பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். - (மத்தேயு 6:20-21). . பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் புரூசியா என்னும் தேசத்தை ஆண்ட மூன்றாம் பிரடெரிக் வில்லியம் என்னும் மன்னன் தன் நாட்டிற்கு ஷேமத்தை கொடுக்க விரும்பி எத்தனையோ முயற்சிகள் எடுத்தும், போர்கள், பஞ்சத்தின் விளைவாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. . கடைசியில் அவர் தனது நாட்டு பெண்களுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி, அதில் அவர்களிடமிருந்த வெள்ளி, பொன் நகைகளை அரசாங்கத்திற்கு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்படி கொடுப்பவர்களுக்கு, 'நான் கொடுத்த பொன்னிற்கு பதிலாக இரும்பை பெற்றேன்' 1813' என பொறிக்கப்பட்ட, இரும்பில் செய்த ஒரு சிலுவையை கொடுத்தார். . அதை அன்புடன் பெற்றுக் கொண்ட அந்த பெண்கள் பெருமையுடன் அதை அணிந்துக்கொண்டனர். அந்த நாட்களில் பொன் அணிவதைவிட இந்த இரும்பு சிலுவை அணிவதே பெருமையாக எண்ணபட்டது. தங்களது நாட்டிற்காக தாங்கள் தியாகம் செய்தோம் என்ற பெருமையோடு அவர்கள் அதை அணிந்தார்கள். . 'பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை' என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஒரு சிலர் தொடர்ந்து சம்பாதித்து, கிடைக்கும் பணத்தையெல்லாம் தங்க நகைகளை வாங்கி வாங்கி சேர்த்து வைக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு சகோதரி எவ்வளவோ நகை வைத்திருந்தும், காசு கொஞ்சம் கிடைத்தால் போதும் போய் நகை வாங்கி வந்து விடுவார்கள். நகை ஆசை ஒழியவே இல்லை! . இங்கு இத்தனை நகை வாங்கி, பணத்தை சேர்த்து வைத்து என்ன பிரயோஜனம்? அதை பத்திரமாக வைக்கப் படாத பாடுப்படவேண்டும்! சிலர் கஷ்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து வைக்கும்படி பைனான்ஸில் போட்டு வைத்தால் எல்லா பணத்தோடும் ஆள் தப்பி ஓட்டம்! பண ஆசை எந்த மனிதனை விடுகிறது? ஆனால் நாம் பரலோகத்தில் நம் பொக்கிஷங்களை சேர்த்து வைத்தால் அது ஒருபோதும் கெட்டுப் போவதுமில்லை, அங்கு திருடர்கள் திருடுவதுமில்லை. . என்ன பொக்கிஷங்களை நாம் பரலோகத்தில் சேர்த்து வைக்க முடியும்? கிறிஸ்துவே நமக்கு மேலான, உயர்ந்த விலைமதியாத பொக்கிஷமாவார். 'அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது' (கொலோ-2:3). அவரை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது நமது பொக்கிஷமாக கர்த்தர் பரலோகத்தில் இருப்பார். . நாம் கர்த்தருக்காக செய்யும் தியாகங்கள், கர்த்தருடைய பெயரால் செய்யும் தருமங்கள், அவருக்காக தியாகமாய் செய்யும் ஊழியங்கள், அவர் நிமித்தம் படும் பாடுகள் என்று சிறு சிறு காரியங்களுக்கும் தக்க பலனுண்டு. 'சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்' (மத்தேயு 10:42). கர்த்தர் வரும்போது அவைகளுக்கு பலனை கொண்டு வருவார். அவைகள் பரலோகத்தில் ஞாபக புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. . இயேசுகிறிஸ்துவிடம் ஒரு ஐசுவரியமான வாலிபன் வந்து, நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு நியாயப்பிரமாணத்திலுள்ள காரியங்களை சொன்னவுடன், நான் சிறுவயது முதல் அவற்றை செய்கிறேன் என்றான். அப்பொழுது 'இயேசு நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்' (மத்தேயு 19:16-22) வரையுள்ள இந்த வசனங்கள் பரலோகத்தில் நாம் எப்படி பொக்கிஷம் சேர்த்து வைக்க முடியும் என்பதற்கு இயேசுகிறிஸ்து கூறின வார்த்தைகளை விளக்குகிறது. . ஆனால் அந்த ஐசுவரியமுள்ள வாலிபன், பரலோகத்தில் பொக்கிஷம் சேர்த்து வைப்பதைவிட பூலோகத்தில் சேர்த்து வைப்பதையே பெரிதாக எண்ணினான். உலக பொக்கிஷமே அவனுக்கு பெரிதாக தோன்றியது. . பிரியமானவர்களே அநேகருக்கு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைப்பதைவிட பூலோகத்தில் சேர்த்து வைப்பதே பெரிய காரியமாகப்படுகிறது. அதற்காக அவர்கள் இரவும் பகலும் பாடுபட்டு சேர்த்து வைக்கின்றனர். பிற்காலத்திற்காக நாம் சேர்த்து வைப்பது தவறில்லை. ஆனால் அதுவே முக்கிய நோக்கமாக நமக்கு இருக்கக்கூடாது. கர்த்தருக்கு செய்ய வேண்டியதை நாம் செய்யவே வேண்டும். பரலோகத்தில் நமக்கு பொக்கிஷம் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால்தான் நாம் பரலோகத்திற்கு செல்லும்போது அது நமக்கு சுவையுள்ளதாக நமக்கு மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும். . உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்! ஆமென் அல்லேலூயா! . பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ பண ஆசையும் வீணல்லவோ பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே . ஆ ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே . எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் . |