Friends Tamil Chat

திங்கள், 31 மார்ச், 2014

31st March 2014 - பாடுகளின் மத்தியில் வெற்றி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 31-ம் தேதி - திங்கட் கிழமை
பாடுகளின் மத்தியில் வெற்றி
...

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. - (லூக்கா 10:19).


ஒருபாடுகளும் பிரச்சனைகளும் வரும்போது நாம் துவண்டு போவது சகஜம். என்ன செய்வது என்று தவிக்கும் நேரத்தில் யாராவது உதவிக்கு வந்தால் நலமாக இருக்குமே என்று நினைக்கவும் தோன்றும்.

.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி வரும்போது, எதிரே சிவந்த சமுத்திரம் முன்பாக இருந்தது. அது ஆழம் மிகுந்தது, அதை கடந்து செல்ல எந்த படகும், கப்பலும் அவர்களுக்கு இல்லை. பின்னாக பார்க்கும்போது, பார்வோனின் சேனை அவர்களை துரத்தி பிடிக்கும்படியாக வந்துக் கொண்டிருந்தது. மோசேக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்'. ஆம், மோசேயும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார், 'அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்' ( யாத்திராகமம் 14: 10,15,16) என்று சொன்னார். மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினபோது, புரண்டு வந்துக் கொண்டிருந்த அந்த சிவந்த சமுத்திரம் குவியலாய் இரண்டாக பிரிந்து, நடுவில் பாதையை அமைத்து கொடுத்தது. அல்லேலூயா! உலர்ந்த தரை வழியாக இஸ்ரவேலர் சமுத்திரத்தை கடந்தார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பார்வோனின் சேனையோ, அதே சமுத்திரம் திரும்பி வந்து, அவர்கள் அனைவரையும மூடிப்போட்டது.

.

மோசேக்கு பிறகு தேவன் தெரிந்து கொண்ட யோசுவா ஜனங்களை வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு கொண்டு போவதற்கு முன் அவர்கள் யோர்தான் நதியை கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் அவர்களுக்கு படகோ, கப்பலோ இல்லை. இப்போது மோசேயின் கையில் இருந்த கோலும் இல்லை. அந்த கோலினாலே அநேக அற்புதங்களை மோசே தேவக் கிருபையால் செய்திருந்தார். யோசுவா ஐயோ கோல் என்னிடம் இல்லையே, எப்படி நான் இந்த கடலை தாண்டுவேன் என்று துயரப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை, யோசுவாவுக்கு தெரியும் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தில் வழி திறக்க முடியுமென்றால், யோர்தானிலும் வழிதிறக்க முடியும் என்று. 'யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்' (யோசுவா 3:5). 'யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்' (யோசுவா 3:15-16). யோர்தான் நதியும் விசுவாசிகள் கடந்து போவதற்காக பிரிந்து வழிவிட்டது. அவர்கள் உலர்ந்த தரைவழியாக நடந்துப்போவதுப் போல யோர்தான் நதியின் நடுவாக நடந்துப் போனார்கள். அல்லேலூயா!

.

அதற்குப்பின் அநேக வருடங்கள் கழித்து, எலியா தீர்க்கதரிசி, கர்த்தர் சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், எலிசா அவரை பின்தொடர்ந்து இரட்டிப்பான வரம் வேண்டி அவரோடு சென்றுக் கொண்டிருந்தபோது, இருவரும் யோர்தான் நதியை சந்திக்கிறார்கள். 'அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்' (2 இராஜாக்கள் 2:8). யோர்தான் இருபக்கமாக பிரிந்து, அவர்கள் இரண்டு பேரும் தரைவழியாக போவதைப் போல நடந்து, யோர்தானை கடந்துப் போனார்கள். அல்லேலூயா! கர்த்தரை நம்பியிருந்த இவர்கள் பிரச்சனை முன்பாக இருப்பதைக்கண்டு பயந்து போய் இருக்கவில்லை. தைரியமாக கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, பிரச்சனைகளின் மேல் வெற்றி எடுத்தார்கள்.

.

இவர்கள் எல்லாரையும் விட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட விசுவாசிகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவின் கிருபை இருப்பதால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

.

நாம் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போல கடலை பிளக்க தேவையில்லை, அதன் மேல் நடந்து சென்று அற்புதத்தை பெற்றுக் கொள்ள முடியும்! அல்லேலூயா! 'இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது (மாற்கு 14:25-32). பேதுரு கர்த்தரை பார்த்து நடந்தவரைக்கும் அவர் மூழ்கவில்லை. கடலின் மேல் நடந்தார். ஆனால் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பயந்த போது அமிழ ஆரம்பித்தார். கர்த்தர் மூழ்கட்டும் என்று சும்மா பார்த்துக் கொண்டு இருக்கவில்லை, உடனே தம் கரத்தை நீட்டி அவரைப்பிடித்து, தூக்கி, திரும்பவும் இருவரும் நடந்து வந்து படகில் ஏறினார்கள்.

.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு மோசேயைப் போல நமக்கு கோல் தேவையில்லை, யோசுவாவைப்போல் உடன்படிக்கை பெட்டி தேவையில்லை, எலியாவின் சால்வை தேவையில்லை. பிரச்சனைகளைப் பார்த்து அப்படியே மூழ்கிப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கடலின் மேல் இயேசு நடந்ததைப் போல நாமும் பிரச்சனைகளின் மேல் நடக்க முடியும். அல்லேலூயா!

.

'இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது' (லூக்கா 10:19) என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மோடு இருப்பதால் பிரச்சனைகளை கண்டு மனம் துவளாமல், அவைகளின் மேல் நாம் நடந்து, பிரச்சனைகளை கொண்டு வருகிற சாத்தானாகிய சர்ப்பங்களையும் தேள்களையும் மிதித்து, வெற்றி எடுப்போம். உலகத்தின் கடைசி பரியந்தம் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னவர் நம்மோடு இருந்து வெற்றி எடுக்க கிருபை செய்வார். பிரச்சனைகளை பார்த்து அமிழ்ந்து போகும்போது, அவரை நோக்கி பார்க்கும்போது, அவர் உடனே தம் கரத்தை நீட்டி நம்மை தூக்கி எடுத்து, மீண்டும் நம்மை நடக்க வைப்பார். ஆமென் அல்லேலூயா!

.

சர்ப்பங்களை மிதித்திடவும் - பெரும்

தேள்களை நசுக்கிடவும்

அதிகாரம் உண்டு வல்லமை உண்டு

தோல்வி இல்லை வெற்றி நமக்கே என்றும்

தோல்வி இல்லை வெற்றி நமக்கே

.

அந்தகார வல்லமைகளை

தேவ பெலத்தால் முறியடிப்பேன்

இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு

பயம் இல்லை வெற்றி எனக்கே - என்றும்

போராயுதம் தரிப்பேன்

போர் செய்வேன் போர் செய்வேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போல நாங்கள் கோலைக் கொண்டோ, மற்ற எவற்றைக் கொண்டும் அல்ல, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வெற்றி எடுக்க கிருபை செய்திருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். சத்துருவின் எந்த வல்லமைகளையும், எந்த பிரச்சனைகளையும் இயேசுவின் நாமத்தில் நாங்கள் வெற்றி எடுக்க தேவன் கிருபை செய்யும். விசுவாசத்தில் உறுதியாய் நிற்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.