புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். - (நீதிமொழிகள் 14:1). . ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சகோதரி கர்த்தருக்கு பயந்தவள். மற்றவள் பெயரளவில் கிறிஸ்தவளாக வாழ்ந்தவள். கர்த்தருக்கு பயந்த சகோதரி எந்த காரியத்தை செய்தாலும் கர்த்தரிடம் ஜெபித்து, அவருடைய சித்தத்திற்காக காத்திருந்து அதன்படி செய்கிறவளாக இருந்தாள். ஆனால் மற்றவளோ, தன் மனதிற்கு ஏற்றபடி செய்து வந்தாள். . இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. கர்த்தருக்கு பயந்த சகோதரி, ஆரம்பத்திலிருந்தே தன் கணவனோடு பேசி, நம் குடும்பம் இப்படித்தான் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக, ஒழுங்காக சபைக்கு செல்பவர்களாக, தசம பாகத்தை என்ன சம்பாத்தியம் வந்தாலும் ஒழுங்காக கொடுப்பவர்களாக, உலக காரியத்திற்கு அந்நியர்களாக வாழ வேண்டும் என்று சொல்லி, தன் கணவனையும் கர்த்தருக்குள் நடத்தினவளாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள். . மற்றவள் தன் கணவனோடு உலக உல்லாசங்களிலும், உலக காரியங்களிலும் ஈடுபட்டு, உலக இன்பங்களை அனுபவித்தாள். ஒரு நாள் வந்தது. அவளோடு கர்த்தர் இடைபட்டார். கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். தன் கணவனையும் அவள் கர்த்தரிடம் கொண்டு வரும்படி அவரிடம் பேச ஆரம்பித்தாள். ஆனால் கணவரோ, 'ஓ, நீ எப்படி வாழ்ந்தாய் என்று எனக்கு தெரியும். இப்போது திடீரென்று என்ன பெரிய பக்தி வாழ்கிறது?' என்று சொல்லி உலகப்பிரகாரமாகவே வாழ்ந்து வந்தார். எத்தனையோ நாள் கண்ணீரோடு அவள் ஜெபித்தும் அந்த மனிதர் மாறவில்லை. கடைசியில் ஒரு நாள் கர்த்தர் அவரை சந்தித்தார். அதுவரை அவள் வாழ்வு அவளுக்கு நரகமாகவே இருந்தது. . வசனம் சொல்கிறது, 'புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்' என்று. அதை போலவே 'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்று தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. புத்தியுள்ள ஸ்திரீயானவளால் தன் குடும்பத்தை கர்த்தருக்குள் கொண்டு வரமுடியும். திருமணம் ஆன புதிதிலேயே கணவரை கர்த்தருக்குள் கொண்டு வந்துவிட்டால், பின் அவர்கள் வாழ்வு மாறாமல் கர்த்தருக்குள் உறுதியாக இருக்கும். திருமணம் ஆன புதிதில் கணவரோடு சேர்ந்து உலக காரியங்களில் ஈடுபட்டு, கர்த்தரை மறந்து வாழ்ந்தால், பின் கண்ணீரோடு பல வருடங்கள் காத்திருந்துதான் கணவரை கர்த்தருக்குள் கொண்டு வரமுடியும். . நான் பலருடைய வாழ்வில் நேரடியாக பார்த்தபோது, மேற்கண்ட வசனத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். புத்தியுள்ள ஸ்திரீயைக் குறித்தும் குணசாலியான ஸ்திரீயைக் குறித்தும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணால் நிச்சயமாக தன் வீட்டைக் கட்டி எழுப்ப முடியும். கணவன்தான் குடும்பத்தின் தலை என்றாலும், மனைவிக்கு குடும்பத்தை கட்டி எழுப்புவதில் பெரும் பங்கு இருக்கிறது. கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்ததை தேவையற்ற விதத்தில் செலவு செய்தால் அந்த குடும்பம் எப்படி கட்டி எழுப்பப்பட முடியும்? 'நானும் சம்பாதிக்கிறேன், ஆகையால் என்னாலும் என் இஷ்டப்படி செலவு செய்ய முடியும்' என்று நினைத்தால் அங்கு பிள்ளைகளுக்காக சேர்த்து வைப்பது எப்படி? 'நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்' (நீதிமொழிகள் 13:22) என்று வேதம் கூறுகிறது. ஒருவனுக்கு நல்ல புத்தியுள்ள மனைவி அமைந்தால், அவளும் சேர்ந்து குடும்பத்தை கட்டுகிறபடியால், அவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் வீட்டையும், சொத்தையும், சுதந்தரத்தையும் சேர்த்து வைத்துப் போவான். ஆனால் புத்தியில்லாத ஸ்திரீயாக தன் கைகளினால் தன் வீட்டை இடித்துப் போடுகிறவளாக இருந்தால், அந்த வீடு அவர்களுக்கே பற்றாமல் போகும். பின் எப்படி அவர்கள் தங்கள் பின் சந்ததிக்கு சேர்த்து வைக்க முடியும்? . அதுப்போல பெண்கள் கூடி பேசும்போது, எப்போதும் தங்கள் பிள்ளைகளைக் குறித்துப் பேசுவார்கள். அதுமுடிந்தப்பின் தங்கள் கணவர்களைக் குறித்துப் பேசுபவர்களும் உண்டு. அப்படி பேசும்போது, உங்கள் கணவரின் பெலவீனங்களைக் குறித்து யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது கூட வேலை செய்கிற பெண்களாயிருக்கட்டும், அல்லது ஆண்களாயிருக்கட்டும். ஒருபோதும் கணவனைக் குறித்து தவறாகவோ, குறைவாகவோ பெண்கள் மற்றவர்களிடம் பேசக்கூடாது. அதையே காரணமாக வைத்துக் கொண்டு அந்த பெண்களின் வாழ்வையே அழிக்க முற்படும் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. உங்கள் வாயினாலேயே உங்கள் வீட்டை இடித்துப் போடாதிருங்கள். . தேவன் விரும்பும் குடும்பமாக, ஜெபிக்கிற பெண்ணாக, குடும்பத்தின் மானத்தை கட்டிக்காப்பவளாக, பிள்ளைகளை சரியானபடி வளர்க்கிறவளாகவே தேவன் ஒவ்வொரு குடும்பப்பெண்ணிற்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அதை கவனக்குறைவாக செய்பவர்கள் பின்னால் தங்கள் பிள்ளைகளினால் வருத்தப்பட வேண்டிய நிலை வரலாம். . ஆகையால் பிரியமானவர்களே, புத்தியுள்ள ஸ்திரீயாக தன் வீட்டைக் கட்டுகிறவளாக ஒவ்வொரு விசுவாச குடும்ப பெண்ணையும் தேவன் மாற்றட்டும். தாங்கள் வாழும் இடத்தில் ஒரு எஸ்தராக, ஒரு ரூத்தாக, ஒரு தெபோராவாக, ஒரு அன்னாளாக பெண்கள் விளங்குவார்களாக. அப்படிப்பட்ட குடும்பத்தை தேவன் ஆசீர்வதிப்பார். அதில் வந்து தங்குவார். ஆமென் அல்லேலூயா! . இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரனில்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் |