அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது - (யோவான் 10:4). . 2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடத்தப்பட்ட வானூர்தி (Aeroplane) அமெரிக்காவில் உள்ள பென்டகனில் மோதிய போது, அநேக மக்கள் அங்கு வேலை செய்பவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் அங்கு அந்த பிளேன் மோதியதால் உண்டான பயங்கரமான புகை மண்டலத்திற்குள் சிக்கி, புகை அவர்கள் கண்களை மறைத்தபடியால், வெளியே வர முடியாமல், மிகவும் அவதிக்குள்ளாயினர். அவர்கள் அங்கு மூச்சு விட முடியவில்லை, சரியாக காண முடியவில்லை. அப்போது ஐசக் ஹுப்பி (Issac Hoopi) என்னும் போலீஸ் அதிகாரி, உள்ளே ஓடி, உயிரோடு மக்கள் இருக்கின்றனரா என்று தேடினார். உள்ளே இருக்கும் நிலவரத்தை கண்டவுடன், சற்று வெளியே வந்து, 'என் சத்தத்தை கேட்டு அந்த சத்தத்தை பின்தொடர்ந்து வாருங்கள்' என திரும்ப திரும்ப உரத்த சத்தத்தோடே கூறிக் கொண்டே இருந்தார். அவருடைய அந்த சத்தத்தை கேட்டு அநேகர், வெளியே வந்தனர். உள்ளே ஒன்றுமே தெரியாத புரியாத நிலையில் இருந்த அவர்கள் அந்த சத்தத்தை கேட்டு, வெளியே வந்து உயிர் தப்பினர். . 'என் சத்தத்தை கேட்டு என் பின்னே வாருங்கள்' என்று நம் நேசர் இயேசுகிறிஸ்து வழிதவறி போன ஆடுகளை நோக்கி அழைத்து கொண்டே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவே நல்ல மேய்ப்பர்;. 'வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்' என்று யோவான் 10:3 ல் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அறிந்திருக்கிற தேவன் நம் தேவன். அவர் நம்மை அழைத்து, நம்மை புல்லுள்ள இடங்களுக்கு நடத்தி கொண்டு செல்கிறார். . இந்த உலகத்தின் பாவத்திலும், துன்பத்திலும், வெளியே வர முடியாதபடி தவிக்கிற ஒவ்வொருவரையும் தேவன் அழைத்து, என் பின்னே வாருங்கள் என்று அழைக்கிறார். அப்படி அவருடைய சத்தத்தை கேட்டு வரும்போது, நாம் பத்திரமாக கரை கொண்டு சேர்க்கப்படுவோம். . 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' (மத்தேயு 11:28-29) என்று நமக்கு இளைப்பாறுதல் கொடுக்கும்படி அழைத்த ஒரே கடவுள் இயேசுகிறிஸ்துதான். ஒருவேளை நாம் வருத்தப்பட்டு நம் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருக்கிறோமா? எனக்கு ஓய்வே இல்லை, எனக்கு இளைப்பாறுதலே இல்லை என்று கூறுகிறோமா? நமக்கு இளைப்பாறுதல் தரும்படி இயேசுகிறிஸ்து நம்மை அழைக்கிறார். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது என்ற வசனத்தின்படி, ஆடுகளாகிய நாம், மேய்ப்பராகிய கிறிஸ்து நம்மை அழைக்கும் சத்தத்தை கேட்டு, அவருக்கு பின்செல்வோம். . அவருக்கு பின்செல்லும்போது, நமக்கு அநேக ஆசீர்வாதங்கள் உண்டு. சங்கீதம் 23ல் கூறப்பட்டுள்ளபடி, 'கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்ளூ நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்' என்று நாம் தைரியமாக சொல்லும்படியாக, தேவன் நம்மை அந்த ஆசீர்வாதங்களினால் நிரப்புவார். அவர் அழைக்கும் சத்தத்தை கேட்டு அவருக்கு பின்செல்லும் ஆடுகளாக நாம் இருந்து, ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா! . நல்ல மேய்ப்பன் குரலை கேட்பேன் நாளும் பின்தொடர்வேன் தோளில் அமர்ந்து கவலை மறந்து தொடர்ந்து பயணம் செய்வேன் எனது தலைவன் இயேசுராஜன் மார்பில் சாய்ந்து சாய்ந்து மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் . |