நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். - (மத்தேயு 5:6). நமக்கு இரண்டு நாட்களாக பசியில்லை என்று வைத்துக் கொள்வோம். நல்லதாப் போச்சு இரண்டு நாள் சாப்பாடு மிச்சம் என்று இருந்து விடுவோமா? இல்லை, பக்கத்தில் யாராவது நாட்டு வைத்தியம் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் என்ன செய்வது என்றுக் கேட்போம். அவர்கள் சொன்னபடி செய்து சரியாகி விட்டால் சரி, இல்லையென்றால் டாக்டரிடம் போய் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மறுபடியும் பசி எடுக்கும்வரை சும்மா இருக்க மாட்டோம் அல்லவா? . முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? இங்கு அவர் குறிப்பிடும் நீதி என்பது எது? நற்செயல்களை செய்வதையும், புண்ணிய காரியங்களை செய்தையுமா அவர் கூறுகிறார்? இல்லை, நீதி என்றால் நேர்மையுள்ள வாழ்க்கை, கர்த்தருக்கு பயப்பட்டு பாவத்திற்கு விலகி நிற்கிற வாழ்க்கை, கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை என்றுக் கூறலாம். . 'நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்' (ரோமர் 3:10-13) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் நம்மை நீதிமான்களாக்க நம் தேவனால் மாத்திரமே கூடும். அப்படி தேவனால் தன்னை நீதிமானாக்க நாம் தாகம் கொண்டவர்களாக இருந்தால் தேவன் நம்மை திருப்தியாக்குகிறார். . ஒரு வாலிபன் ஒரு பிரசித்திப் பெற்ற ஊழியரிடம், 'ஐயா நான் இரவு முழுவதும் என் பாவங்களுக்காக துக்கித்து அழுகிறேன். ஆண்டவரே, என்னை மாற்றும், என்னை புதியவனாக்கும் என்று கேட்கிறேன். ஏன் கர்த்தர் என்னை மாற்றக்கூடாது? பவுலையும், சாது சுந்தர்சிங் போன்றவர்களையும் மாற்றி தமது ஊழியக்காரர்களாக்கினவர் ஏன் என்னையும் அப்படி மாற்றக்கூடாது?' என்று கேட்டான். அதற்கு அந்த ஊழியர், 'மகனே, உன் பாவங்களை விட்டு விட உண்மையாக நீ வாஞ்சிக்கிறாயா?' என்று கேட்டார், அதற்கு அவனால் பதில் ஏதும் கூற முடியவில்லை. பாவத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, கர்த்தர் என்னையும் பெரிய பெரிய ஊழியர்களைப் போல மாற்ற வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? . என் பாவத்தை விட்டு விட்டு கர்த்தரைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று வாஞ்சையுள்ள ஆத்துமாக்களை கர்த்தர் கவனிக்கிறார். நீதியின் சூரியனாகிய அவர் மேல் பசிதாகம் கொண்டவர்களைத்தான் அவரால் திருப்தியாக்க முடியும். மற்றொரு வாலிபன்; தன் அறையினுள் நுழைந்து, ஒரு நாள் முழுவதும் உபவாசமிருந்து, 'கர்த்தாவே, நீர் என்னை மாற்றாவிட்டால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்' என்று தன்னை ஒறுத்து, கர்த்தரிடம் அர்ப்பணித்தபோது, கர்த்தர் அவனை சந்தித்தார். அவன் மனச்சமாதானம் பெற்று திருப்தியானான். . நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். பசியெடுக்கிறது என்பதற்காக புல்லையோ, மண்ணையோ சாப்பிட முடியுமா? அதற்குரிய ஆகாரத்தை சாப்பிடும்போதுதான் நாம் திருப்தி அடைய முடியும். அதுப்போல மனிதனுக்குரிய ஆத்துமப்பசியையும், உள்ளத்திலுள்ள வெறுமையையும் கர்த்தரே திருப்தியாக்க முடியும். . நீதியின் சூரியனாகிய கர்த்தர் மேலும், அவருடைய வார்த்தைகளின் மேலும் பசிதாகம் கொள்வோம். அப்பொழுது நாம் திருப்தி அடையும்படியாக அவர் நம்மை போஷிப்பார். அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்க கர்த்தர் கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா! . மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் . தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் |