தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். - (சங்கீதம் 47:6-7). . மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் வாழும் ஒரு சகோதரி ஆஸ்த்துமா வியாதியினால் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு வாரமாக மிகவும் முடியாமல் வைத்தியரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தும், ஆஸ்பத்திரியில் போனால் அங்கு பார்ப்பார்களோ, இல்லை வேறு சிறு கிளினிக்குப் போய் வா என்று சொல்லி விடுவார்களோ என்று எண்ணி, போகாமலேயே இருந்து, ஆஸ்த்துமா மிகவும் அதிகமாகி விட்டது. . அப்போது ஒரு சகோதரியின் மூலம் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, அங்கு வேலை செய்யும் நர்சின் மூலமாக டாக்டரைப் பார்த்து, வியாதிக்கு சரியான மருந்து எடுத்து, அந்த மூச்சுக் கஷ்டம் சரியானபோது, அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய ஆஸ்த்துமா சரியாகும்படி, தனக்கு சரியாக மூச்சு வரும்படி உதவின அந்த நர்சுக்கு தன் மனதில் இருந்து வாழ்த்துக்களை, நன்றிகளை தெரிவித்தார்கள். நெஞ்சார, வாயாற வாழ்த்தினார்கள். 'நீங்க நல்லாயிருப்பீங்க, உங்கள் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்' என்றுக் கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள். . பிரியமானவர்களே ஒரு சுகவீனமாயிருந்த சகோதரிக்கு உதவினதற்காக அவர்கள் எத்தனை வாழ்த்துக்கள் எத்தனை நன்றிகள்! நமக்கு ஜீவனைத் தந்து, சுகத்தை கொடுத்து, பெலத்தைக் கொடுத்து, ஒவ்வொரு நாளையும் ஈவாக தந்து வருகிற நம் தேவனுக்கு நாம் எப்படி நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? . சுகம் பெற்ற அந்த சகோதரியின் இருதயத்திலிருந்து அந்த நன்றி உணர்வு வந்ததல்லவா? அதுப் போன்று நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து நம்மை இதுவரை நடத்தி வருகிற தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. . கர்த்தரை துதிக்கும் துதி அந்த சகோதரியின் உள்ளத்திலிருந்து வந்ததுப் போன்று நமக்குள்ளிருந்து வர வேண்டும். என்னால் முடியாமல் இருந்தேன், எனக்கு சரியானபடி மூச்சு வரும்படியாக உதவினீர்களே என்று நினைத்து, கரத்தைப் பிடித்து தன்னால் எப்படி எல்லாம் நன்றி சொல்ல முடியுமோ அந்த வகையில் வார்த்தையில், செய்கையில் நன்றி சொன்னதுப் போல அதுமட்டுமல்ல, அதற்கு மேலாக கண்ணீரோடு நீர் எனக்கு செய்கிற நன்மைகளுக்கு நான் பாத்திரன் அல்ல என்று அவரை துதிக்கும்போது கர்த்தருக்கு நன்றி செலுத்தும்போது அவர் எப்படியாய் மகிழுவார்! ஏனெனில் இப்படிப்பட்ட நன்றிகளுக்கும் துதிகளுக்கும் பாத்திரர் அவர் ஒருவரே பாத்திரர். . அவர் நமக்கு செய்த, செய்து வருகிற நன்மைகள் ஒன்றல்ல. இரண்டல்ல, எத்தனை எத்தனை! அதற்கு நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோமா? இல்லை, அது அவருடைய வேலை என்று நினைத்து சும்மா இருக்கிறோமா? சபையில் சில இடங்களில் உங்கள் வாயைத் திறந்து கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்று போதகர் சொன்னாலும், வாயை திறவாமல், மூடிக்கொண்டு இருக்கிற சகோதர சகோதரிகள் உண்டு. நாம் வாயை திறந்து கர்த்தரை துதிக்காமல் இருப்போமானால், நம் இருதயம் கர்த்தர் செய்த உதவிகளுக்கு நன்றி இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தமாகும். . அவர் ஒருவரே துதிக்கு பாத்திரர், அவர் ஒருவரே எல்லா நன்றிகளுக்கும் உரியவர். அவர் நம்மில் இருப்பதானால்தான் நாம் மற்றவர்களுக்கு அந்த அன்பை வெளிப்படுத்த முடிகிறது. 'தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்' என்று சங்கீதக்காரன் இருதயத்தின் நிறைவினால் சொல்கிறார். ஒரு முறை பாடுங்கள் என்று சொல்லி நிறுத்தவில்லை, தேவனை போற்றி பாடுங்கள், பாடுங்கள் என்று திரும்பவும் சொல்கிறார். ஏனெனில் அவருடைய இருதயம் துதியினால் நிறைந்திருந்ததால் பாடுங்கள், பாடுங்கள் என்று இரண்டு முறை கூறுகிறார். . நம்முடைய இருதயமும் தேவன் செய்த நன்மைகளை நினைத்து, நிறைந்திருந்தால் யாரும் சொல்லாமலேயே நம் வாயிலிருந்து அவரை துதிக்கும் துதியும், பாடலும் தன்னாலே வரும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! . நம் இருதயம் அவரை துதிக்கும் துதியினால் நிறைந்திருக்கட்டும், அவரை துதிக்கும் பாடல் எப்போதும் நம் இருதயத்தில் நிறைந்திருக்கட்டும். அவரை போற்றி பாடுவோம், பாடுவோம். அவரை துதித்துப் போற்றுவோம், போற்றுவோம். ஆமென் அல்லேலூயா! . நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் . எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே ஏராளமாய் நன்றி சொல்லுவேன் அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் . |