சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். - 1 கொரிந்தியர் 13: 7. . B.E. சிவில் இஞ்ஜினியரிங் படித்து முடித்த பிரபுவுக்கு அரபு நாடுகளில் ஒரு கட்டிடம் கட்டும் கம்பெனியில் வேலை கிடைத்தது. பிரபுவும் அவன் அம்மாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசித்ததினால், மகன் வெளிநாடு செல்வதை பிரபுவின் தாயார் விரும்பவில்லை. இருப்பினும், தன் குடும்ப பொருளாதார தேவைகளை நினைத்து சம்மதித்தார். பிரபு அரபு நாடு சென்றதும் அவனை ஆச்சரியப்பட வைத்தது, பேரீச்சம் மரங்களும், பேரீச்சம் பழங்களும் தான். அதுவும் அவ்வப்போது மரத்தில் பறிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். புதிய (Fresh) பேரீச்சம் பழங்களை பார்க்கும் பிரபுவுக்கு அவன் அம்மா ஞாபகம் வரும். காரணம் பிரபுவின் அம்மாவுக்கு பேரீச்சம் பழம் என்றால் உயிர். புதிய பேரீச்சம் பழம் இந்தியாவில் கிடைப்பது அரிது என்பதை அறிந்த பிரபு, ஒரு மாத லீவில் இந்தியா வந்த தன்னுடைய நண்பன் விநோத் மூலம் புதிய பேரீச்சம் பழப்பெட்டி ஒன்றை வாங்கி தன் தாயாருக்கு கொடுத்து அனுப்பினான். . பலவித காரணங்களால், விநோத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள் வேகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று தன் குடும்பத்தாரை சந்தித்து விட்டு, பிரபுவின் வீட்டிற்கு சென்று, பொருட்களையும், பேரீச்சம் பழப்பெட்டியையும் கொடுத்தான். தன் மகன் அன்போடு, ஆவலோடு கொடுத்தனுப்பிய பெட்டியை உடைத்து ஆசையோடு பேரீச்சம் பழங்களை ருசித்தாள் தாயார். பழம் 'வெகு ஜோர்' என்று சொல்லி தன் கணவருக்கும், தன் மகளுக்கும் கொடுத்தார். இருவரும் பழத்தை சாப்பிட்டுவிட்டு முகத்தை சுழித்தனர். காரணம், பேரீச்சம் பழங்கள், பழசாகி விட்டன. கெட்டுப் போகிற வாசனை பெட்டியிலிருந்து வந்தது. ருசியும் குறைந்து விட்டது. பிரபுவின் அப்பாவும், தங்கையும் அவன் அம்மாவை சாடினார்கள். கெட்டுப் போன பழத்தை சாப்பிட்டுவிட்டு, நன்றாக, ருசியாக இருக்கிறது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரபுவின் அம்மா 'நான் ருசித்தது என் அன்பு மகன் பிரபுவின் அன்பையே தவிர, பேரீச்சம் பழத்தையல்ல' என்றாராம். பிரபுவின் அம்மாவின் பதில் இருவரையும் சிந்திக்க வைத்தது. . அன்பானவர்களே! மேற்கண்ட சம்பவத்தில் பிரபுவின் அம்மா கெட்டுப்போன பழத்தின் ருசியை அறியாமல் போனதற்கு காரணம், தன் மகன் தன் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பாகும். நாம் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கும் போது தான், மேலான தன்மைகள் நம்மில் வெளிப்படும். இதைத்தான் நம் ஆண்டவர் இயேசு மாற்கு 12:30-ல் 'உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக' என்று சொல்லுகிறார். நம்மில் அநேகர் ஆண்டவருக்காக பல காரியங்கள் செய்யலாம். தியாகங்கள் செய்யலாம், பாடுகளை அனுபவிக்கலாம். ஆனால் இவை அனைத்தும், நம் ஆண்டவர் மேல் அதிகமான அன்பு வைத்து, முழுமனதோடு மனப்பூர்வமாய் செய்தால் மட்டுமே, அது ஆண்டவருக்கு பிரியமாய் இருப்பார். இயேசுவின் அன்பு நமக்காக ஜீவனைக் கொடுத்த அன்பு (1யோவான் 3:16) அந்த அன்புக்கு ஈடாக நாம் அவருக்கு என்ன செய்கிறோம். ஆண்டவருக்கு பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் உண்மையிலேயே அவரை அதிகமாக நேசிப்பவர்கள். 2கொரிந்தியர் 12:10-ல் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் என்று பவுல் இயேசுவின் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார். நாம் கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிப்பதில் சந்தோஷப்படுகிறோமா? தயங்கி ஓடி விடுகிறோமா? சிந்திப்போம். . துன்பங்களினாலே வியாகுலத்தினாலே உம்மை பிரிவேனோ சோதனையினாலே வேதனையினாலே உம்மை பிரிவேனோ எதை இழந்தாலும் என்ன நேர்ந்தாலும் என்னை பிரித்திடவே முடியாதே கண்ணீர் கவலையெல்லாம் - என் அன்பை பிரித்திடுமோ . இயேசுவே உம் அன்பிலிருந்து என்னை பிரிக்க முடியுமோ சூழ்நிலைகள் மாறினாலும் எந்தன் அன்பு மாறுமோ . |