Friends Tamil Chat

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

14th August 2014 சம்பவிக்க வேண்டியவை பாகம் - 2

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி - வியாழக் கிழமை
சம்பவிக்க வேண்டியவை பாகம் - 2
...

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். - (மத்தேயு 24:7-9).

நேற்றைய தினத்தில் இஸ்ரவேலருக்கும், காசாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரைக் குறித்து பார்த்தோம். இந்த நாளிலும் தொடர்ந்து, மேலே சொல்லப்பட்ட வார்த்தையின்படி நடைபெறும் சம்பவங்களைக் குறித்து காண்போம்.

.

இத்தனை நாட்கள் இல்லாதபடி, திடீரென்று ஒரு பயங்கரமான, இரக்கமில்லாத, கடூரமான தீவிரவாத இயக்கம் ஈராக்கில் தோன்றியுள்ளது. அதற்கு பெயர் Islamic State of Iraq and Relevant எனப்படும் ISIS ஆகும். இந்த ஐசிஸ் இயக்கத்தினருக்கு அனைவரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால், அவாகள் சொல்லும் வரியை செலுத்த வேண்டும். செலுத்த முடியாவிட்டால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கொல்லப்படுவார்கள். இந்த இயக்கத்தினரால், இஸ்லாமியருக்கே மிகுந்த பிரச்சனை ஏறபட்டுள்ளது. தங்கள் சுன்னி மார்க்கத்தை பின்பற்றாதவர்களை அவர்கள் கடுகளவும் இரக்கமின்றி, கைகளை பின்னாக கட்டி, கண்களை கட்டி சுட்டு கொல்லுகிறார்கள்.

.

இந்த இயக்கத்தினர் ஈராக்கில் அநேக இடங்களை கைப்பற்றி, அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். மோசுல் என்னும் இடத்தையும் கைப்பற்றி, அநேக ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருக்கும் அந்த இடத்தில் உள்ள கிறிஸ்தவர்களை வரிப்பணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதால், அநேகர் தங்கள் சொந்த வீடுகளை வசதிகளை, இழந்து, வேறு இடத்திற்கு ஓடிவந்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் அவர்கள் சொல்லும் வரிப்பணத்தை கட்ட முடியாத காரணத்தினால், தகப்பனுக்கு முன்பாகவே மனைவிiயும், மகளையும் கற்பழித்ததை கண்ட தகப்பன், தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார். அங்கிருந்த யோனாவின் கல்லறையும், தானியேல் தீர்க்கதரிசி இருந்த கல்லறையையும், பழங்காலத்திலிருந்து தொழுதுக் கொண்டு வரப்பட்ட ஒரு தேவாலயத்தையும் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

.

இந்த இயக்கத்தினர் மத்திய கிழக்கு பகுதிகளில் ஒருவித பீதியையும், கலகத்தையும் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களை கொன்று, அவர்கள் தலைகளை கையில் பிடித்துக் கொண்டு சிரிக்கும் காட்சிகள் அனுதினமும் முகநூலில் காண முடிகிறது. இந்த இயக்கத்தின் தலை நசுக்கப்படவும், இவர்களின் யோசனைகள் அபத்தமாகி, ஒன்றுமில்லாமற் போகவும் நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கத்தான் வேண்டும்.

.

நைஜீரியாவில் பொக்கொ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 வாலிப பிள்ளைகள் இன்னும் தங்கள் பெற்றோரை வந்து சேரவில்லை. நைஜீரியாவில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லை. பொக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம், சபை நடந்துக் கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்து கிறிஸ்தவர்களை கொல்லுகிறார்கள். சபையோடு அப்படியே எரித்து விடுகிறார்கள்.

.

மேலே சொன்ன சம்பவங்கள் வெகு சிலதே. மற்ற நாடுகளில் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்ற பெயருக்காகவே சித்தரவதை செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். 'என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்' என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தை இந்த நாட்களில் துல்லியமாக நிறைவேறி வருகிறது.

.

கர்த்தர் தீர்க்கதரிசனமாக சொன்ன மற்றொரு காரியம், கொள்ளை நோய்கள். இப்போது எபோலா என்கிற கொல்லும் நோய் ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது, இது காணப்பட்டு சில வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரித்திருக்கிறார்கள். இந்த நோயை கொண்டவர்கள் தங்கள் நாடுகளில் வந்துவிடக் கூடாது என்று ஆப்ரிக்க நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு வரும்போது ஏகப்பட்ட சோதனைகள் செய்து, சரியானப்பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் பாஸ்கரன் என்ற தேனியை சேர்ந்தவர் பல பரிசோதனைக்கட்கு உட்பட்டு பின்தான் சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது செய்தியின் வழியாக நாம் அறிந்ததே.

