அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - (எரேமியா 30:17). ஒருபெரிய மாளிகை அநேக நாட்களுக்குப் பிறகு சுத்தம் செய்யப்பட்டது அதுவரையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற பொருட்களெல்லாம் கீழே இறக்கப்பட்டு பழைய பொருள் கடைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்த வேலையாட்கள் எல்லாரும் மும்முரமாக சுத்தம் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். . அவர்களுள் ஜேன் என்ற பெண்ணும் ஒருவள். ஆண்டவருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த அவள் எந்த வேலையானாலும் அதை கவனத்துடன் நேர்;த்தியாய் செய்து முடிப்பாள். அன்றும் அப்படியே எல்லோருடன் சேர்ந்து தூசி தட்டி குப்பைகளையெல்லாம் ஒதுக்கி ஒரு புறமாக போட்டுக் கொண்டிருந்தாள். அதிலே கருப்புக் கறைபடிந்த ஆனால் சற்று கனமான ஒரு பாத்திரத்தொன்றை எடுத்து வைத்தாள். அதை தினமும் தண்ணீரில் ஊற வைத்து சோப்பு போட்டு கழுவி வந்தாள். கறைகள் கொஞ்ச கொஞ்சமாக போகத் துவங்கியது. இவ்வாறாக ஆறு மாதமாக சோர்வின்றி கழுவினாள். ஒரு நாள் முழுவதுமாக கறைகளெல்லாம் போய் வெண்மையாக மின்னியது. அது ஒரு விலையேறப் பெற்ற வெள்ளிப் பாத்திரம். அதை எஜமானியிடம் காட்டியபோது, 'குப்பைக்கு போக இருந்த பாத்திரத்தை மினனும் பாத்திரமாய் மாற்றி விட்டாயே' என்று ஜேனை மெச்சிக் கொண்டார். . நாமும் கூட நம் குடும்பத்திலுள்ள யாரோ ஒருவரையோ, அல்லது நமது பிள்ளைகளையோ குறித்து இவ்வாறு எண்ணலாம், 'இவனை திருத்தவே முடியாது. இவனது பாவ வாழ்க்கையிலிருந்து, கெட்ட சுபாவங்களிலிருந்து மீட்டிட ஒருவராலும் முடியாது. இவன் மனம் மாற வாய்ப்பே இல்லை' என்று முற்றிலும் நம்பிக்கை இழந்துப் போயிருக்கலாம். . ஆனால் அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்வு மாற வேண்டுமென்று தேவனை விடாமல் பற்றிக் கொண்டு மன்றாடுவோம். அவர்களை பாவி என்று ஒதுக்கி தள்ளிவிடாமல்,அனுதினமும் நல்ல காரியங்களையும் நம்பிக்கையான வார்த்தைகளையும் பேசுவோம். 'கர்த்தர் உன்னைக் குறித்து ஒரு அருமையான திட்டம் வைத்துள்ளார். அதை உன்னைக் கொண்டுதான் நிறைவேற்றுவர். நீ தேவனுக்கு வேண்டும்' என விசுவாச வார்த்தைகளை பேசுவோம். அந்த வார்த்தைகள் அவரில் கிரியை செய்ய ஆரம்பிக்கும். . பிரியமானவர்களே, ஒருவேளை நீங்கள் யாருக்கும் நான் பிரயோஜனமில்லை என்று உங்களைக் குறித்தே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களா? கர்த்தர் யாரையும் எந்த பிரயோஜனமும் இல்லாதவராக படைக்கவில்லை. ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் இருப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு. ஆகாதது என்று தள்ளப்பட்டவர்களே பிற்காலத்தில் சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் மிகவும் பிரயோஜனமுள்ளவர்களாக இருந்ததுண்டு. யாரையும் புறம்பே தள்ளாத கிறிஸ்துவை பிடித்துக் கொள்ளுங்கள். அவர் தெரிந்துக் கொண்டவர்களை யாரும் தாழ்த்த முடியாது. அவர் உயர்த்துகிறவர்களை யாராலும் தாழ்த்தவும் முடியாது. ஆமென். . நாம் ஆகாது என்று தள்ளினவர்களையே தேவன் குடும்பத்தில் மூலைக்கல்லாய் மாற்றுவார். குப்பையிலும், தாழ்விலும் இருப்பவர்களை எடுத்து உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்துபவரல்லவா நம் தேவன்! அவரையே நம்புவோம். அவரே மாற்றுவார்! பெரிய காரியத்தை செய்வார். ஆமென் அல்லேலூயா! . தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மையுள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா . பாலை நிலத்தில் கிடந்தேன் தேடி கண்டு பிடித்தீர் கண்ணின் மணிபோல காத்து வந்தீர் கழுகு போல் சுமக்கின்றீர் . உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா |