அந்தப்படியே, ஆபிரகாம் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். - (எபிரேயர் 6:15). . ஒரு தாயார் ஜெபத்தைக் குறித்த பரலோக தரிசனமொன்றை கண்டார்கள். அதில் நாம் ஏறெடுக்கிற எல்லா ஜெபங்களும் ஒரு பெரிய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டார்கள். ஒவ்வொரு பதிவுக்கும் நேராக சில காரியங்கள் எழுதப்பட்டிருந்தன. அவை பதிலளிக்கப்பட்ட விபரங்கள் என அறிந்து கொண்டும், பதிலளிக்காமல் தாமதத்தில் இருக்கும் பதிவுகளுக்கு நேராக 'என் வேளை இன்னும் வரவில்லை' என்பதோடு தாமதத்திற்கான காரணமும், எப்போது அது நிறைவேறும் என்ற காலமும் எழுதப்பட்டிருந்ததாக அத்தாயார் கண்டார்கள். ஆண்டவர் ஒவ்வொரு காரியத்தையும் எவ்வளவு நேர்த்தியாய் செய்கிறார் என்று பாருங்கள். . நாம் ஜெபிக்கும் ஒரு காரியத்தில் உடனடியாக ஒரு பதில் வர வேண்டும் என அநேக நேரங்களில் எதிர்ப்பார்க்கிறோம். அதாவது ஒரு மந்திரம் போல எல்லாம் நடந்து விட வேண்டும் என்பது நம் எதிர்ப்பார்ப்பு. உதாரணமாக விமானத்தில் செல்லும் ஒருவர் திடீரென்று ஏற்பட்ட ஒரு ஆபத்தில் விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்கி கூப்பிடுவாரானால் அங்கு தேவன் உடனடியாக நொடிப்பொழுதில் தாமதியாமல் அற்புதம் செய்வார், அது ஒருவகையான பதிலாகும். ஆனால் அநேக நேரங்களில் நாம் ஜெபிக்கும் காரியத்திற்கு பதில் தரும் முன். தேவன் நம்மை தமது அநாதி தீர்மானத்தின்படி சீர்ப்படுத்துகிறார், அதாவது தடுப்பு சுவராய் எழும்பி நிற்கிற நம்முடைய பாவங்கள், அக்கிரமங்களை நாம் அறிக்கையிட செய்கிறார், நாம் திருத்திக் கொள்ள வேண்டிய காரியங்களை உணர்த்துகிறார். . நம்மை முழுமையும் ஆண்டவருடைய பாதத்தில் அர்ப்பணிக்க வைக்கிறார். அநேக பொருத்தனைகளையும், தீர்மானங்களையும் எடுக்கச் செய்கிறார். மொத்தத்தில் நம்மை உலைக்களத்தில் போட்டுக் கசடு நீங்க புடமிடுகிறார். பொன்னாக விளங்கியதும் தமது அற்புத கிரியையை வெளிப்படுத்துகிறார். ஆம், அவர் ஒவ்வொன்றிற்கும் ஒரு வேளை வைத்திருக்கிறார். எல்லா காரியத்திற்கும் ஜெபித்த மறுநிமிடம் பதில் கிடைக்குமென்றால் ஒரு வாரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்போம். அடுத்தவாரம் பழையபடி போய் விடுவோம். ஆகவே அவருடைய வேளைக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். . பிரியமானவர்களே, தேவன் சகலத்தையும் மட்டுமல்ல, முக்காலத்தையும் அறிந்தவர். நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என நம்முடைய எல்லா காலத்தையும் அறிந்தவர். அவருக்கு எது நமக்கு சிறந்தது என்று தெரியும். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. ஆகவே அவரது பதிலுக்காக காத்திருக்க வேண்டும். ஜெபத்திற்கு பதில் கிடைக்க தாமதம் ஆகுமானால், ஆண்டவர் என் ஜெபத்தை தள்ளிவிட்டாரோ? என் நியாயம் அவருக்கு எட்டாமல் போயிற்றோ? என்று அங்கலாய்த்து சோர்ந்து போகாதிருப்போம். அவருடைய வேளைக்காக காத்திருப்போம். ஆமென் அல்லேலூயா! . உள்ளமதின் பாரங்களை ஊக்கமுடன் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார் . கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் நீங்கிடும் கைவிடா கர்த்தரின் பாமனின் கரங்களை பற்றிக் கொள்வோம் |