மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். - (லூக்கா 2:46). . ஒரு பெற்றோர் தாங்கள் அன்புடன் வளர்த்த எட்டு வயது மகன் திடீரென்று காணாமற் போனதைக் குறித்து மிகவும் கவலைப்பட்டு தேட ஆரம்பித்தார்கள். முதலில் அவனுடைய பள்ளியில் போய் விசாரித்தார்கள். பின் அவனது நண்பர்களின் வீடுகளில் விசாரித்தார்கள், அக்கம் பக்கத்து வீடுகளில் போய் தேடினார்கள். எங்கும் அவன் காணப்படவில்லை. அவர்களுக்கு செய்தி தாள்களில் வரும் செய்திகள் ஞாபகம் வந்தது. பிள்ளையை வேறு மாநிலத்திற்கு எடுத்துக் கொண்டுப் போய் கண்களை தோண்டி அவனை பிச்சை எடுக்க வைப்பார்களோ என்று மிகவும் பயந்தார்கள். . கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மகனின் சத்தம் கேட்டது. ஓடிப் போய் அவனை கட்டி அணைத்துக் கொண்டு 'மகனே எங்களை தவிக்க விட்டு எங்கே போய் விட்டாய்?' என்று கேட்டபோது, 'நான் இங்கேதானே அம்மா வீட்டின் பின்பக்கம் இருக்கும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன்' என்றான். அவனது பெற்றோர் இனி எங்களை இப்படி தவிக்க விடாதே என்று அவனை கட்டி அணைத்தனர். . இயேசுகிறிஸ்துவும் தாம் பன்னிரண்டு வயதாயிருக்கும்போது, எருசலேமுக்கு பெற்றோருடன் பஸ்கா பண்டிகையை கொண்டாடும்படி சென்றிருந்தார். பஸ்கா பண்டிகை முடிந்து எல்லாரும் தங்கள் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லும்போது இயேசுவோ எருசலேமிலே இருந்து விட்டார். பெற்றோருக்கு இது தெரியாது. அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார் என்று நினைத்து கவனிக்காமல் விட்டு விட்டார்கள். . மூன்று நாள் பயணம் வந்தபோது, அவர்களுக்கு தெரிய வந்தது, இயேசுவை காணவில்லை என்று. அவர்கள் அத்தனை பிஸியாக பிள்ளை கூட இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் போய்க் கொண்டிருந்தார்கள். உடனே அவரை தேட ஆரம்பித்தார்கள். முதலாவது அவர்கள் பிரயாணக்காரரின் கூட்டத்தில் இருப்போரோ என்று ஒரு நாள் பயணமாக திரும்ப எருசலேமை நோக்கி வந்து தேடினார்கள். அவர் அங்கு இல்லை. . பின் அவர்கள் உறவின் முறையாரிடத்தில் வந்து, 'இயேசுவை கண்டீர்களா?' என்று விசாரித்தார்கள். அங்கும் அவர் இல்லை. பின் அவர்கள் தங்களோடு கூட சொந்த ஊரிலிருந்து வந்திருந்து அறிமுகமானவர்களிடத்தில் 'இயேசுவை கண்டீர்களா?' என்று கேட்டார்கள். அவர்களும், 'இல்லையே, நாங்கள் பார்க்கவே இல்லையே' என்று கூறினார்கள். . இயேசுவின் பெற்றோர் பதைபதைப்புடன் தேடி தேடி அலுத்துப் போனவர்களாக இயேசு எங்குதான் போயிருப்பாரோ என்று அலைந்து தேடிக் கொண்டே எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். மூன்று நாளைக்கு பிறகு அங்கு தேவாலயத்திலே இயேசு 'போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்' (லூக்கா 2:46-48). ஆம் இயேசுவை தேட வேண்டிய இடத்தில் தேடாமல் வேறு இடங்களிலே தேடினபடியினால் அவரை அவர்கள் கண்டடையவில்லை. . கிறிஸ்துவின் பெற்றோர் அவரை தேவாலயத்தில் கண்டபோது, உடனே ஓடிப்போய் அவரை பிடித்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று வசனம் சொல்கிறது. ஏனெனில் அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். அதைக்கண்ட உடன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பின் தான் தாயார் மரியாள், 'மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்' (லூக்கா 2:48 - 51). 'அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்' என்று பார்க்கிறோம். . பிரியமானவர்களே, நாமும் இயேசு இங்கிருப்பாரோ, அங்கிருப்பாரோ என்று தேடி தேடி அலுத்துப் போனோமோ? இயேசுகிறிஸ்து அக்கம் பக்கத்திலும், பிரயாணப்பட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வோர் மத்தியிலும் தேடி களைத்துப் போய் விட்டோமா? தேவன் எங்கிருக்கிறார்? அவர் தேவ ஆலயத்தில் இருக்கிறார். ஆம், கர்த்தருடைய வீடாகிய தேவாலயத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். ஏனென்றால் 'எங்கே இரண்டு மூன்று பேர் என் நாமத்தினாலே கூடியிருக்கிறீர்களோ அவர்கள் மத்தியில் இருக்கிறேன்' என்றவர் தம்மை தொழுது கொள்ளும் விசுவாசிகளின் மத்தியில் இருக்கிறார். அல்லேலூயா! . 'நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?' (1 கொரிந்தியர் 3:16) என்று வேதம் கூறுகிறது. ஆம், நாமே தேவாலயமாயிருக்கிறோம். நமக்குள்ளே கர்த்தர் வாசம் பண்ணுகிறார். நாம் தேட வேண்டிய இடம், கர்த்தருடைய ஆலயம், மற்றும் நம்முடைய இருதயம்! நம்முடைய இருதயம் தூய்மையாக இருந்தால் கர்த்தர் அங்கு வந்து வாசம் பண்ணுவார். நம் இருதயத்தை பரிசுத்தமாய் பாதுகாக்காமல், கிறிஸ்துவை வேறு எந்த இடத்தில் தேடினாலும் அவர் தென்படமாட்டார். கர்த்தர் தங்கும் அரண்மனையாக நம் இருதயங்களை காத்துக் கொள்வோம். கர்த்தர் அங்கு தங்கி அரசாளட்டும்! கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்து காணப்படும் தேவாலயத்தின் சபைக்கூடுதலை விட்டுவிடாதிருப்போம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா! . தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம் அது தேவாலயம் அது தேவாலயம் . அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம் அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம் இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம் இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம் |