பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். - (1 யோவான் 4:7,8). . டோக் நிக்கோலஸ் (Doug Nichols) என்பவர் இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தார். அவர் இந்திய மொழியை கற்க ஆரம்பித்த போது அவருக்கு காச நோய் (Tuberculosis) பிடித்தது. அதனால் அவர் ஒரு டிபி சானிடோரியத்தில் இருக்க நேர்ந்தது. அந்த இடம் மிகவும் அழுக்காகவும், அசுத்தமாகவும் இருந்தது. அநேக வியாதியஸ்தர்களும் இருந்தனர். அந்த இடத்தில் அந்த நோயாளிகளுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு அவர்களுக்கு சுவிசேஷ, கைபிரதிகளை கொடுக்க ஆரம்பித்தார். . அவர் அப்படி கொடுக்க ஆரம்பித்த போது, அதை ஒருவரும் வாங்க முன்வரவில்லை. புத்தகங்களை கொடுத்தால் அதையும் யாரும் வாங்கவில்லை. அவர்களுகடைய மொழி தெரியாததால் அவர்களோடு பேசவும் முடியவில்லை. ஆகவே மிகவும் சோர்ந்து போனார். அவருக்கு இருந்த வியாதியினால் அவர் வெளியே செல்லவும் முடியாத நிலை, உள்ளே இருப்பவர்களுக்கும் அவர் பிரயோஜனமற்றவராய் வாழ்நாளை கடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. . ஒவ்வொரு நாளும் இரவு இரண்டு மணியளவில் அவர் டிபி வியாதியினால் இரும ஆரம்பித்து தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார். அப்போது அவர் தூரத்தில் ஒரு வயதான மனிதர், தன் படுக்கையில் இருந்து எழுந்தரிக்க முயற்சித்து, முடியாமல் தவித்து, பிறகு தன் படுக்கையில் மீண்டும் விழுந்து அழுதபடியே படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். அந்த மனிதர் மிகவும் தளர்ந்து பெலவீனமாய் இருந்தபடியால் அவரால் எழுந்து பாத்ரூமுக்கு போக முடியவில்லை. அதனால் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து, அதனால் அங்கிருந்த நர்சுகள் அவரிடம் முகம் சுழித்து, மற்ற நோயாளிகள் அதனால் வரும் துர் நாறற்த்தினால் அவரை இழிவாக பேசுவதையும் நிக்கோலஸ் பார்த்தார். . அடுத்த நாள் மீண்டும் அவர் இரவில் இரும ஆரம்பித்தபோது, அந்த வயதான மனிதர் மீண்டும் எழுந்தரிக்க ஆரம்பித்து, முடியாமல் தேம்ப ஆரம்பித்தார். அப்போது நிக்கோலஸ் தன் படுக்கையை விட்டு எழுந்து, அந்த வயதான மனிதரிடம் போய், அவரை ஒரு குழந்தையை போல் தூக்கி பாத்ரூமிற்கு கொண்டு சென்று, அவர் சிறுநீர் கழிக்க உதவி செய்து, மீண்டும் அவரை படுக்கையில் கொண்டு வந்து கிடத்தினார். அப்போது அந்த வயதான மனிதர், அவரை பிடித்து முத்தமிட்டு நன்றி என்று சொல்வதை கண்டார். . அடுத்த நாள் காலையில் மற்ற நோயாளிகள் அவரிடம் வந்து, அவர் கொடுத்த கைபிரதிகளை வாங்கி வாசிக்க ஆரம்பித்தனர். அவரிடம் தேவனை குறித்த விளக்கங்களை கேட்க ஆரம்பித்தனர். அங்கிருந்த டாக்டர்களும் நர்சுகளும் நோயாளிகளும் அவர் அங்கு இருந்த நாட்களில் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட்டனர். . அவர் செய்த ஒரே ஒரு காரியம், அந்த வயதான மனிதரை பாத்ரூமிற்கு கொண்டுசென்றது தான். அதை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம் ஆனால், அதை யாரும் செய்ய முன்வரவில்லை. ஏனென்றால் அன்பு அந்த இடத்தில் இல்லை. . அவர் அங்கு தன் கைபிரதிகளை கொடுத்து செய்ய முடியாதததை, பெரிய பிரசங்கத்தை கொண்டு செய்ய முடியாதததை, தன்னிடம் உள்ள பொருட்களை கொடுத்து செய்ய முடியாததை ஒரு சிறிய தியாகமாக செய்த காரியம் செய்ய வைத்தது. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். . அன்பாகவே இருக்கிற தேவனின் அன்பை, இந்த உலகத்தில் அன்புக்காக ஏங்கி கொண்டு இருக்கும் மனித குலத்திற்கு கொண்டு செல்வோமா? ஒரு சிறிய மனிதாபிமான காரியம் அவர்களுடைய சிந்தனையையே மாற்றி விடும். மிகவும் பிரச்சனையில் இருக்கும் ஒருவரிடம், அவருடைய பிரச்சனைகளை கேட்டறிந்து, அவரிடம் ஆறுதலாக பேசி, நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்று கூறும்போது, அந்த மனிதர் தன் வாழ்நாளில் நீங்கள் சொன்ன ஆறுதலான வார்த்தைகளை மறக்கவே மாட்டார். ஒரு சிறு அன்பான செய்கை எத்தனை ஆறுதலை கொண்டு வரும் தெரியுமா? கடந்த வாரம் மிகவும் தலைவலியால் துடித்த போது ஒரு சகோதரி என் தலையை அமுத்தி தடவி கொடுத்த போது ஒரு ஏஞ்சல் என் தலையை தடவி கொடுத்த மாதிரியாக நான் உணர்ந்தேன். ஒரு சிறிய மனிதாபிமான காரியம் தேவையுள்ளவர்களை நிச்சயமாக தேவனிடத்திற்கு வழிநடத்தும். தேவனின் அன்பை நாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் கருவியாக செயல்படுவோமா? அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். ஆமென் அல்லேலூயா! . அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பலபல பாஷை படித்தறிந்தாலும் கலகலவென்னும் கைமணியாமே சினமடையாது தீங்கு முன்னாது தினமழியாது தீமை செய்யாத அன்பே பிரதானம் |