ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். - (எபேசியர் 5:15-16). . கடந்த வெள்ளியன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்றுக் கொண்டிருந்த விமானம் கடலில் மூழ்கி அதிலிருந்த 239 பேரும் கடலில் மரித்துப் போனார்கள் என்ற செய்தி அனைவரையும் உலுக்கிற்று. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சிறந்த ஒரு விமானமாக கருதப்படுகிறது. இதுவரை இதுப் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் மலேசியன் ஏர்லைன்ஸில் ஏற்பட்டதில்லை. . உறவினர்கள், பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று எல்லாருமே செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அன்று புறப்பட்டு சென்ற பயணிகள் அனைவருக்கும் இன்று தாங்கள் மரிக்க போகிறோம் என்று தெரியாது. தாங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்து, தங்கள் வேலைகளை தொடருவோம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பாராத வேளையில் ஒருவருமே பிழைக்க முடியாதபடி அப்படியே கடலில் மூழ்கி மரித்தார்கள். பைலட் சரியில்லை என்றும் சொல்ல முடியாது, அவர் தன்னால் இயன்றதை செய்து, எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று தன் முழு முயற்சிகளையும் எடுத்திருப்பார். . மரித்த இவர்கள் எல்லாரும் பாவிகள், கர்த்தரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதனால் அவர்களுக்கு அப்படி ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா? இல்லை, இதே போன்ற சம்பவம் நடந்தபோது, கர்த்தர் அவர்களை குற்றப்படுத்தி சொல்லவில்லை, 'சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்' (லூக்கா 13:4-5). ஆம், கர்த்தர் யாரையும் குற்றப்படுத்தவில்லை. . பிரியமானவர்களே, வசனம் சொல்கிறது, 'ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்' என்று. நாம் காண்கிற இந்த நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருக்கிறதை நாம் காண்கிறோம். பத்து வருடங்களுக்கு முன் பயமின்றி தெருவில் நடந்த பெண்களுக்கு இப்போது யாருடைய துணையுமில்லாமல் நடக்க முடியாது என்ற நிலை ஆகியிருக்கிறது. திடீர் திடீர் என்று எதிர்பாராத மரணங்கள், கதிகலங்க வைக்கிறது. நாம் ஆயத்தமாய் இல்லை என்றால், நித்தியத்தை எங்கு கழிப்போம்?. . இந்த உலகத்தின் காரியங்களுக்காகவே நாம் நம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தால், மறுமைக்கான காரியங்களை எப்போது சிந்திக்க போகிறோம்? மறுமை வாழ்வுதான் நித்தியமானது. நித்தியம் என்றால், முடிவே இல்லாதது. அதைக் குறித்துதான் நாம், இந்த உலக வாழ்வை விட அதிகமாக சிந்திக்க வேண்டியதாகும். . அந்த விமானத்தில் சென்றிருந்தவர்களுக்கு ஒரு தருணம் கொடுக்கப்பட்டு, 'உங்களுக்கு இப்படி ஆகப்போகிறது, உங்கள் நித்திய வாழ்வை எப்படி தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்' என்று கேட்டிருந்தால், ஒருவேளை அவர்கள் ஆயத்தமாகி இருந்திருக்க கூடும். மரணம் எதிர்பாராத நிலையில் அவர்களுக்கு வந்தபோது, ஆயத்தமாக இருந்தவர்கள் பாக்கியவான்கள், ஆயத்தாமாயிராதவர்கள் நித்தியத்தை எங்கு செலவழிப்பார்கள்?. . கர்த்தருடைய வருகையும் இப்படித்தான் எதிர்பாராத வேளையில் வர இருக்கிறது. திருடனைப் போல வருகிறேன் என்று சொன்னவர் சீக்கிரம் வர இருக்கிறார். திருடன் ஒரு நாளும் நான் வந்து திருடப்போகிறேன் என்று சொல்லி வந்து திருடுவதில்லை, நாம் நினையாத நேரம், வெளியே சென்றிருக்கும் நேரம், நாம் தூங்கும் நேரம் வந்து திருடிக் கொண்டு செல்வான். அதுப்போல நம் இயேசுகிறிஸ்துவும், யாரும் அறியாத நேரத்தில் வருவார். 'சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே' (1தெசலோனிக்கேயர்5:4) என்று பவுல் சொன்னதைப்போல ஆயத்தமாய் இருப்பவர்கள் பாக்கியவான்கள். ஆயத்தமாய் இராதவர்களோ????? கர்த்தர் எப்போது வந்தாலும் அவருக்கு எதிர்கொண்டு செல்லத்தக்கதாக ஆயத்தமாவோம். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். மாரநாதா! அல்லேலூயா! . அவர் வருகை எதிர்ப்பார்க்கும் பக்தர்க்கு அவர் வருகை மாபெரும் மகிழ்ச்சி அவர் வருகை எதிர்பாராத மாந்தர்க்கு அவர் வருகை மாபெரும் அதிர்ச்சி . என் இயேசு இராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடே என்னை மீட்ட இயேசுஇராஜன் என்னை சேர்க்கவே வருவார் |