Friends Tamil Chat

திங்கள், 3 மார்ச், 2014

03rd March 2014 - புறம்பான இருள் (பாகம் ஒன்று)

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 03-ம் தேதி - திங்கட் கிழமை
புறம்பான இருள் - (பாகம் ஒன்று)
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். - (மத்தேயு 8:1-12).

.

இயேசுகிறிஸ்து 'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு' என்று சொன்னது போலவே நித்திய நரகத்திலும் பலவிதமான இடங்கள் உண்டு.

.

கெஹன்னா என்னப்படும் நித்திய நரகத்திற்குள் அக்கினியும் கந்தகமும் எரிந்து கொண்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளில் சிலரை புறம்பான இருளுக்குள் போங்கள் என்று தேவன் நியாயம் தீர்த்ததாக நாம் வாசிக்கிறோம். அவர்கள் பாவிகள் அல்ல, துன்மார்க்கரும் அல்ல. ஆனால் கர்த்தரை அறிந்த பிற்பாடு பரலோக ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கோ, மணவாட்டியாய் எடுத்துக் கொள்ளப்படுவதற்கோ தகுதியற்றவர்களாக ஜீவித்தவர்கள். இவ்விதமாக புறம்பான இருளுக்குள் போகிறவர்கள் யார் என்பதற்கான நான்கு சத்தியங்களை கீழே தியானிப்போம்.

.

1. விசுவாசம் இல்லாத விசுவாசிகள்:

பலருடைய பெயர்களிலே கிறிஸ்தவம் இருக்கும். ஆனால் அவர்களது ஜீவியத்திலே கிறிஸ்தவம் இராது. உலகத்தில் அநேக மாயைகளை நாம் காண்பது போலவே, கர்த்தருடைய சபையிலும் சில மாயைகளை நாம் பார்க்க முடியும். அதுதான் மாய்மாலமான கிறிஸ்தவர்கள். அவர்கள் விசுவாசிகள் என்ற வரிசையில் அமர்ந்திருப்பார்க்ள. ஆனால் அவர்களுக்குள் விசுவாசம் இராது.

.

'இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்' (மத்தேயு 8:10-12) என்று நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திட்டவட்டமாய் நம்மை எச்சரிக்கிறார்.

.

புறஜாதியில் பிறந்த நூற்றுக்கு அதிபதி நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சர்வ வல்லமையை விசுவாசித்தான். மரணத்துக்கு ஏதுவாக கிடந்த வேலைக்காரனை இயேசுவால் குணமாக்க முடியும் என்று விசுவாசித்தான். இயேசுகிறிஸ்து தம் கரத்தைக் தொட்டு அல்ல, அவருடைய வார்த்தையை அனுப்பி குணமாக்க முடியும் என்று விசுவாசித்தான். எனவே இயேசுவின் வார்த்தையில் சர்வவல்லமை உண்டு என்று விசுவாசிப்பதே தேவன் பாராட்டுகிற விசுவாசம். அதுவே வேதத்தில் சொல்லப்பட்ட பெரிய விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசம் இல்லாதவர்கள் போலியான விசுவாசிகள். அவர்கள் கடைசிகால நியாயத்தீர்ப்பு அன்று புறம்பான இருளிலே வீசப்படுவார்கள் என்று நாம் எச்சரிக்கப்படுகிறோம்.

.

2. கல்யாண வஸ்திரம் தரித்திராதவர்கள்:

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரலோக இராஜ்யத்தைக் குறித்து சொல்லும்போது, இராஜாவின் குமாரனுக்கு நடக்கப் போகும் கலியாணத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். கலியாண விருந்துக்கு வருவது எல்லோருக்கும் சந்தோஷமான காரியம்தானே. அதுவும் ராஜா வீட்டு கல்யாணத்துக்கு வருவது எலலோருக்கும் மகிழ்ச்சியான அனுபவம்தானே. ஆனால் இராஜா வீட்டு கல்யாணத்துக்கு வருவதற்கு பலர் ஆயத்தமாக இல்லை.

.