.

இந்த எபோலா (Ebola) வைரஸ் குரங்குகள், சிம்பன்சிகள் மூலமாக பரவுகின்றன. இந்த வைரஸை உடையவர்களின் இரத்தமோ, மற்ற உடலிலுள்ள எந்த நீரோ மற்றவர்களின் கையில் காலிலுள்ள சிறுசிராய்ப்பு அல்லது, வெட்டுகளின் மேல் பட்டு, மற்ற எந்த வகையிலாவது, அவரின் இரத்தத்தோடு கலந்து விட்டால், அவருக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும். இந்த வைரஸ் நோய் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக இந்த வைரஸ் தாக்கிய தங்கள் அன்புக்குரியவர்களையே தெருவில் வீசும் அவலம் தற்போது லைபிரியாவில் காணப்படுகிறது. எத்தனை பயங்கரம் பாருங்கள்!

.

சமீபத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சீனாவில் அநேகர் மரித்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போதோ நடந்தவை அல்ல, ஒரு மாதம், அல்லது அதற்குள்ளாகவே நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள்!

.

இவையெல்லாம் கடைசி நாட்களின் அறிகுறிகள். இயேசுகிறிஸ்து சொன்னார் இவையெல்லாம் வேதனையின் ஆரம்பம் என்று. வேதனைகளின் ஆரம்பம் ஆரம்பித்து விட்டது. இனிமேல் தொடர்ந்து வேதனைகளைத்தான் செய்தித்தாள்களில் வாசிக்க முடியும்.

.

ஒரு வேளை நாம் இருக்கும் நாடுகளில நம் சொந்த தேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாடுகள் வந்தால் நாம் எத்தனை தூரம் கர்த்தருக்காக நிற்போம்? என் உயிர் போனாலும் நான் கர்த்தரை மறுதலிக்க மாட்டேன் என்கிற உறுதி நம் இருதயத்தில் இருக்கிறதா? மத்திய கிழக்கு பகுதிகளில் ஆரம்பித்துள்ள சம்பவங்கள் நாம் வாழும் தேசங்களையும் சந்திக்க வெகு தொலைவில் இல்லை. ஆனால் நாம் நம் விசுவாசத்திலும், கர்த்தரைப் பற்றிய வைராக்கியத்திலும் உறுதியாய் நிற்போம். கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக, அந்த நோய் மற்ற நாடுகளில் பரவாமலிருக்க ஜெபிப்போம். மற்ற நாடுகளில் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் துன்பப்படுகிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். இது நாம் சுகமாய் இருக்கும் இந்த நாட்களில் செய்ய வேண்டிய கடமையாகும். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது. ஆமென் மாரநாதா!

.

இருள் சூழும் காலம் இனி வருதே

அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?

.

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?

நாட்கள் கொடியதாய் மாறிடுதே

காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

.

இனிவரும் நாட்களில் நமது கடன்

வெகு அதிகம் விசுவாசிகளே

நம்மிடை உள்ள ஐக்கியமே

வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

ஜெபம்
எங்கள் அன்பின் பரம தகப்பனே, வேதனைகளின் ஆரம்ப நாட்களில் வந்துள்ள எங்களுக்கு இந்த நாட்களை சந்திக்க வேண்டிய பெலத்தை தாரும் ஐயா. என்னதான் வேதனைகள் வந்தாலும், சோதனைகள் வந்தாலும் கிறிஸ்துவை விட்டு பிரியாதிருக்க கிருபை செய்யும். மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் துன்பப்படுவோர்களை உமது சமுகத்தில் கொண்டு வருகிறோம். அவர்கள் பின்வாங்கி போய் விடாதபடி, விசுவாசத்தில் உறுதியாய் நிற்க பெலனை தருவீராக. எபோலா வைரஸினால் பாடுகள் பட்டு வரும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். அதிலிருந்த வெளிவரும்படியான மருந்துகளை தயாரிக்க ஞானத்தை தாரும். மற்ற நாடுகளில் பரவாதபடி காத்துக் கொள்ளும். கிறிஸ்துவின் வருகைக்கு எங்களை ஆயத்தப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.