நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய். - (ஏசாயா 43:4). . கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் அனுதின மன்னா குழுவினரின் புத்தாண்டு வாழ்த்துக்களை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த வருடம் முழுவதும் கர்த்தர் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் செய்த எண்ணில்லாத நன்மைகளையும் மட்டற்ற கிருபைகளையும் நினைத்துப் பார்த்து கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறோம். எங்களுக்கு புதுவருட வாழ்த்துக்களை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். . இந்த புது வருடமும் நம் அனைவருக்கும் மிகுந்த ஆசீர்வாதமானதாக, நற்கனி கொடுக்கிற வருடமாக, குடும்பத்திற்கும், சபைக்கும், சமுதாயத்திற்கும் நன்மை நிறைந்த வருடமாக அமையும்படி ஜெபிக்கிறோம். புது வருடத்தின் ஆசீர்வாதங்கள் நம் அனைவரோடும் என்றும் இருப்பதாக. . இந்த புதிய வருடத்தின் வாக்குதத்தமாக, 'நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்' என்று அருமையான வாக்குதத்தத்தை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அல்லேலூயா! . நாம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையாயிருப்போமானால், இந்த உலகத்தில் கர்த்தரால் நாம் கனம் பெறுவோம். . தானியேல் தீர்க்கதரிசி அடிமையாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், 'அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்' (தானியேல் 2:46) என்று வேதத்தில் வாசிக்கிறோம். எப்படி ஒரு அடிமையானவரை ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபதி முகங்குப்புற விழுந்து வணங்க முடியும்? ஏனென்றால் தானியேல் அந்த இராஜாவின் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் சொன்னபடியினால் அவன் ஆச்சரியப்பட்டு அப்படி செய்தான். . தானியேலினால் எப்படி சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொல்ல முடிந்தது? அவர் கர்த்தரோடு இணைந்து இருந்தபடியால், கர்த்தருக்கு மிகவும் பிரியமானவராக இருந்தபடியால் கர்த்தர் தானியேல் கேட்டவுடன் அவருக்கு பதிலைக் கொடுத்தார்.....நாம் தேவனோடு இருப்போமானால், கர்த்தருக்கு பிரியமானவர்களாக இருந்தால் நம்முடைய நிலைமை அடிமையின் வாழ்வைப் போல இருந்தாலும், தேவன் ஏற்ற வேளையிலே நம்மை உயர்த்தி, இராஜாக்களும் நம்முன் விழுந்து பணியும்படி செய்வார்! அல்லேலூயா! . 'மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்' (நீதிமொழிகள் 29:23) என்று வேதம் கூறுகிறது. நம்மிடம் வெளிப்படையான தாழ்மை அல்ல, மனத்தாழ்மையுள்ளவர்களாக, கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துகிறவர்களாக, அவர் காணும்போது நாம் தாழ்மையுள்ளவர்களாக இருக்கும்போது அவர் நம்மை கனம் பண்ணுகிறார். வேதம் கூறவில்லையா? 'தாழ்மையுள்ளவனுக்கு அவர் கிருபை அளிக்கிறார்' என்று! கர்த்தர் நம்மை எந்த நிலையில் உயர்த்தும்போதும் நாம் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருப்போம். அப்போது தேவன் நம்மை மற்றவர்களுக்கு முன்பாக இன்னும் அதிகமாக கனம் பண்ணுவார். . இன்னும் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்களை கர்த்தர் கனம் பண்ணுவார் (யோவான் 12:26) கர்த்தரை கனம் பண்ணுகிறவர்களை கர்த்தர் கனம் பண்ணுவார் (1சாமுவேல்2:30) என்று இன்னும் எத்தனையோ காரியங்ளை சொல்லிக் கொண்டே போகலாம். . ஒருமுறை இராஜாவாகிய அகாஸ்வேரு 'ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்னசெய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து, ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்' (எஸ்தர் 6:6-9) என்று வேதத்தில் வாசிக்கிறோம். . ஆமான் இராஜா தன்னைத்தவிர யாரை கனம் பண்ணப்போகிறார் என்று இந்த காரியங்ளை சொன்னான். இந்த உலகத்திலும் கர்த்தர் அற்ற மற்றவர்கள் தங்களுக்குத்தான் கனம் வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டு காரியங்களை செய்கிறார்கள். 'ஆனால் அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்' (எஸ்தர் 6:10) என்று சொல்வதைப் பார்க்கிறோம். ஆம் கர்த்தருடைய பிள்ளைகளுக்குத்தான் கனம் மகிமை எல்லாமே! ஒருவேளை மற்றவர்கள் நினைத்துக் கொள்ளலாம், என்னை விட கனம் பெற யார் மேலானவர்கள் என்று! ஆனால் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் அவருடைய பார்வைக்கு அருமையானவர்களாக இருந்தால் நமக்குத்தான் கர்த்தர் அந்த கனத்தை கொடுப்பார்! அல்லேலூயா! . இந்த புதிய வருடத்தில் கர்த்தரால் கனம் பெறுகிறவர்களாக, அவருடைய பார்வைக்கு அருமையானவர்களாக நம் வாழ்க்கை அமையட்டும்;. அப்போது இந்த அருமையான வாக்குதத்தம் நம் வாழ்விலும் ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறும். ஆமென் அல்லேலூயா! . ஜீவத்தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே கனி தந்திட நான் செழித் தோங்கிட கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட . ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் . |