சிலருக்கு வர மனமில்லை (மத்தேயு 22:3)

சிலர் அசட்டை பண்ணினார்கள் (22:5)

மற்றவர்கள் அழைப்புக் கொடுக்க வந்த ஊழியக்காரரை அடித்து அவமானப்படுத்தினார்கள் (22:6)

.

ஆனாலும் நம் பிதாவாகிய இராஜா, மேலும் ஊழியக்காரை அனுப்பி, வழிசந்திகளிலே கரணப்பட்ட யாவரையும் கல்யாணத்திற்கு அழைத்தார். கலியாண சாலை விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. ஆனால், விருந்து பரிமாறப்படுவதற்கு முன்பு இராஜா விருந்து சாலைக்குள் வந்தார். கல்யாண விருந்துக்கு தகுதியற்ற ஒருனைக்கண்டார்.

.

'விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: 'சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்' (மத்தேயு 22:11-13).

.

இவ்விதமாக புறம்பான இருளிலே வீசப்படுகிற இரண்டாவது கூட்டம் கலியாண வஸ்திரம் இல்லாதவர்கள் என்று புரிந்துக் கொள்கிறோம். கலியாண வஸ்திரம் தரிக்காமல் எப்படி கலியாண வீட்டுக்குள் ஒருவன் வந்தான். இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன? இதை விளங்கிக் கொள்வதற்கு இஸ்ரேல் தேசத்தின் சரித்திரப் பின்னணியை நாம் கவனிக்க வேண்டும்.

.

ராஜா வீட்டுக் கல்யாணத்துக்கு கலியாண சாலைக்குள் நுழைகிற எல்லோருக்கும் முன் வாசலில் வைத்தே கலியாண வஸ்திரம் கொடுக்கப்படும். நேர் வழியாய் வருகிற அனைவரும் கலியாண வஸ்திரத்தை இலவசமாய் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் பக்க வழியாய் நுழைபவர்களுக்கு கலியாண வஸ்திரம் கிடைக்காது. இவ்விதமாக முன் வாசல் வழியாக, நேர் வழியாக உள்ளே பிரவேசியாமல் பக்க வழியாய் நுழைந்த ஒருவன் கலியாண சாலையில் அமர்ந்திருந்தான். அதனால்தான், சிநேகிதனே நீ கலியாண வஸ்திரம் இல்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று இராஜா கேட்டதற்கு அவன் பதில் சொல்லாமல் நின்றான். ஏனென்றால் இலவசமாய் கிடைக்கிற கலியாண வஸ்திரத்தை நீ ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? கல்யாண வஸ்திரம் இல்லாமல் எப்படி அமர்ந்திருக்கிறாய் என்று அவனைக் கேட்டார். அவன் பதில் சொல்லாதபடியால், அவன் கையையும் காலையும் கட்டி புறம்பான இருளிலே தூக்கி வீசும்படி இராஜா கட்டளையிட்டிருந்தார். எனவே கலியாண வஸ்திரம் இல்லாதவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள் என்று புரிந்துக் கொள்கிறோம்.

.

இரட்சிக்கப்படுவதும், முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பதும்தான் கலியாண வஸ்திரம் என்று வேதம் திட்டவட்டமாய் சொல்லுகிறது. 'மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்' (ஏசாயா 61:10) என்று வேத வசனம் சொல்வதை பார்க்கிறோம். இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்திக் கொள்வதென்பது பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று பரிசுத்தத்தை அணிந்துக் கொள்வதுதான். நீதியின் சால்வையை அணிவது என்பது முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து சுத்த மனசாட்சியை பெற்றுக் கொள்வதுதான் (மத்தேயு 3:15).

.

இந்த இரண்டு ஆவிக்குரிய அனுபவங்களும் இல்லாமலேயே புதிய ஏற்பாட்டு பரிசுத்த சபைக்குள் நுழைகிற மாய்மால கிறிஸ்தவர்கள் உண்டு, அப்போஸ்தலர் பவுலின் ஊழியத்திலும் பக்கவழியாய் நுழைந்;தவர்கள் உண்டு என்று கூறுகிறார் (கலாத்தியா 2:4).

.

அன்பானவர்களே, உண்மையான இரட்சிப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?, பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தம் அடைந்திருக்கிறீர்களா? சுத்த மனசாட்சியுடன் வாழ்வேன் என்று கர்த்தரோடு உடன்படிக்கை செய்து முழுக்கு ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்களா? இவ்விதமாக இரடசிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்களே கர்த்தரின் வருகையிலும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

.

இரட்சிக்கப்படாமலும், ஞானஸ்நானம் எடுக்காமலும் காலம் கடத்துபவர்கள் புறம்பான இருளிலே தூக்கி வீசப்படுவார்கள். இவர்களே கலியாண வஸ்திரம் இல்லாமல் கலியாண சாலைக்குள் வந்தவர்கள்.

.

இந்த எச்சரிப்பின் சத்தத்தை வாசிக்கிற நாம் இன்றே இரட்சிக்கப்படுவோமா? ஆவிக்குரிய சபையிலே முழுக்கு ஞானஸ்நானம் பெற்று உத்தம விசுவாசிகளாக மாறுவோம். இராஜாவின் கல்யாண விருந்துக்கு ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா! (தொடரும்).

(பாஸ்டர் மா.ஜான்ராஜ் அவர்களின் மரணத்திற்குப்பின் சம்பவிப்பது என்ன என்ற புத்தகத்திலிருந்து)

.

இராஜ்யத்தின் புத்திரர் என்போர்

அழைப்பை அசட்டை செய்து விட்டார்

வேலியருகே உள்ள மனிதர்

கலியாண சாலை நிரப்புவார்

.

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் - இந்த

கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, புறம்பான இருள் என்று வேதத்தில் நாங்கள் வாசிக்கிற இடம், அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம் என்று இருக்கிறபடியால், அந்த இடத்திற்கு யாரும் செல்லாதபடி, தங்களை இப்போதிருந்தே கர்த்தர் கொடுக்கும் எச்சரிக்கை வார்த்தைகளை கேட்டு மனம் திரும்ப கிருபை செய்யும். கர்த்தரின் அழைப்பை அசட்சை செய்யாதபடி காத்துக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் நேச தகப்பனே, இதுவரை நாங்கள் செய்து வருகிற எல்லா ஜெபத்தையும கேட்டு, அதனதின் நேரத்தில் நேர்த்தியாய் பதில் தரப் போகிற உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை துதிக்கிறோம்.

.

இந்த மாதத்திலும் இந்தியாவிலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய பள்ளிகளிலும் ஆரம்பித்திருக்கும் பரிட்ச்சைகளுக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, அநேக விசுவாசிகளின் பிள்ளைகள் இந்த பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு பரிட்சை எழுதுகிறபடியால், தேவன் தாமே ஒவ்வொரு பரிட்சை எழுதும்போதும் உம்முடைய கரம் அவர்களை தாங்கி, படித்த பாடங்கள் மனதில் தங்கி, எழுதும்போது ஞாபகத்திற்கு வந்து, சரியானபடி எழுத கிருபை தருவீராக. இந்த பரிட்சைகளின் மார்க்குகள் இவர்களுடைய எதிர்காலத்திற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்க போகிறபடியால், இவைகளை சரியானபடி, ஒழுங்காக எழுத கிருபை செய்யும். ஒவ்வொரு வினாத்தாளும் மிகவும் இலகுவாகவும், புரியக்கூடியதாகவும் இருக்க கிருபை செய்யும். குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும் என்ற வார்த்தையின்படி, இவர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி, எழுத போவதை தேவரீர் ஆசீர்வதித்து, திருத்துகிறவர்களின் கண்களில் தயவு கிடைத்து, சரியாக திருத்தும்படியாகவும், ஒவ்வொரு பிள்ளையும் நல்ல மதிப்பெண்களோடு பாஸ் பண்ணவும் கிருபை செய்யும். கர்த்தர் எங்களுக்கு பெரிய காரியம் செய்தார் என்று சாட்சி சொல்லத்தக்கதாக தேவன் தாமே இந்த பிள்ளைகளின் வாழ்வை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி அமலினி அவர்களின் நண்பர் இரண்டு வருடங்களாக கிட்னி வேலை செய்யாதபடியால் மிகவும் கடினமான வேதனை, வருத்தத்தின் பாதையில் கடந்து செல்வதாலும், கிட்னி மாற்றம் செய்தும், அதுவும் வேலை செய்யாதபடியினாலும், தேவன் அந்த சகோதரனுக்கு இரங்கும்படியாக ஜெபிக்கிறோம். மீண்டும் மாற்றம் செய்ய முடியாத நிலையில், எங்களுடைய கண்கள் உம்மையே நோக்கி பார்க்கிறது தகப்பனே, இரங்கும் ஐயா, அந்த சகோதரன் படும் வேதனைகளிலிருந்து ஒரு விடுதலையை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம். சுகத்தை தருவீராக. இரண்டு கிட்னியும் சரியானபடி வேலை செய்ய கட்டளையிடுவீராக. உமக்கு அற்புத சாட்சியாக சகோதரனை எழுப்புவீராக.

