அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். - (ஆதியாகமம் 2:21-22). . தேவன் மனுஷியை மனிதனுடைய விலா எலும்பிலிருந்து உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். இந்த சத்தியம் எப்போதும் மனதில் நாம் கொள்ள வேண்டும். வேறு ஒரு மனிதன் அல்ல, தேவனே அவளை மனிதனிடத்தில் கொண்டு வந்தார். மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று தேவனே அவனுக்கு ஒரு துணையை கொண்டு வந்தார். இதில் அவருடைய தெய்வீக திட்டமும், மனிதர் மேல் அவர் கொண்ட அன்பும் வெளிப்படுகிறது. . ஓவ்வொரு திருமணத்திலும் மிக முக்கியமான ஒரு காரியம், தேவன் ஒரு மனுஷியை ஒரு மனிதனுக்கு கொண்டு வரும்வரை அவன் காத்திருக்க வேண்டும். அப்படி தேவன் கொடுக்கும் மனைவியை பெறும் மனிதன் சந்தோஷமாய் நிச்சயம் சொல்வான், 'இந்த பெண்ணை என் வாழ்வில் தேவன் கொடுத்தார், நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்' என்று. காலமோ, நேரமோ பார்த்து, அல்லது வரதட்சணைகள் நிர்ணயிக்கும் திருமணத்தில் ஒரு மனிதனும் சொல்ல முடியாது, இது தேவன் எனக்கு கொடுத்த ஏற்ற துணை என்று. தேவன் கொடுத்த மனைவியை பெற்ற மனிதனின் வாழ்வில் சந்தோஷம் எப்போதும் இருக்கும். தேவனில் அந்த குடும்பத்தில் மகிழ்ந்து, பரலோகத்திலிருந்து ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார். . மனுஷியை தேவன் மனிதனின் விலா எலும்பிலிருந்து எடுத்தபடியால், அவர்கள் இப்போது இருவராயிருக்கிறார்கள். திருமணத்தில் அவர்கள் ஒருவராய், ஒரே மாம்சமாய் மாறுகிறார்கள். அப்படி இணைக்கப்படுகிறவர்கள், சரீரத்திலும், ஆவியிலும் ஆத்துமாவிலும் எல்லாவற்றிலும் ஒன்றாய் இணைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாய், ஒருவருக்கொருவர் உதவியாய், ஒருவரையொருவர் தாங்குகிறவர்களாய், பாராட்டிக்கொள்கிறவர்களாய், இருக்க வேண்டும். அதற்காகவே மனுஷியை தேவன் மனிதனோடு இணைக்கிறார். . 'மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்' (நீதிமொழிகள் 18:22) என்று வேதம் சொல்கிறது. எனவே நன்மையானதொன்றை மனைவி என்ற பெயரில் தேவனே கொடுக்கும்போது, யாரும் அதை அலட்சியம் செய்யக்கூடாது. அவளை கண்ணின் மணியைப்போல பாதுகாத்து கனம் பண்ண வேண்டும். . கணவன் மனைவியினிடையே பிரச்சனையே வராத குடும்பம் ஒன்றுமே கிடையாது. எல்லா குடும்பத்திலும் பிரச்சனை வருவது உண்டு. ஆனால் அதை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமானது. யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போகாவிட்டால், அந்த சச்சரவு வளர்ந்து, மன வேதனை ஏற்படக்கூடிய நிலைமை உண்டாகும். . இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமும் வெளியே சொல்வது மிகப்பெரிய தவறாகும். என் மனைவி இப்படி, அப்படி என்று கூட வேலை செய்யும் மற்றவர்களிடம் கூறும்போது, மனைவியை குறித்த மரியாதை குறைய வாய்ப்புண்டு. சில வேளைகளில் சொல்லுகிற நபரை குறித்தே தவறாக நினைக்க வாய்ப்புண்டு. அதுப்போல மனைவியும் தன் தோழிகளிடமும், வேறு எந்த ஆடவரிடமும் தன் கணவரை பற்றி குறை கூற கூடாது. அதை சாக்காக வைத்து, குறை கூறும் பெண்ணிடம் தவறான முறையில் நடக்கவும் முயறசிகள் எடுக்கும் ஆண் வர்க்கமுமுண்டு. ஆகையால் பெண்களும் கவனமாக பேச வேண்டும். எதை சொல்ல வேண்டுமோ அதை தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். வீட்டு பிரச்சனைகளை நான்கு சுவர்களுக்குள்ளே வைத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும். என்னதான் பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை வெளியே கொண்டு வரக்கூடாது. 'நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்'. - (நீதிமொழிகள் 11:16) என்று வேதம் கூறுகிறது. . குடும்பத்தில் சமாதானமாய் இருப்பதற்கு தேவன் இணைத்த இருவரும் அவருடைய சமுகத்தில் கூடி ஜெபிப்பது மிகவும் முக்கியமாகும். குடும்ப ஜெபம் இல்லாமல் இரவில் படுக்க செல்ல கூடாது. தேவனை முதன்மையாக வைத்து செயல்படும் குடும்பம் உலக வாழ்க்கையிலும் சிறந்ததாக விளங்கும். பிரச்சனைகள் வந்தாலும் தேவ கிருபையுடன் பிரச்சனைகளை மேற்கொண்டு சந்தோஷமாய் வாழ்வார்கள். . 'குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்' (நீதிமொழிகள் 12:4) என்ற வசனத்தின்படி, குணசாலியான ஸ்தீரியாக, புருஷனுக்கு கிரீடமாக ஒவ்வொரு மனைவியும் விளங்கும்படியாகவும், அப்படியே கணவன்மாரும், தங்கள் மனைவியினிடத்தில் உண்மையான அன்புகூருகிறவர்களாகவும், மற்றவர்கள் மத்தியில் அவர்களை கனம் பண்ணுகிறவர்களாகவும் இருந்து, கர்த்தருக்கு மகிமையான குடும்பமாக விளங்கும்படியாக தேவன்தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! . குடித்தன வீரம், குணமுள்ள தாரம் கொடுத்துங் கொண்டாலது சமுசாரம், அடக்கமாசாரம், அன்பு, உதாரம் அம்புவி தனில் மனைக்கலங்காரம் . |