என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். - 2 நாளாகமம் 7: 14. . புகழ்பெற்ற தமிழ்நாட்டு பேச்சாளர் ஒருவர் வெளிநாட்டில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இறுதி நாளில் பணம் செலுத்துவதற்காக கௌண்டரில் வந்து நின்றார். அப்போது மற்ற வெவ்வேறு வெளிநாட்டவரும் தத்தம் கட்டணங்களாக முறையே டாலர், பௌண்ட், யூரோ பணங்களையும் கட்டினர். இவரும் ஹோட்டல் ஊழியரிடம் நம் நாட்டு பணத்தைக் கொடுத்தபோது அவர் Indian Rupees என்று கூறி இளக்காரமாக பார்த்ததாகவும் கூறினார். இந்த நிலைக்கு காரணம் என்ன? . அனைத்து வளங்களையும் தன்னகத்தே பெற்றுள்ள நம் தேசம் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்பியூட்டர் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இந்நிலைக்கு காரணம் என்ன? முதலாவது நம் தேசம் படைத்த தேவனை இன்னும் அறியாத தேசமாகவே உள்ளது. விசுவாசிகளாகிய நாம் இந்த சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாகவே முடியும். நாம் தனிநபராகவோ, குழுவாகவோ, சபையாகவோ தேசத்திற்காக விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது நிச்சயமாக மாற்றம் ஏற்படும். நம்மையல்லாமல் தேசத்திற்கு யார் உப்பாக இருக்க முடியும்? . முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் K.F. கென்னடி ஒரு முறை தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 'நாடு உங்களுக்கு என்ன செய்ததென்று கேட்குமுன், நீங்கள் நாட்டிற்காக என்ன செய்தீர்கள் என்று யோசியுங்கள்' என்று பேசினார். கிறிஸ்தவர்களாகிய நாம் தேசத்திற்காக ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் செயல்படுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலை அரிசி, இலவச தொலைக்காட்சி என்று சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிராமல் தேசத்தின் முன்னேற்றத்திற்காக நான் எப்படியெல்லாம் உதவலாம் என்று யோசிக்க வேண்டும். வருமான வரிகளை ஏமாற்றாமல் கட்டுகிறோமா? சாலை விதிகளை கடைபிடிக்கிறோமா? பொது சொத்துக்களை பாதுகாக்கிறோமா? மற்றவர்கள் சரியாக இல்லை நான் மட்டும் ஏன் சரியாக வாழ வேண்டும் என்று யோசித்தால் நாடு இன்னும் மோசமாகும். . நண்பர்களே! கிரிக்கெட் பார்க்கும் போதும், வந்தே மாதரம் பாடும்போதும் மட்டும் வருவது தேசபக்தியல்ல. நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களிலும் தேச பற்றை காட்டுவோம். ஆமென் அல்லேலூயா! . இந்தியா இந்தியா இயேசுவை அறியணும் அதுவே எங்கள் வாஞ்சை இந்தியா முழுவதும் இயேசுவை உயர்த்தனும் அதுவே எங்கள் தரிசனம் . உந்தன் நாமம் தரித்த நாங்கள் எங்களை தாழ்த்தி ஜெபிக்கணுமே பரலோக தேவன் பார்க்கணுமே தேசத்தை நன்மையால் நிரப்பணுமே . |