்தினீர்களோ? உங்கள் இளம் தென்றல் காற்றினால் அவரை தேற்றினீர்களோ?' என்று கேட்க தோன்றிற்று. . அதற்கு பக்கத்தில் All Nations Church என்னும் அழகிய ஆலயத்தை 12 நாடுகள் சேர்ந்து கட்டியிருக்கிறார்கள். அந்த ஆலயத்தின் உட்புறத்தில், மூன்று பிரமாண்டமான ஒவியங்கள் வரையப்பட்டடிருக்கின்றன. நடுவில் இயேசுகிறிஸ்து, வேதனையோடு பெரிய கல்லின் பக்கத்தில் அமர்ந்து ஜெபிக்கும் வண்ணமாகவும், இடது புறத்தில் யூதாஸ் காரியோத் அவரை முத்தமிடும் காட்சியும், வலது புறத்தில் அவரை ரோம வீரர்கள் சிறைபிடித்து கொண்டு போவதையும் வரைந்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆலயத்தின் உட்புறம் மிகவும் அமைதியாக உளளது, ஆவியானவரின் தொடுதலை உணர முடிந்தது. வெளியே, ஒரு தூதன் இயேசுகிறிஸ்துவை பெலப்படுத்துவதைப்போல சிலையில் வடித்திருக்கிறார்கள். . இயேசுகிறிஸ்து, தாம் படப்போகிற வேதனைகளையும் பாடுகளையும் அறிந்திருந்தபடியால், 'அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது' (லூக்கா 22:41-44) என்று பார்க்கிறோம். . இந்த வியாகுலங்களை யாருக்காக அவர் பட்டார்? பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும் என்று வேதனையோடு பிதாவிடம் மன்றாடினாரே! ஆனாலும் அந்த பாடுகளை முழு இருதயத்தோடு ஏற்றுக் கொண்டு, 'ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது' என்றும் ஜெபித்தாரே! அந்த நல்ல தேவனை துதிப்போமா! . பாவமறியாத அவர் நமக்காக பாவமாகி, அந்த கொடிய குரிசில் தேவனாலும் கைவிடப்பட்டவராக துடிதுடித்தாரே, அத்தனையும் நம் பாவங்களினிமித்தமாகவே! அவர் அனுபவித்த பாடுகளை இன்றும் நினைத்தால் நம் கணகளில் கண்ணீர் வராமல் இருக்க முடியாது. அவர் பட்ட பாடுகளை நாம் தியானித்து, அவர் நமக்காய் சிந்திய இரத்தத்தை நினைத்து, நாம் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு பரிசுத்தமாவோமா? தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதிமொழிகள் 28:13) என்று வசனம் சொல்லுகிறபடியால் நம் பாவங்களை அறிக்கையிட்டு அவற்றை விட்டுவிடுவோமா? கர்த்தரிடம் இரக்கம் பெறுவோமா? நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). ஆமென் அல்லேலூயா! . கெத்சமெனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையினிலும் கேட்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே அப்பா உம் அன்பு பெரிதே கல்வாரி அன்பை எண்ணிடும வேளை கண்கள் கலங்கிடுதே . |