Friends Tamil Chat

வியாழன், 13 மார்ச், 2014

13th March 2014 - தேவனுடைய வார்த்தையாகிய வேதம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 13-ம் தேதி - வியாழக் கிழமை
தேவனுடைய வார்த்தையாகிய வேதம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).

.

ஒருஇங்கிலாந்து தேசத்தில் பிராங்க்மாரிசன் என்ற வக்கீல் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முழு நாத்திகர். அவர் இயேசுவைப் பற்றி எண்ணியிருந்த கருத்து என்னவென்றால், 'ஒருவேளை இயேசு என்ற ஒருவர் இந்த உலகில் பிறந்து, போதனை செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மரணமடைந்து பின்னர் உயிரோடெழுந்தார் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது' என்பதுதான். இவர் தனது கருத்தை தானே அடிக்கடி மெச்சிக் கொள்வார். மேடைகளிலும் இதனை குறித்து சொற்பொழிவாற்றுவார்.

.

திடீரென்று ஒரு ஆசை வந்தது. தன் திறமை எல்லாவற்றையும் செலவிட்டு இயேசு உயிரோடு எழும்பவில்லை என்பது சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதிவிட்டால், அது காலங்காலமாக மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுமே என்றெண்ணினார். மறுநாளே புத்தகம் எழுத உட்கார்ந்து விட்டார். வேதத்தை மறுத்து எழுத வேண்டுமென்றால், முதலில் வேதத்தை முழுவதுமாக படிக்க வேண்டுமல்லவா?.

.

மாரிசன் தாமதிக்கவில்லை. பரிசுத்த வேதாகமத்தை இரவு பகலாக படித்தார். வாசிக்க, வாசிக்க மறுப்பு வருவதற்கு பதிலாக வியப்பும் திகைப்பும் வந்தது. இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க கண்ணீர் வந்தது, தான் எத்தனை பெரிய பாவி என்று உணர்ந்தார். கடைசியாக புத்தகம் எழுதினாரா? ஆம், எழுதியே விட்டார். ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று எழுதுவதற்கு பதிலாக, 'இயேசு நிச்சயமாகவே உயிர்த்தெழுந்தார்' என்று ஆக்கபூர்வமான புத்தகம் எழுதி முடித்தார். இவர் எழுதிய புத்தகம்தான் ஆங்கிலத்தில் மிகவும் புகழ்பெற்ற நூலான "Who Moved the Stone" என்ற புத்தகமாகும்.

.

பயங்கரமான நாத்திகர்களையும் ஆஸ்திகர்களாக மாற்ற வல்லது நம் தேவன் தந்த பரிசுத்த வேதாகமம்தான். நிறைகளை மாத்திரம் சொல்லாமல், ஒரு மனிதன் செய்த குற்றங்களையும், அதினால் ஏற்பட்ட விளைவுகளையும், உள்ளதை உள்ளபடி சொல்வதால்தான் அது சத்திய வேதம் என்று பெயர் பெற்றது.

.

ஒரு மனிதனை மாற்ற வல்லது வேதாகமம்தான். அதை உள்ளன்போடு கர்த்தர் என்னோடு பேசுமே என்று பயபக்தியோடு படிப்பவர்கள் தாங்கள் இருந்தபடி இருக்க மாட்டார்கள். பரிசுதத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற்று, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவார்கள்.

.

ஒரே வசனத்திலிருந்து பலவித பிரசங்கங்களை செய்ய முடியும். விதவிதமான கருத்துக்களை சொல்ல முடியும். ஏனெனில் 'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'. ஆம், அந்த வார்த்தைகள், ஜீவனுள்ளது, வல்லமையுள்ளது. பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க வல்லது. அந்த அற்புத வார்த்தைகளை கவனத்தோடும், அன்போடும், ஆழமாயும் வாசிப்போம். நேசிப்போம். நம் வாழ்க்கை மாறும். நம் நினைவுகள் மாறும், நம் சிந்தனைகள் மாறும். ஆமென் அல்லேலூயா!

.

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்

என்னை திருத்த வேண்டும் தேவா

அன்போடு உமது வசனம்

கற்றுத் தந்து நடத்த வேண்டும்

.

மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே

துதியும் கனமும் தூயோனே உமக்கே

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் எங்களுக்கு தந்த அற்புதமான வேத புத்தகத்தை நாங்கள் கருத்தோடு வாசித்து, அதிலுள்ளவைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, எங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் ஓட கிருபை செய்யும். நீர் கொடுத்த வேதத்திற்காக உமக்கு கோடி நன்றிகள் ஐயா. வேதம் தங்கள் மொழிகளில் கிடைக்கப் பெறாத அபாக்கியசாலிகளுக்கு சீக்கிரமாய் அவர்கள் மொழிகளில் வேதம் மொழி பெயர்க்கப்பட கிருபை செய்யும். அவர்களும் வாசித்து, உன்னத அனுபவங்களை பெற்றுக் கொள்ளட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another


எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் ஜெபங்களை கேட்டு, அதிசயவிதமாய் பதில் கொடுக்கிற அன்பு தயவிற்காக உமக்கு எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறோம். தேவன் எத்தனை நல்லவர், எங்கள் விண்ணப்பங்களுக்கு செவி கொடுக்கிறீரே, பதில் கொடுக்கிறீரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா,

.

சகோதரன் அன்டினி அவர்களின் தாயார் ஜாய்டோரா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தரையில் வழுக்கி விழுந்தபடியால், கால்கள் வீங்கி இருப்பதால் அவர்கள் சரியான வைத்தியரிடம் போய் சிகிச்சை எடுக்கவும், அவர்களுக்கு இருக்கிற சர்க்கரை வியாதியினால் சரீர வேதனைகள் ஏற்படுவதால், அவர்களை சுகமாக்கவும் ஜெபிக்கிறோம். அவர்களுடைய வேதனைகள் நீங்கி, சந்தோஷமாக வாழ கிருபை செய்யும்.

.

சகோதரி அனிதாவின் கணவர் குடித்துவிட்டு, வந்து குடும்பத்தில் கலாட்டா செய்வதுடன், அநேக கெட்ட வழக்கங்கள் உடையவராக இருப்பதால், தேவன் அவரை சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம். தன் வாழ்வு இருண்டு போய் விட்டதே என்று கலங்கி நிற்கும் சகோதரிக்கு, வெளிச்சமாக உமது கிருபை வந்து இறங்கட்டும் தகப்பனே, தன்னுடைய ஆறு வயது மகனின் படிப்பிற்கு பணம் கட்டாதபடியால், அவன் படிப்பும் கெட்டுப் போகிற நிலைமையில் இருக்கிறபடியால், தேவன் அந்த மனிதனை சந்திப்பீராக. அந்த சகோதரியின் கண்ணீரை துடைப்பீராக. குடும்பத்தை நேசிக்கிறவராக மாற்றும். கர்;த்தருக்கு பயப்படுகிற பயத்தை கொடுத்தருளும். அந்த குடும்பம் கர்;த்தரை நேசிக்கிற குடும்பமாக, அன்புள்ள குடும்பமாக மாற்றும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி கரோசலோ அவர்களின் மகள் பிளஸ் டூ எழுதியிருப்பதால், நல்ல மதிப்பெண்களோடு பாஸ்பண்ண தேவன் தாமே கிருபை செய்வீராக. சகோதரியின் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றுவீராக. உமக்கென்று வாழ கிருபை செய்யும்.

.
இந்த மாதத்தில் பிளஸ்டூ மற்றும் பத்தாவது பரிட்சை எழுதிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் மீண்டும் உமது கரத்தில் வைக்கிறோம். சகோதரன் சம்பத் ஆபிரகாமின் மகன்.
மீசாயேல்,மற்றும் சாரா, கிறிஸ், பிரீத்தி போன்ற ஒவ்வொரு பிள்ளையும் பெயர் சொல்லியிராத மற்ற பிள்ளைகளும், நல்ல மதிப்பெண்களோடு பாஸ் செய்து, கர்த்தர் அவர்களுக்கென்று வைத்திருக்கிற பாடங்களில் போய் சேர தேவன் கிருபை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.