நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன் . - (யோவான் 14:18). . ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்கள் குடும்பம் வித்தியாசமான பின்னணியில் இருந்தபடியால் இருவரின் உறவினரும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கணவன் நல்ல வேலையில் இருந்தார்;. மனைவி இல்லத்தரசியாக வீட்டை கவனித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். மனைவி கணவர் இல்லாமல் எதுவும் வாங்கவோ, செய்யவோ அறியாதவர்கள். எல்லாவற்றிற்கும் கணவரையே எதிர்ப்பார்த்து வாழ்ந்து வந்தார்கள். அந்த நேரத்தில் கணவனுக்கு கூட வேலை செய்கிற ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண்ணை முதல் மனைவியின் சம்மதமோ, விருப்பமோ எதுவுமின்றி திருமணம் செய்து கொண்டான். மனைவிக்கு தெரிந்தபோதோ, என்ன செய்ய முடியும்? இரண்டு பெற்றோர்களின் விருப்பமின்றி நடந்ததால் அவர்களிடமும் போக முடியாத சூழ்நிலை! தனிமையாக்கப்பட்ட அந்த பெண் தன் மூன்று பிள்ளைகளுடன் நிராதரவாக நின்றார். நான் உனக்கு என்றென்றும் துணை என்று வாக்களித்து கைபிடித்த கணவன் ஒரு நாள் மாறி போனான். சரி, கோர்ட் கேஸ் என்று போனால் ஒருவேளை பணம் கிடைக்கலாம். ஆனால் விட்டுப்போன கணவன் திரும்ப கிடைப்பானா? . உலகத்தின் அன்பு ஒரு நாள் மாறிவிடும். யார் நம்மை தாங்குவார்கள் என்று நம்பி கொண்டிருக்கிறோமோ அவர்கள் நம்மை விட்டு விலகி விடலாம், பிள்ளைகள் நம்மை வைத்து காப்பாற்றுவார்கள் என்று நம்பியிருந்த காலம் இப்போது மலை ஏறி கொண்டிருக்கிறது. ஏனெனில் அவர்களுடைய படிப்பிற்கேற்ற வேலை வெளி நாடுகளில் கிடைத்தால், அவர்கள் அதை தேடி போய் விடுவார்கள். கேரளத்தில் பெரிய பெரிய வீடுகள் யாரும் குடியில்லாமல், சும்மா விடப்பட்டு இருக்கிறது. சில வீடுகளில் வயதான பெற்றோர் மாத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பிள்ளைகளெல்லாரும் படித்து, வெளிநாடுகளில் வேலை செய்வதால், பணத்தை அனுப்பி வீடு கட்டுகிறார்கள், ஆனால் அதில் குடியிருப்பவர்கள் தான் யாருமில்லை! . வயதான பெற்றொரும் அன்புக்காக ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் வயதான காலத்தில் அவர்களை தாங்குவார் யாருமில்லை! உலகத்திலே தெய்வங்கள் என்று ஆயிரம் பேரை சொல்லலாம், ஆனால் எந்த தெய்வமும் சொல்லவில்லை, நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று. இயேசுகிறிஸ்து மாத்திரமே சொன்னார், நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று. . எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதையை போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உலகில் எத்தனையோ பேர் இருந்தும் என்மேல் அன்பு செலுத்த யாருமே இல்லை என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்ல, என்னை தேற்ற யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறீகளா? . உங்களை நேசிக்கும் தேவன் ஒருவர் உண்டு. நீங்கள் அவரை காணாவிட்டாலும், நீங்கள் வடிக்கும் கண்ணீரை தம் துருத்தியில் வைத்து, அதற்கு நல்ல பலனை கொடுக்கும் தேவன் ஒருவர் உண்டு. அவர்தான் சொன்னார், நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று. நீங்கள் அவர் மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள். நீங்கள் அவரை பற்றி கொள்ளுங்கள். உலகத்தை பற்றி கொண்டால், உலகம் ஒரு நாள் நம்மை நிச்சயமாய் கைவிடும். உலகத்தார் யாரும் நிலையானவர்கள் அல்ல, ஆனால் இயேசுகிறிஸ்துவோ நேற்றும் இன்றும என்றும் மாறாதவர். நீங்கள் பாசம் வைக்கும் மனிதர் ஒரு நாள் மாறி போகலாம். நீங்கள் நம்பினோர் ஒரு வேளை கைவிடலாம். ஆனால் இயேசுகிறிஸ்து உங்களை கைவிடவே மாட்டார். . ஒரு தாய் தேற்றுவது போல உங்களை அவர் தேற்றுவார். ஒரு பள்ளி மாணவன், தன் வகுப்பில் தோல்வியடைந்தபோது, அதை கேள்விப்பட்ட தகப்பன், 'உன்னை படிக்க வைத்ததற்கு ஒரு கல்லை படிக்க வைத்திருக்கலாம், எவ்வளவு பணம் செலவு' என்று மிகவும் சத்தமிட்டார். அதைகேட்ட மாணவன் கண்களில் கண்ணீர் வந்தது, தான் எதற்கும் பிரயோஜனமில்லையோ என்று. மனம் விட்டு அழுது கொண்டு இருந்தபோது, அவனுடைய தாய் அவன் அருகில் அமர்ந்து, மார்பில் சேர்த்தணைத்து, அவன் தலையை கோதிவிட்டு, 'மகனே, இ;நத வகுப்பில் தோல்வியடைந்து விட்டாய் என்று கவலைப்படாதே, நன்கு படிக்கும் மாணவர்கள் சிலவேளைகளில் தோல்வி அடைவது சகஜம். நீ கவலைப்படாதே, அடுத்து முறை உன் அப்பா வியக்கும் வண்ணம் நீ மார்க்கு எடுத்து பாஸ் செய்ய வேண்டும்' என்று அன்போடு கூறினபோது, அந்த மாணவன், தன் கண்ணீரை துடைத்து, இனிமேல் நன்கு படிப்பேன் என்று மனதில் உறுதி எடுத்தான். . நீங்களும் உங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன் என்று மனம் வருந்தி கொண்டிருக்கிறீர்களா? இயேசு உங்கள் பக்கத்தில் அமர்ந்து, உங்கள் கண்ணீரை துடைத்து, 'மகனே, தோற்றுவிட்டேன் என்று வருத்தப்படாதே, திரும்ப எழுந்து நில், ஆனால் திரும்ப இந்த பாவத்தில் விழுந்து பாவம் செய்யாதே', என்று ஒரு தாயைப் போல ஆற்றி தேற்றி அரவணைப்பார். 'இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்' என்றவர் நம்மோடு கூட என்றென்றும் இருப்பார். நீங்கள் அனாதை இல்லை, நீங்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இயேசுகிறிஸ்து உங்களை திக்கற்றவர்களாக விடவே மாட்டார். உங்களை ஒரு நாளும் கைவிடவே மாட்டார். ஆமென் அல்லேலூயா! . பாசம் வைத்தேன் மனிதர்கள் மேலே மோசம் செய்தனரே - அதை வேஷம் என்று அறிந்தபோது நான் வெம்பி துடிதுடித்தேன் . கர்த்தர் நீர் வந்தீர் கரம் பிடித்தீர் கலங்காதே என் மகனே என்றணைத்தீர் என்னை கலங்காதே என் மகளே என்றணைத்தீர் . இருப்பவராக இருப்பவரே என்றும் மாறாத என் தெய்வமே . |