நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். - (மத்தேயு 13:23). ஒரு சிறந்த ஊழியரின் பிரசங்கத்தை கேட்க ஒரு மனிதர் அவர் எங்கு பிரசங்கித்தாலும் செல்வார். அவர் பிரசங்கத்தை முடித்தவுடன்,அவரிடம் சென்று 'நீர் இன்று மிக நன்றாக பிரசங்கம் செய்தீர் நீங்கள் சொன்னபடி கேட்கிறவர்கள் எல்லாம் செய்தால் எத்தனை நன்றாக இருக்கும்' என்று சொல்லுவார். . ஆனால் அவர் தன் வாழ்வில் அவற்றை செய்ய மாட்டார். அந்த பிரசங்கி சொல்லுகிற காரியங்கள் எல்லாம் மற்றவர்களுக்குத்தான் என்றும், தான் ஒரு பரிசுத்தவான் என்றும் அவருடைய நினைவுகள் இருந்தன. அதனால் என்னதான் வசனத்தை விளக்கி, பாவத்தைக் குறித்து கண்டித்து பேசினாலும் அது தனக்கு இல்லை, மற்றவர்களுக்குத்தான் என்று நினைத்து, தனக்குள்ளே அந்த பிரசங்கியின் உயிருள்ள வார்த்தைகளை உள் வாங்காதபடியால் அவர் கேட்கிற எந்த பிரசங்கமும் அவருக்கு பிரயோஜனமாக இருந்ததே இல்லை. . நம்மிலும் அநேகர் ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய வார்த்தைகளை தேவ ஊழியர் சொல்வதை கேட்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகள் நமக்கு என்ன சொல்கிறது என்று அதை கேட்காமல், 'ஓ, இந்த வார்த்தைகளை போதகர் அந்த சகோதரிக்குத்தான் சொல்கிறார், அந்த சகோதரனுக்குதான் சொல்கிறார்' என்று நினைத்துக் கொள்வோமானால் எத்தனை பெரிய பிரசங்கி பேசினாலும் அதினால் நமக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை. . . கர்த்தர் தம்முடைய பாதத்தில் அமர்ந்து தியானித்து செல்லும் ஊழியர்களுக்கும் போதகர்களுக்கும் சபை மக்களின் தேவைக்கேற்ற வார்த்தைகளை அவர்கள் மூலம் அனுப்புகிறார். அவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சபை மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இந்த நாளில் கர்த்தர் எனக்கு என்ன சொல்லப் போகிறார் என்று தாகத்தோடு வருபவர்களுக்கு அந்த நாளில் கர்த்தர் நிச்சயமாக இடைபடுவார். கர்த்தரின் ஆலோசனைப்படி நடக்கும்படியாக சொல்லிக் கொடுப்பார். . . ஆனால் இந்த வசனம் யாருக்கோ, எனக்கில்லை என்று நினைப்பவர்களோடு கர்த்தர் எப்படி இடைப்பட முடியும்? 'ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்' (மத்தேயு 13:19) என்ற வசனம் சொல்கிறது. ஆம், உணர்வில்லாத இருதயம் இருந்தால் சொல்லப்பட்ட வார்த்தைகளை பொல்லாத சாத்தான் வந்து பறித்துக் கொண்டு போய் விடுவதால், அங்கு கேட்ட வசனத்திற்கு பிரயோஜனமில்லாமற் போகிறது. அதற்கு அவர்கள் சபைக்கு வராமலே இருந்திருக்கலாம். . . கர்த்தர் தம்முடைய சுய இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபையில் தம்முடைய கிரியைளை அவர் வெளிப்படுத்துகிறார். தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார், தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துகிறார். அதை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு அந்த வல்லமை, சித்தம், அவர்களுடைய வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கிறது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கிறிஸ்தவனாக இருப்பதிலேயே அர்த்தம் இல்லாமற் போகிறது. . , சிலர் சபைக்கு வருகிறார்கள், சத்தியத்தை கேட்கிறார்கள், ஆனால் அந்த சத்தியம் அவர்கள் வாழ்வில் கிரியை செய்வதில்லை. செய்வதற்கு அவர்கள் இடம் கொடாததால், அவர்களுடைய வாழ்வும், செயல்களும், சுபாவங்களும் மாறாமல் இருக்கிறது. எத்தனை சத்தியம் கேட்டும், கர்த்தரே அவர்களுக்கு இதுதான் காரியம் என்று சொன்னாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் இருதயம் கல்லாகி இருக்கிறது. அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், ஞானஸ்நானம் எடுத்திருக்கிறோம் என்று சொன்னாலும், கர்த்தருடைய வார்த்தையின்படி அவர்கள் நடக்காவிட்டால், அவர்கள் பெற்ற இரட்சிப்பால் அவர்களுக்கு பிரயோஜனமே இல்லை. . . ஆனால் 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்' என்ற வசனத்தின்படி நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக நம் வாழ்வில் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்போம். அதன்படி நடப்போம், கர்த்தர் நம்முடைய வழிகளை ஆராய்ந்து அறிகிறார். அதன்படி நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா! . உம்மை வருத்தும் வழியில் நடந்தால் என்னை திருத்த வேண்டும் தேவா அன்போடு உமது வசனம் கற்றுத் தந்து நடத்த வேண்டும் . மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே |