இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். - (1கொரிந்தியர் 10:12). . ஒரு போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஒரு இராணுவ அதிகாரி தன் போர் வீரர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பார்வையிட சென்றிருந்தார். அவர் எதிரிகளுக்கு எதிரான சுவர் போன்ற ஒரு இடத்தில் நின்று கொண்டு எதிரியின் படைகளை பார்க்க சென்றார். அப்போது அந்த இராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள், 'இந்த இடத்தில் நீங்கள் குனிந்து செல்ல வேண்டும். எதிரிகள் சுடுவார்கள்' என்று எச்சரித்தனர். ஆனால் அவரோ, 'ஒரு யானையே நின்றாலும் அவ்வளவு தூரத்தில் இருந்து எதிரிகளுக்கு தெரியாது' என்று கூறியவாறு பார்வையிட்டு கொண்டிருந்தார். அவர் சொல்லி முடிக்கவும், அவர் மேல் எதிரியின் ஒரு குண்டு பாய்ந்து, அந்த இடத்திலேயே உயிர் இழக்க நேரிட்டது. எதிரியை குறித்து அத்தனை தவறாக எடை போட்டார். அதனால் அவர் உயிருக்கே ஆபத்து வந்தது. . 'தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நீங்கள் எத்தனை ஆவிக்குரியவர்களாயிருந்தாலும் சரி, எத்தனை சோதனைகளை ஜெயித்தவர்களாயிருந்தாலும் சரி, வசனம் சொல்கிறது விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்ககடவன் என்று. சத்துருவுக்கு எதிரான நம்மை காத்து கொள்வதில் நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, ஒரு இரயிலில் போய் ஏறி, காலை வரை தூங்கி, பின் நம் இடத்திற்கு செல்லும் சொகுசான வாழ்க்கை அல்ல. 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' (1பேதுரு 5:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. . தேவன் தமக்கென்று ஒரு கூட்ட ஜனத்தை ஆயத்தபடுத்தி கொண்டிருக்கிறார் என்பதை எதிராளியாகிற பிசாசானவன் அறிவான். தான் ஒரு விழுந்து போன தூதன் என்பதையும், பரலோகத்தில் தான் இழந்த இடத்தை கர்த்தருக்குள் ஜீவிக்கிற பரிசுத்தவான்கள் பெற்று கொள்ள முடியும் என்பதையும் அவன் அறிவான். ஆகவே பரிசுத்தமாய் ஜீவிக்கிற எந்த ஒருவரையும் அவன் விட்டு வைக்க விரும்புவதில்லை. உலகம், மாமிசம் பிசாசு இதன் கீழ் அனைவரையும் சிக்க வைக்க அவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான். இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால், பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை இவைகளை கவர்ச்சியாக்கி பரிசுத்தவான்களை இழுக்க பார்க்கிறான். அநேக பரிசுத்தவான்கள் இவற்றிற்கு விழுந்து போனார்கள். தாவீது ராஜா கர்த்தரையே தஞ்சமாக கொண்டவர், கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவராக இருந்தவர், இந்த பாவங்களில் ஒன்றில் விழுந்து போனார். . ஆகவே, நாம் சாத்தானின் தந்திரங்களை லேசாக நினைத்து, அவன் என்னை என்ன செய்ய முடியும் என்று சாதாரணமாக நினைத்தால், விழுந்து போவோம். வசனம் எச்சரிக்கிறது போல, தெளிந்த புத்தியுள்ளவர்களாக, விழித்திருந்து, சத்துரு விரிக்கும் வலையில் சிக்கி கொள்ளாதபடி நம்மை காத்து கொள்ள வேண்டும். தேவன் நாம் வலையில் விழாதபடி, நம் கால்கள் சிக்கி கொள்ளாதபடி காப்பார் என்பது உண்மையாயினும், நாமாக போய் விழும்போது, மனிதனுடைய சித்தத்திற்கு மாறாக அவரால் எதையும் செய்ய முடியாது. அவரவருக்கு சுய சித்தம் இருப்பதால், அதன்படி அவர்கள் செய்யும்போது, கர்த்தரால் அந்த நேரத்தில் பாவத்திலிருந்து தடுத்து நிறுத்த முடியாது. . பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஒரு பரிசுத்தவான் தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருப்பானானால் அதன் முடிவு மரணமே. அவனுடைய ஆவிக்குரிய வாழ்வில் மரணம் ஏற்படும், பரிசுத்த ஆவியானவர் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு போவார், ஆனால் அவனோ அதை அறியாமல், இன்னும் தேவன் என்னோடு இருக்கிறார் என்று தொடர்ந்து பாவத்திலும் பரிசுத்தத்திலும் மாறி மாறி இருப்பானானால், அவன் முடிவு பரிதாபமாக இருக்கும். . 'மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை. பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்' - (எசேக்கியேல் 33:12-13) நீதிமான் தன்னுடைய நீதியை நம்பி, நான் இத்தனை நன்மைகளை செய்திருக்கிறேன், நான் இந்த ஒரு தவறை செய்வதினால் என்ன, கர்த்தர் அதை ஒன்றும் பெரிதாக நினைத்து கொள்ளமாட்டார் என்று தன் நீதியை நம்பி பாவம் செய்வானானால், கர்த்தர் திட்டவட்டமாக எச்சரிக்கிறார், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான். ஆகவே நிற்கிறோம் என்று நினைக்கிற ஒருவரும் பாவத்தில் விழுந்து போகாதபடி எச்சரிக்கையாயிருந்து நம்மை காத்து கொள்வோம். தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் அந்த இரக்கத்தை கட்டளையிடுவாராக! . எனக்கு உம் கிருபை போதுமே இயேசுவே எனக்கு உம் கிருபை போதுமே நாதனின் வருகை தாமதமானால் விழாமல் காத்திடுமே என்னை விழாமல் காத்திடுமே . |