'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. - (ரோமர் 10:9-10). . ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம் போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும் போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை. . எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார். . ஆம், பிரியமானவர்களே, நாம் மேலே சொன்னதுப் போல கர்த்தர் வேதத்திலும், கிறிஸ்துவின் மேலும் அதிகமாக விசுவாசம் வைக்கலாம். எத்தனையோ புற மதத்தினர் இயேசுவை நம்புகின்றனர். ஆனால் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவரை நம்முடைய விசுவாசமும், நம்பிக்கை எல்லாமே வீணாகத்தான் இருக்கும். . அனுதின மன்னாவை தினமும் படித்து, மிகவும் நன்றாக இருக்கிறது என்று எழுதுபவர்கள் அநேகர். ஆனால் படிக்கிற ஒவ்வொருவரும் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன்னாவை படிப்பதும், வேத வார்த்தைகளைப் படிப்பதும் எல்லாமே வீணாக இருக்கும். . எப்படி கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வது? அதற்காக நாம் போய் நம் உடலை வருத்தி, காணிக்கைகளை கொண்டு வந்து அவரது பாதப்படியில் போட வேண்டும் என்கிற அவசியம் சிறிதும் இல்லை. அவரது நாமத்தை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு இரட்சிப்பு இலவசமே! . வேதம் சொல்கிறது, 'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. ஆம், இதுதான் இரட்சிப்பு. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை 'ஆண்டவரே நான் உம்மை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன், என்று வாயினாலே அறிக்கையிட்டு, நீர் என் பாவங்களுக்காக சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன்' என்றும் விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்ததை வாயினால் அறிக்கை செய்யும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். அல்லேலூயா! . கர்த்தரின் வருகை சமீபமாயிருப்பதினால், நாம் எவ்வளவு துரிதமாய் கர்த்தரை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அத்தனை துரிதமாய் ஏற்றுக் கொள்ளவேண்டும். கால தாமதம் செய்வதுக்கூடாது. அந்திக்கிறிஸ்து வருவதற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்து விட்டது. அவன் வருவதற்குள் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நாம் எடுத்துக் கொள்ளும்படியாக நாம் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். 'யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்' (மத்தேயு 11:12). ஆம், பலவந்தமாகவோ, இல்லாமலோ பரலோக ராஜ்யத்திற்கு தயாராகும்படி எச்சரிக்கிறார்கள். நாம் அதைப் பிடித்துக் கொள்வோமானால், நித்திய ஜீவன் நமக்கு உண்டு. . கர்த்தரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். கீழ்க்கண்ட ஜெபத்தை விசுவாசத்தோடு கூறுவோம். பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா! . பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓரிடம் நீ பெற வேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத்தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார் . நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு |