நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. - (சங்கீதம் 97:11). . சே! என்ன வாழ்க்கை! ஒரே வெறுப்பாக இருக்கிறது. எனக்கென்று என்ன சந்தோஷம் இருக்கிறது என கேட்பவரா நீங்கள்? அல்லது பாவம் நிறைந்த இவ்வுலகிலே கட்டுபாடுகள் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் அனுபவித்தால் என்ன? என்ற கேள்வி கேட்பவரா நீங்கள்? 'எப்படியாவது சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்பது தானே உங்கள் எண்ணம்! முதலில் எது சந்தோஷம் என தெளிவுபடுத்தி விட்டால் இரு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும். . இப்போது நீங்கள் இரு காட்சியினை கற்பனை செய்து கொள்ளுங்கள். கிராமத்தை இளமஞ்சல் வெயிலிலேயும், நகரத்தை இரவிலும் காண்பது கொள்ளை அழகல்லவா? அதிகாலை.. ஆரஞ்சு சூரியன் குளத்தில் குளித்து எழும்ப, சுற்றியுள்ள தென்னஞ்சோலை, பூ பூண்ட பனிமூக்குத்தி, இருபுறமும் பசுமையான வயல்வெளியில், இடையில் உள்ள பாதையில் அதிகாலையில் அந்த வாசனையை முகர்ந்தவாறு நடக்கும் மகிழ்ச்சி என கிராமச்சூழல் ஒரு வித மன ரம்மியம், சோடியம், மெர்க்குரி விளக்குகள் வெளிச்சத்தில் விளம்பர பேனர்கள், உயர்ந்து நிற்கும் கான்கிரீட் கட்டிடங்கள், வீறிட்டு செல்லும் வாகனங்கள் என பரபரப்பான நகரச்சூழல், எல்லா நகரமும் இயற்கையான கிராமங்களை அழித்து சில ஜோடிப்புகளுடன் உருவாக்கபட்டதாயினும், சிலருக்கு நகர வாழ்கைதான் மகிழ்ச்சி. அதுப்போல இயற்கையாக தேவன் தந்த இன்பமான பரிசுத்தத்தை அழித்து ஏற்படுத்தியது தான் மனிதன் உண்டாக்கிய சிற்றின்பமாகிய பாவங்கள்! . உலக இன்பத்தையும் இயேசுவையும் நான் ஏன் ஒரே நேரத்தில் ஏற்றுகொள்ள கூடாது? என கேட்கலாம். பிரச்சனை என்னவென்றால் சாத்தானுக்கு இன்பமாக தெரிபவை இயேசுவுக்கும், இயேசுவுக்கு இன்பமாக தெரிபவை சாத்தானுக்கும் அருவருப்பானவைகள். ஆதாம் ஏவாளின் உள்ளத்தில் பரிசுத்தம் தான் இன்பம் என்ற எண்ணத்தை தேவன் வைத்திருந்தார். ஆனால் சாத்தானோ பாவம் தான பரவசம் என்று அவர்களுக்கு போதித்தான். இந்நாட்களிலும் பரிசுத்தம் தான் இன்பம் என்பதை பல திரைகள் கட்டி பிசாசானவன் மனிதனுக்கு மறைக்க முயற்சி செய்கிறான். . பரிசுத்தம் எப்படி இன்பமாகும், அது ஒரு கட்டுபாடுதானே! என சிலருக்கு சந்தேகம் வரலாம். ஒரு நெல்லிக்காயை எடுங்கள், அதை பொறுமையாக சாப்பிடுங்கள். பின் நீர் அருந்தி பாருங்கள். தித்திப்பை உணருவீர்களல்லவா? புளிப்பான நெல்லிக்காயில் இனிப்பு எங்கிருந்தது? ஒரு ஸ்பூன் சீனியை விட நெல்லிக்காயில் இனிப்பு உடலுக்கு ஆரோக்கியம்! அதுபோல சகிப்பு தன்மையும், இச்சை அடக்கத்தையும் கொண்ட பரிசுத்தம் ஆரோக்கியமான உத்திரவாதமுள்ள இன்பம். . தேவபிள்ளைகளே! நான் தேவனுக்கு முனபாக பரிசுத்தமாக ஜீவிக்கிறேன் என்கிற தாழ்மையான வாக்குமூலமே உண்மையான இன்பம், அதுவே உங்களின் வாழ்க்கைக்கு திருப்தியையும், இரவில் உறக்கத்தையும் தரும். இந்த இன்பம் இல்லாதவரை எந்த இன்பமும் உங்களை திருப்தி செய்யாது. உலகத்தில் இன்பத்தை தேடுவீர்களென்றால் அது ஓட்டையுள்ள பாத்திரத்தை நிரப்ப எடுக்கும் முயற்சியாகவே இருக்கும். தெரிந்தெடுப்பு உங்களுடையது. . 'நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது' மகிழ்ச்சிக்கு முன்பாக வெளிச்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று' (எஸ்தர் 8:16). இந்த வசனத்திலும் மகிழ்ச்சிக்கு முன்பாக வெளிச்சம் இருப்பதை கவனியுங்கள். ஆகவே மகிழ்ச்சி நமக்கு வேண்டுமென்றால், வெளிச்சம் முதலாவது நமக்கு வேண்டும். 'இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்' (யோவான் 8:12). உலகத்திற்கு ஒளியாயிருக்கிற, வெளிச்சமாயிருக்கிற இயேசுகிறிஸ்து நம் உள்ளத்தில் இருந்தால், மகிழ்ச்சி தன்னாலே நம் இருதயத்தை நிரப்பும். நீதிமான்கள்; கிறிஸ்துவாகிய வெளிச்சத்தில் நடக்கும்போது, அவர்களுக்காக மகிழ்ச்சி ஏற்கனவே விதைக்கப்பட்டிருப்பதால், அது தன் காலத்திலே செடியாகி, மரமாகி, மகிழ்ச்சியாகிய கனியை கொடுக்கும். ஆமென் அல்லேலூயா! . காரிருள் நம்மை சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார் ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் உலகின் ஒளி நாமே . இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் . |