மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென். - (வெளிப்படுத்தின விசேஷம் 1:18). . ஒரு சிறுவர் ஞாயிறு பள்ளியில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, 'மாணவர்களே, இயேசு உயிரோடிருக்கிறார் என்று உங்களுககு எப்படித்ததெரியும்?' என்று கேட்டார். அநேக மாணவர்கள், வேத புத்தகத்திலிருந்து என்றனர். இன்னும் சிலர், 'இயேசுவின் கல்லறை திறந்திருக்கிறது' என்றனர். வேறுசிலர், 'நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள்' என்று பலவிதமான பதில்களை சொன்னார்கள். ஆனால் ஆசிரியருக்கு இந்த பதில்களெல்லாம் சந்தோஷம் அளிக்கவில்லை. திடீரென்று ஒரு சிறுவன் எழுந்திருந்து 'ஐயா இன்று காலையில் நான் அவரோடு சில நிமிடங்கள் பேசினேன்' என்றான். இந்த பதில் ஆசிரியருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும் என்று மற்ற மாணவர்களுக்கு கூறினார். . ஆம், மாம்சமாக இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்தபோது, நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்து அநேகரை பாவ படுகுழியிலிருந்து மீட்டெடுத்து, வியாதியிலிருந்து சுகமாக்கினது போலவே இன்றும் அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து அன்று அநேகரை ஆறுதல்படுத்தியது போலவே இன்றும் ஆறுதல்படுத்திக் கொண்டு இருக்கிறார். அன்று சீடர்கள் அவரிடம் பேசினது போலவே இன்று நாமும் ஜெபத்தில் அவரோடு பேச முடியும். நம்முடைய கேள்விகளுக்கு ஏக்கங்களுக்கும், குழப்பங்களுக்கும் வேதத்திலிருந்து இன்றும் பதிலை பெற்றுக் கொள்ள முடியும். இவை எல்லாவற்றையும் எப்பொழுது நாம் நூறு சதவிகிதம் பெற்று அனுபவிக்க முடியும்? அவர் இன்றும் உயிரோடு என் அருகில் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கும்போது மட்டுமே! அந்த விசுவாசம் எப்படி வரும்? நாம் அனுதினமும் அவரிடம் பேசும்போது அது நிச்சயமாக வளரும்! . அநேக வேளைகளில் நம்முடைய ஜெபங்கள் நமக்கே போரடிப்பதாக, கூட ஜெபிப்பவர்களையும் தூங்க வைப்பதாக இருக்கிறது. காரணம் தேவன் எங்கோ இருக்கிறார். நான் ஜெபிப்பது அத்தனை தூரம் கடந்து போய் கர்த்தருக்கு கேட்குமோ என்று நினைப்பதுதான். . பிரியமானவர்களே, நம்முடைய அனுதின ஜெபங்களை அநேக நேரங்களில் கடமைக்காகவே செய்கிறோம். அதில் உயிரோட்டமில்லை. நம்பிக்கையில்லை, காரணம் தேவன் உயிருள்ளவராய் என் அருகில் அமர்ந்து என் ஜெபத்தை கேட்கிறார் என்ற விசுவாசம் இல்லாததே ஆகும். நாம் முழங்கால்படியிடும் பொழுதெல்லாம் இந்த சிந்தை நம்மை நிரப்புமானால், நமது ஜெபங்கள் அலப்புகிறதாய் அல்லாமல், கடமையை நிறைவேற்றுவதாய் அல்லாமல் கருத்தாய் உயிரோட்டமுள்ளதாய் இருக்கும் என்பது உண்மை. . 'எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை' (யாக்கோபு 5:17) என்று வேதம் கூறுகிறது. எலியா எல்லாவிதத்திலும் நம்மைப் போல இருந்தும், அவரது ஜெபம் வித்தியாசமாக இருந்தது. அவர் கருத்தாய் ஜெபம் பண்ணினார். நம்முடைய ஜெபங்கள் கருத்தாய் இருக்குமானால் அது இனிமையாக மாறும். எப்பொழுதும் செய்கிற ஜெபத்தை போலிருந்தால் கேட்பவர்களுக்கும் கொட்டாவி தான் வரும். கருத்தாய் ஜெபிப்போம். அப்படிப்பட்டதான ஜெப வேளையை வாஞ்சிப்போம். தேவன் அதில் பிரியமாயிருப்பார். பதிலை உடனே தருவார். ஆமென் அல்லேலூயா! . எந்தன் ஜெப வேளை உம்மை தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் . சோராது ஜெபித்திடஜெப ஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் |