மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். - (அப்போஸ்தலர் 17:26). . சமீபத்தில் தருமபுரியில் இளவரசன் என்னும் தலித் வாலிபனுக்கு நடந்த சம்பவம் மனதை மிகவும் பாதித்தது. இளவரசன் திவ்யா என்னும் வன்னிய குல பெண்ணை காதல் திருமணம் செய்ததும், அதன் விளைவாக வன்னியர்கள் தலித் மக்கள் வாழும் மூன்று கிராமங்களை சூறையாடியதும், பின் திவ்யாவின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டதும், அதன்பின் திவயாவின் தாயார் கோர்ட்டில் கேஸ் போட்டு, தன் மகள் தன்னோடு வரவேண்டும் என்று நிர்பந்தித்ததும், அதன்பின் திவ்யா செய்தியாளர்களிடம் நான் என் கணவனோடு வாழ விரும்பவில்லை. எப்போதும் என் தகப்பனாரின் நினைவாகவே இருக்கிறேன் என்று சொன்னதும், அடுத்த நாள் இளவரசன் தருமபுரியில் விரைவு இரயில் வண்டி கடக்கும்போது தன் தலையை கொடுத்து தற்கொலை செய்து கொண்டதும் நடந்த சம்பவத்தின் வரிசை. . காதல் திருமணம் செய்துக் கொண்டது தவறு என்றாலும், இவன் கீழ் ஜாதி, அவள் மேல் ஜாதி என்று பிரித்தது யார்? மனிதன் தானே! ஒரு மனிதனே மற்ற மனிதன் நன்கு வாழ்வதை தடை செய்கிறான். மேல் ஜாதி என்று தங்களை கூறிக் கொள்ளும் இவர்களின் இரத்தம் வேறு நிறத்திலா இருக்கிறது? . . கர்த்தருடைய வசனம் கூறுகிறது, 'மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்' என்று. தேவன் மனுஷ ஜாதி என்று ஒரே ஜாதியை உருவாக்கி, அந்த ஜாதி மாத்திரமே இருக்க வேண்டும் என்று சகல ஜனத்திற்கும் ஒரே நிறத்தில் இரத்தத்தை கொடுத்து, அவர்கள் இங்குங்கு வாழ வேண்டும் என்று குடியிருப்பின் எல்லைகளையும் கொடுத்திருக்கிறார். . . ஆனால் மனுஷ ஜாதியானவன், தனக்கென்று அடிமைகளாக சிலரை மாற்றி, அவர்களுக்கு ஒரு ஜாதியின் பெயரையும் கொடுத்து, அவர்கள் தங்கள் எல்லையை மீறி வரக்கூடாதென்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும், அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்று வாழக் கூடாதென்றும் தீர்மானித்து அதன்படி அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறான். . . நாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஜாதி வெறியை அடக்க யாராலும் முடிவதில்லை. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் ஜாதி வெறி கொண்டவர்கள் அதிகம் இருப்பது தமிழர்கள் மத்தியில்தான். . . நாளை மண்ணுக்கு மண்ணாகி போகும் இந்த சரீரத்தில், ஆத்துமா போகப் போவது பரலோகத்திற்கா? அல்லது நரகத்திற்கா என்று கவலைப்படாமல், ஜாதியைக் குறித்து வைராக்கியமாக வாழ்ந்து மரித்துப் போனவர்கள் ஏராளம்! ஜாதியைப் பார்க்கிற யாரையும் கர்த்தர் பரலோகத்தில் விடப்போவதில்லை என்பது நிச்சயம்! மரித்து பரலோகம் செல்லும்போது, நான் இந்த ஜாதியான் என்று சொன்னால் பரலோகத்தின் கதவு திறக்கப்போவதில்லை, ஆனால், 'சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்' (ஏசாயா 26:2) என்று கர்த்தர் சொல்லுவார். அல்லேலூயா! . . பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கிற நம்மிடையே ஜாதி என்கிற விஷம் துளியும் இருக்கக்கூடாது. தங்களை மேல் ஜாதியான் என்றும் மற்றவர்களை கீழாக நோக்கும் இருதயமும் குணமும் இருக்கும்வரை அந்த இருதயத்தில் கர்த்தர் நிச்சயமாக இருக்க மாட்டார், வர மாட்டார். கர்த்தருக்கு தெரிந்த ஒரே ஜாதி நீதியுள்ள ஜாதி! அந்த ஜாதியில் நாம் சேருவதற்கு பாடுபடுவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். மாரநாதா! அல்லேலூயா! ஜீவனை விட கர்த்தரை நேசிக்கிறேன் - இந்த ஜாதியை விட கர்த்தரை நேசிக்கிறேன் - அதனால் ஜாதி சாத்தானை ஓட ஓட துரத்துவேன் அவன் சேனைகளை அடியோடே அகற்றுவேன் போராடுவேன் தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் |