உங்கள்சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். - (நீதிமொழிகள் 12:19). . ஆப்பிரிக்காவில் ஒரு இனத்தவரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. யாராவது ஏதாவது தவறு செய்தால் அங்குள்ள வைத்தியர் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்பார். ஆனால் யாரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்றால், யாரையெல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களை அழைத்து, அவர்கள் முன்பாக ஒரு ஈட்டியின் முனையானது சூடுபடுத்தப்படும். அது நன்கு சூடாகும்போது அதை கொண்டு வந்து சந்தேகப்படுபவர்களின் நாவில் வைக்கப்படும். தவறு செய்தவன் நாவில் வைக்கும்போது அவன் வலியில் துடிப்பான். மற்றவர்கள் நாவில் வைக்கும்போது அது ஒன்றும் செய்யாது என்பது அவர்களின் நம்பிக்கை. . அந்த சூடாக்கப்பட்ட ஈட்டி தங்கள் வாயின் அருகில் வர இருக்கும்போது தவறு செய்தவர்கள் காட்டிற்குள் ஓடி ஒளிவார்கள். ஏனெனில் பொய் சொன்னவர்களின் நாவை அந்த சூடு பொசுக்கி விடும் என்று பயந்து. ஆனால் மற்றவர்களின் நாவுக்கு அந்த சூடு ஒன்றும் செய்யாது. இது ஒரு குருட்டு நம்பிக்கை என்று நாம் நினைக்கலாம், ஆனால் அறிவியற்பூர்வமாக தவறு செய்யாதவர்கள் பதறாதபடியால், அவர்கள் நாவு ஈரமாயிருக்கும். அதனால் அந்த நாவு ஒரளவு சூட்டை தாங்க முடியும். ஆனால் தவறு செய்தவர்களின் நாவு வறண்டு போய் இருக்கும். சூடு வைக்கப்படும்போது அது பொசுங்கி போகும் என்று கூறப்படுகிறது. ஆதலால் அந்த கிராமத்தில் யாரும் தவறு செய்யவோ, பொய் பேசவோ பயப்படுவார்கள். . கர்த்தருக்கு அருவருப்பான ஆறு காரியங்களில் பொய் நாவும் ஒன்று வேதம் கூறுகிறது. 'ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே' (நீதிமொழிகள் 6:16- 19). கர்த்தர் வெறுக்கும் இந்த ஆறு காரியங்களில் பொய் நாவு இரண்டாவதாக வருகிறது. . சிலருக்கு பொய் என்பது சரளமாக வரும். ஏன் விசுவாசிகள் என்று சொல்பவர்களுக்கும் பொய் சொல்வது என்பது ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ தெரிவதில்லை. சும்மா ஒரு சிறிய பொய் தானே சொன்னேன் என்று பொய் சொல்வதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளுகிறவர்களும் உண்டு. கர்த்தர் பொய் நாவை அருவருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. . ஊழியர்களும் தங்களுக்கு பெயரும் புகழும் வேண்டும் என்று தங்களுடைய ஊழியத்தை குறித்து வெளிநாடுகளிலோ, வேறு இடங்களுக்கு ஊழியம் செல்லும்போது, கர்த்தர் அவர் மூலமாய் ஒரு காரியத்தை செய்திருந்தால், பத்து காரியங்கள் நடந்தது என்று துணிகரமாக பொய் சொல்வார்கள். சிலர் தேவனோடு இப்போது தான் பரலோகத்திற்கு சென்று பேசி விட்டு வந்தேன் என்று அநியாயமாக பொய் கூறுவார்கள். வேதத்தை அறிந்திராத ஜனங்கள் அவர்கள் சொல்வது எல்லாம் மெய் என்று நினைத்து, அவர்களை கடவுளின் அடுத்த பிரதிநிதியாக வைப்பார்கள். எங்கள் சபைக்கு வந்திருந்த ஊழியர் ஒருவர், தான் தன் கையை விரித்து ஜெபிக்கும்போதெல்லாம் பரலோகத்திற்கு போவதாகவும், இயேசுகிறிஸ்துவின் மேல் கைப்போட்டு, அங்கிருந்த தோட்டத்தில் உலாவி விட்டு வருவதாகவும் கூறினார். உடனே நாங்கள் கண்டு கொண்டோம், அவர் கள்ள தீர்க்கதரிசி என்று. கர்த்தர் வெறுக்கிற காரியத்தை அவருடைய ஊழியர்களே செய்தால் கர்த்தர் எப்படி தாங்கி கொள்வார்? . பிரியமானவர்களே, கர்த்தர் அருவருக்கிற பொய் நாவை நாம் எப்பொழுதும் பேசக்கூடாது. என்ன தான் நடந்தாலும் நான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்று நாம் கர்த்தருக்கு முன் உறுதி எடுக்க வேண்டும். பொய் பேசி பழகியவர்கள், காலையில் எழுந்தவுடன், 'ஆண்டவரே, இந்த நாளில் நான் பொய் பேசாதபடி என் நாவை காத்தருளும்' என்று சொல்லி ஜெபித்து, அந்த நாளில் பொய் பேசாதபடி, கர்த்தரின் கிருபையோடு நாவைக் காத்துக் கொள்ள வேண்டும். . 'பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்' (வெளிப்படுத்தின விசேஷம் 21:8). இயேசுகிறிஸ்து யார் யார் பரலோகத்தில் வரமாட்டார்கள் என்றும், யார் யார் நரகத்தில் பங்கடைவார்கள் என்றும் குறிப்பிடும்போது, பொய்யர்களும் அதில் பங்கடைவார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது, நாம் பொய் பேசாதபடி எத்தனை கவனமாய் இருக்க வேண்டும்? நாம் மற்றவர்களிடம் பேசும்போது எப்போதும் உண்மையையே பேசுவோம். கர்த்தர் அருவருக்கிற பொய்யை பேசாதபடி நம்மைக் கர்த்தருக்குள் காத்துக் கொள்வோம். உண்மையுள்ள மனுஷனே கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான். ஆமென் அல்லேலூயா! . உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய் காத்திடுவார் . கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடாக் காத்திடும் பரமனின் கரங்களில் நம் பற்றிக் கொள்வோம் |