.

சகோதரி அன்பு ஸ்டேன்லி அவர்கள் புறமதத்திலிருந்து குடும்பமாக கர்த்தரை ஏற்றுக் கொண்டு, உமக்கென்று வாழ்கிறபடியால் உம்மை துதிக்கிறோம். அவர்களுக்குள் சத்துருவானவன் கொண்டு வருகிற எல்லா குற்ற உணர்ச்சிகளையும் தேவன் மாற்றிப் போடுவீராக. தும்மண்டை வந்த எவரையும் புறம்பே தள்ளாத தேவன், எப்போது அவரிடம் மன்னிப்பு கேட்டு பெற்றுக் கொள்கிறோமே அன்றே மன்னித்து மறக்கிற தேவன் சகோதரியின் மனதில் உள்ள எல்லா குழப்பங்களையும் நீக்கிப் போடுவீராக. அவர்கள் வேலையை பெற்றுக் கொள்ளாதபடி தடை செய்கிற சத்துருவின் எல்லா அந்தகார சக்திகளின் கிரியைகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கடிந்து அப்புறப்படுத்துகிறோம். சகோதரிக்கு உடனே ஒரு அவர்கள் படிப்பிற்கேற்ற நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சுகமாய், செழிப்பாய் வாழ கிருபை செய்யும்.

.

சகோதரி எப்சிபாவிற்கு தேவன் தாமே ஒரு நல்ல வேலையைக் கட்டளையிடுவீராக. அவர்களுக்கு ஏற்ற ஒரு துணையை தேவன் தாமே ஏற்படுத்தி, நல்ல வாழ்க்கையை அமைத்து தரும்படி ஜெபிக்கிறோம்.

.

சகோதரி ஜேஸ்மின் பார்த்திபன் எட்டரை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர்களுக்கு வைத்தியர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து, அடிவயிறுவரை தோலினால் மூடப்படாமல் இருப்பதாக சொல்லியிருப்பதால், கலங்கி இருக்கும் அந்த குடும்பத்தாருக்கு தேவன் இரக்கம் பாராட்டும்படியாக ஜெபிக்கிறோம். விசுவாசத்தோடு இருந்தாலும், என்ன நடக்குமோ என்று பயத்தோடு இருக்கிற சகோதரிக்கு தேவன் கிருபை செய்வீராக. தாயின் கருவில் உம்முடைய கண்கள் காண்கிறதல்லவோ தகப்பனே. உடலின் ஒவ்வொரு செல்லும் உம்மால் படைக்கப்பட்டதல்லவா? நெஞ்சிலிருந்து, அடிவயிறுவரை எந்தெந்த இடங்களில் தோல் மூடப்படவில்லையோ அந்தந்த இடங்களில் தோலினால் மூடப்பட தேவன் கட்டளை கொடுப்பீராக. நார்மலான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கப்பட கிருபை செய்யும். சகோதரியின் கவலைகளை மாற்றும். பெரிய காரியங்களை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.