மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. - (1 தீமோத்தேயு 4:14). . ஒரு வயதான மூதாட்டிக்கு அவருடைய பிறந்தநாளன்று ஒருவர் களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு அழகான நீளமான பாட்டிலில் வாசனை திரவியம் (Perfume) வைத்து கொடுத்திருந்தார். அவர்களுடைய பேத்தி அதை திறக்க சொன்னபோது, அவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போது அந்த பேத்திக்கு வயது 10. 'நான் அதை பின் ஒரு நாளில் திறக்கிறேன்' என்று சொல்லி அதை பத்திரமாக பொதிந்து வைத்தார்கள். பின்னர் அந்த பேத்தியின் 33ஆவது வயதில் அதை அவளிடம் கொடுத்து, 'நீ எத்தனை நாள் இதை திறக்காமல் வைத்திருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்' என்று சொல்லி கொடுத்தார்கள். அந்த பேத்தி, சில வருடங்கள் கழித்து, அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றுமே இல்லை! என்னவாயிற்று என்று பார்த்தபோது, அந்த பாட்டிலின் கீழ் அது ஆவியாக போகாதவாறு காக்கும்படி வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர் இல்லாததால், களிமண்ணால் செய்யப்பட்ட அந்த பாட்டிலில் இருந்து, அதில் இருந்த திரவியம் ஆவியாக போய் இருந்தது. என்ன ஒரு அநியாயம்! யாரும் உபயோகிக்காமல் சும்மா அதை வைத்திருந்து, அநியாயமாய் அது வீணாக போயிற்று. அதை கொடுத்தவருக்கு அவர்கள் அதை உபயோகிக்காமல் போனார்கள் என்று தெரிந்திருந்தால் அவருக்கு எத்தனை ஏமாற்றம்! . நம் தேவனும் இந்த மண்பாண்டமான சரீரத்தில் பொக்கிஷமாக ஆவியானவரையும், அவருடைய கிருபை வரங்களையும், தாலந்துகளையும் வைத்திருக்கிறார். கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருக்கும் நிச்சயமாக கிருபை வரங்கள் உண்டு. அதை அறியாதபடி வாழ்கிற மக்கள் அநேகர்! சிலருக்கு அதை உபயோகப்படுத்த வெட்கம், சிலருக்கு சுயநலம், சிலருக்கு சோம்பேறித்தனம்! . மத்தேயு 25ம் அதிகாரத்தில் 14-30 வரை உள்ள வசனங்களில் இயேசுகிறிஸ்து ஒரு உவமையை கூறி, அதன்படி, ஒரு மனிதன் தன் ஊழியக்காரரை அழைத்து அவரவருடைய திறமைக்குதக்கதாக அவரவருக்கு தாலந்துகளை கொடுத்துவிட்டு, தூர தேசத்திற்கு பிரயாணப்பட்டு போனதையும், திரும்பி வந்து கணக்கு கேட்டபோது, இரண்டுபேர் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட தாலந்துகளை வைத்து, அதிகமாய் சம்பாதித்ததையும், அதனால் அந்த எஜமான் அவர்களை பாராட்டி, நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று அவர்களை ஆசீர்வதித்ததையும் குறித்து வாசிக்கிறோம். . 'ஆனால் ஒரு தாலந்தை பெற்றவனோ, ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்' (வசனம் 24-30). . தாலந்துகளை நமக்கு கொடுத்திருக்கிற கர்த்தர், நிச்சயமாக நம்மிடத்தில் ஒரு நாள் கணக்கு கேட்பார். அப்பொழுது நாம் ஐந்து தாலந்தை பெற்றவனைப் போலவா? அல்லது இரண்டு தாலந்தை பெற்றவனைப்போல சந்தோஷமாக அவரிடத்தில் கணக்கு ஒப்புவிப்போமா? அல்லது ஒரு தாலந்தை பெற்றவனைப்போல அவரிடத்தில் அவரைப்பற்றியே குறைகளை சொல்லி, வெட்கப்பட்டு நிற்போமா? . இந்த நாட்கள் கடைசி நாட்களாய் இருப்பதால், தேவன் நமக்கு கொடுத்த தாலந்துகளை அவருக்கென்று உபயோகிப்போம். 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' (வெளிப்படுத்தின விசேஷம் 22:12) என்று சொன்னவர் சீக்கிரமாய வரப்போகிறார். நம்முடைய கிரியைகளுக்குத்தகக்தாக அவர் நிச்சயம் பதிலளிப்பார். ஆமென் அல்லேலூயா! . ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்த தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் . |